(Reading time: 21 - 42 minutes)
Irulum oliyum
Irulum oliyum

செலவழிப்பவள், அந்தப் பெண். தபால்காரர், குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் கடிதங்களைப் படித்துக் காட்டி, இப்போது, துறைமுகத்தில் மூட்டை சுமக்கும் கந்தசாமி, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் ஆறுமுகம், கோணி தைக்கும் அருணாசலம், சுக்குகாபி விற்கும் சுந்தரம், பீடி சுற்றும் மாரியம்மாள் முதலியோரின் குடும்ப விவரங்கள் அவளுக்கு அத்துபடியாகிவிட்டது. முதலில் பள்ளிக்கூடம் போகும் தம்பிக்கு, பாடம் சொல்லிக் கொடுத்த போது, சிம்மாட்டுடன் வந்த ராக்கம்மா, “எங்களுக்கும் கையெழுத்துப் போடயாவது சொல்லிக் கொடும்மா” என்றாள்.

அன்றே, ஒரு போர்டில்லாத முதியோர் கல்வித் திட்டம் துவங்கியது. பல பெண்கள், அவளைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு, ‘ஆனா ஆவன்னாஎழுதத் துவங்கினார்கள். கணவன்மார்களை நச்சரித்து, சிலேட்டு, ‘பல்பங்களை’ வாங்கிக் கொண்டார்கள். மத்தியானம் பானையில் இருப்பது வயிற்றுக்குள் போனதும், மல்லிகாவின் மூளைக்குள் இருப்பது, அவர்களின் செவிக்குள் போகத் துவங்கியது.

எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்திலேயே கூடிக் கொள்ளும் குடித்தனக்காரர்களையும், குடித்து விட்டு உதைக்கும் ஆம்புடையான்களுக்கு கால் பிடித்து விடும் பெண்களையும் பார்க்கப் பார்க்க, அவளுக்கு புதியதோர் உலகைக் கண்டுவிட்ட உவகை ஏற்படத் துவங்கியது. ஆனால், இந்த ‘வீட்டுக்கார அம்மாவின்’ போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில், மல்லிகாவை மாடிக்கு வரவழைத்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாள், மல்லிகாவிற்கு ஒரு ஆர்லிக்சைக் கலந்து கொடுத்துக் கொண்டே, “இந்த வீட்டுல இருக்கறது எல்லாம் பீடைங்க. அதுங்ககிட்ட எதையும் வச்சுக்காதே” என்றாள. ஆனால் மறுநாளே, மல்லிகா அந்த பீடைங்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதைப் பார்த்ததும், அவள், மல்லிகாவுடன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். அப்புறம் அவளைப் பார்த்து, முணுமுணுக்கத் துவங்கினாள். எதிர்க்கேள்வி போட முடியாத முணுமுணுப்பு. தான் ஒருத்தி தான் பெண் என்கிற அகங்கார முணுமுணுப்பு. இது போதாதென்று, அவள் தம்பி ஒருவன் பெயர் ரமணனாம். இருபத்தோறு வயது முண்டம். ‘டுட்டோரியல்’ காலேஜில் படிக்கிறானாம். மாடியில் நின்று கொண்டே, மல்லிகாவைப் பார்த்த பார்வை, பாதகப் பார்வை. வயதுக்கேற்ற பார்வை என்றால் தொலைந்து போகிறான் என்று விட்டுவிடலாம். மல்லிகா கூட விட்டிருப்பாள். ஆனால், அவன் பார்வையோ, அவள் குடியிருக்கும் வீடு எப்படிச் சொந்தமோ அது போல் அவளும் தனக்குச் சொந்தம் என்பது போல் பார்க்கும் பழைய காலத்து ஜமீன் பார்வை. அற்பத்தனமான அவனது உரிமைப் பார்வையையும், அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அன்றும் அப்படித்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.