Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 14 - சரோஜா ராமமூர்த்தி
1.14. அன்னையும் ஆண்டவனும்
மல்லிகை மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு முகம் வெளிறிட அவள் நின்ற காட்சி பழைய சித்திரம் ஒன்றை நினைவூட்டியது அவன் மனத்தில். ’என் வீட்டுக்குள் உத்தரவில்லாமல் ஏன் வந்தாய்? வெளியே போய் விடு' என்று சொல்ல வேண்டும் போல் பவானி திணறினாள். ஆனால், கலவரத்தால் வார்த்தைகள் தொண்டைக்-குள்ளேயே புதைந்து போயின. கலவரமும் குழப்பமும் போட்டியிட அவள் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் வெகுண்டு எழாமல் மௌனியாக நின்றது மூர்த்திக்கு அதிகமான துணிச்சலை ஏற்படுத்தியது. அவன் நிதானமாக பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு ”பாருங்கள் மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். பாலுவை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க வெண்டும். அவ்வளவு தானே? அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்" என்று நாடக பாணியில் தலையைத் தாழ்த்தித் தன் பணிவைத் தெரிவித்துக் கொண்டான்.
பவானிக்குச் சற்றுத் தைரியம் வந்தது. "சே! சே! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?" என்றாள் பவானி, தன் கையில் இருந்த மாலையைப் பார்த்துக் கொண்டே.
மாலையிலிருந்த அரும்புகள் யாவும் மலர்ந்து 'கம்' மென்று மணம் வீசிக் கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்தால் இத்தனை நேரம் அதைப் படத்துக்குப் போட்டிருப்பாள் அவள். சட்டென்று அவள் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டால் ஒரு வேளை போய் விடக்கூடும் என்று தோன்றவே, அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டில் வெற்றிலைப் பாக்குப் பழம், கற்பூரத்தை எடுத்து வைத்தாள்.
பெஞ்சியில் உட்கார்ந்திருக்கும் தன்னை அவள் லட்சியம் பண்ணின மாதிரியாகவே காட்டிக் கொள்ள வில்லையே என்று மூர்த்தி மனத்துள் குமைந்தான். அவளோடு மறுபடியும் பேச்சை எப்படி தொடங்குவது என்று புரியாமல் திகைத்தான்.