(Reading time: 21 - 42 minutes)
Irulum oliyum
Irulum oliyum

தவித்தாள். அப்பா அனுமதி கொடுப்பார் என்ற தைரியத்தில், அதிகாலையிலேயே குளித்தாள். அக்காளின் கல்யாணப் புடவையை வாங்கிக் கட்டிக் கொண்டாள். தம்பியின் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

பெருமாள் எழுந்தார். ‘டீ’ குடித்தார். சிகரெட் பிடித்தார். மல்லிகா பக்குவமாகச் சொல்வதாக நினைத்து, படபடவென்று பேசினாள்.

“அப்பா, காலேஜுக்குத்தான் போக முடியாமல் போச்சு. அங்கே போய் என்னோட பி.யூ.சி. சர்டிபிகேட்டையும், டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்து விடுகிறேன். அப்பா லட்டர் கொடுத்தால் தான் பிரின்ஸ்பால் சர்டிபிகேட் கொடுப்பார். அதனால், அப்பா கிட்ட போய் ஒரு லட்டரை வாங்கிட்டு உடனே - உடனேயே புறப்பட்டு காலேஜில் போய் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்துடுறேன். பி.யூ.சி.யில் முதல் வகுப்பில் வந்த சர்டிபிகேட் என்கிட்ட இருந்தால் எப்போதாவது பிரயோஜனப்படும் இல்லியாப்பா?”

பெருமாள், மகளையே பார்த்தார். சரஸ்வதியே அவதாரம் எடுத்திருபப்து போன்ற தோற்றம். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியவன், அந்த ‘அற்பப் பயல்’ வீட்டிலிருந்தால் பி.ஏ. முடிச்சிட்டு, எம்.ஏ. படித்துவிட்டு கலெக்டரா கூட போயிருப்பாள். முதல் வகுப்பு வாங்கியவள், முதல் வகுப்பு மட்டும் படித்த சொந்த அப்பன் கிட்ட வந்ததால் படிப்பு சொந்தமில்லாமல் போயிட்டுது. ஏன், நான் அவளைப் படிக்க வைத்தாலென்ன? அது எப்படி முடியும்? அதுல வேற ஒரு மாசம் ஆயிட்டுதே. இந்த கோணிக்கட்டு போனதுக்கே நான் இவ்வளவு வருத்தப்படுறேனே, அவள் கண்முன்னால படிப்பு போனதுக்கு எவ்வளவு வருத்தப்படுவாள்? அப்பனுக்கும் மகளுக்கும் எவ்வளவு பொருத்தம். நான் போலீஸ்காரனுக்குப் பயந்து கோணியை விட்டேன். இவள், ராமனுக்குப் பயந்து படிப்பை விட்டாள். கண்முன்னாலேயே, இரண்டு பேரும் கண்ணாய் நினைத்ததை கைவிட்டு விட்டோம். கோட்டை கட்டி ஆள வேண்டிய என் மகள், படிப்பையே ’கோட்டை’ விட்டுட்டாள்! எப்படி இருந்த மகள். எப்படி இருந்த என் ராசாத்தி. என்னோட ரேஸ் பைத்தியத்தால் அவளுக்கு உதவ முடியாமல் ஆயிட்டு. கடவுளே நீ பயங்கரமான ஜாக்கிடா, உன்னை நம்பி வாழ்க்கைக் குதிரையில் பந்தயம் வைக்க முடியாது.

கணவன், மகளை அனுப்பி வைக்கத் தயங்குவதாக நினைத்து, செல்லம்மா “ஒரு மாதமாய் அடைந்து கிடக்காள். போயிட்டு வரட்டும்” என்றாள்.

பெருமாள், மனைவி சொல்வதை மவுனமாகக் கேட்டுவிட்டு, பிறகு, “உன் இஷ்டம். போகணுமுன்னால் போயிட்டு வா. ஆனால் அந்த ‘அற்பன்’ கிட்ட அதிக நேரம் பேசாதே. அதுக்காக பேசாமலும் வந்துடாதே. ஆயிரந்தான் இருந்தாலும், அவன் உன்னை வளர்த்தவன். கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போன பயல். ஆனால் ஒண்ணு... நீதான் அவனுக்கு எதையாவது வாங்கிட்டுப் போகணுமே தவிர, அவன் கொடுக்கிற எதையும் வாங்கப்படாது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.