(Reading time: 21 - 42 minutes)
Irulum oliyum
Irulum oliyum

‘அந்தப் பயல், பகவத்கீதையைப் பற்றி எழுதியிருக்கவா போகிறான்?’ என்று நினைத்து, அவன் என்ன எழுதியிருப்பான் என்பதை அனுமானித்து, அவன் வீட்டுக்குள் வந்ததும், எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி, அவனைக் கிழித்துப் போட வேண்டும் என்று நினைத்தாள். அவனை, பாதி காயாத சாயவரட்டிகளாலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன், தனக்கு கடிதம் எழுதியிருக்கிறான் என்பதை விட, கஷ்டப்படுகிற ஒரு பெண், பணக்காரப் பையன் கூப்பிட்டால் போய்விடுவான் என்பது போல் அவன் நினைக்கிறான் என்று உணர உணர, அவள் ஒரு பத்ரகாளியாகிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் தனக்கு இவ்வளவு கோபம் இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டு அசந்து போனாள்.

அந்தச் சமயத்தில், அவள் தந்தை பெருமாள் வந்தார்.

“என்னம்மா இங்கே நிற்கே? இன்னைக்கு வியாபாரத்துக்குப் போன இடத்துல, ஒரு பயல் என்கிட்ட கேட்காமலே என் கோணி மூட்டையை பஸ்ல ஏத்திட்டான். கோபத்துல லேசாத்தான் ஒரு தட்டு தட்டுனேன். ஒரு பல்லு கீழே விழுந்துட்டுது. கழுதைப் பயலுக்கு, நான் அடிக்கு முன்னாலேயே பல்லு ஆடிக்கிட்டு இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தச் சமயம் பார்த்து, ஒரு போலீஸ்காரன் ஓடி வந்தான். கோணிக் கட்டை அப்படியே போட்டுட்டு, எங்கெல்லாமோ ஓடி, எதிர்ல வந்த பஸ்ல ஏறி எப்படியோ வந்துட்டேன். கடைசில, அவனுக்கு, பல் டாக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்காத அளவுக்கு லாபம். எனக்கு நூறு ரூபாய் கோணி நஷ்டம். காலத்தைப் பாரு. நாம எட்டடி பாய்ந்தால், நம்ம தரித்திரம் பத்தடி பாயுது. ரேசுக்குப் போகும் போது கூட இப்படி நஷ்டம் வரல” என்றார்.

ஒரு குழந்தை, பள்ளியில் நடப்பதை அம்மாவிடம் சொல்வது போல், தன்னிடம் சொல்வதைக் கேட்டு, அவர் நூறு ரூபாய் நஷ்டப்பட்டதற்காக ஆறுதல் சொல்வதா அல்லது ரமணன் பயல் கொடுத்த கடிதத்தைக் காட்டி, ஆறுதல் பெறுவதா என்பது புரியாமல், அவள் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தாள்.

‘வேண்டாம். இந்த லெட்டரை பெரிசாக்க வேண்டாம். அப்பா அவனை கொலை பண்ணினாலும் பண்ணிடுவார். அதோடு எதிர்வீட்ல இருக்கவங்க, “இவள் வாங்காமலா அவன் கொடுப்பான்னு” கூட கூசாமல் சொல்லலாம். விஷயத்தை அப்படியே விட்டு அவன் மேலும் மேலும் எழுதினால் அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்.’

மல்லிகா கைக்குள் கசங்கியிருந்த கடிதத்தை, அப்பாவுக்குத் தெரியாமல் இடுப்பில் வைத்து, ஒரு கையால் அதைப் பிடித்து, மறு கையால் அதைக் கிழித்து, பிறகு இரண்டு கரங்களையும் பின்னால் வளைத்து, முதுகுப் பக்கமாகக் கொண்டு போய், கிழிசல்களை மேலும் கிழித்து, கிழே போட்டுவிட்டு, அப்பாவிற்குப் பின்னாலேயே வீட்டிற்குப் போனாள்.

இரவு ஏறிக் கொண்டே இருந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.