(Reading time: 5 - 9 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 15 - சரோஜா ராமமூர்த்தி

1.15. குற்றமுள்ள நெஞ்சு

  

குற்றம் செய்தவனுடைய நெஞ்சிலே நிறைந்து இருக்கும் பயமானது ஒருவித விசித்திரத் தன்மையுடையது. ஒவ்வொரு நிமிஷமும் அது அவனை ’நீ ஒரு குற்றவாளி' என்று எச்சரித்துக் கொண்டே இருக்கும். நல்லதையோ கெடுதலையோ செய்யும்படித் தூண்டுவது பானம்தான். எச்சரிப்பதும் மனமேதான்.

  

பார்வதியும் கோவிலுக்குப் போன பிறகு மூர்த்தி திறந்த கொல்லைக் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தான். பிராகாரத்தை அவர்கள் சுற்றி வரும் போது, திருடனைப் போல பெரிய கல்தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பவானியையும் பார்வதியையும் கவனித்தான். எதிர்பார்த்தது என்ன? பார்வதியைப் பவானி கோவிலில் சந்தித்தால் தனியாக ஒரு இடம் தேடிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து பார்வதியிடம் மூர்த்தியைப் பற்றிச் சொல்லி அழுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால், ஒன்றுமே நடவாதது போல் பவானி அமைதியாக ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

  

பவானியும் பார்வதியும் வீடு திரும்பும் போது இரவு ஏழரை மணி இருக்கும். கல்யாணராமன் பவானியின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாலுவுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு முன்பே மூர்த்தி வேறொரு சந்தில் புகுந்து, அங்கே வந்து பாலுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால், கல்யாணம் சில கதைகளைப் பாலுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

  

காந்தி மகாத்மா சிறு பையனாக இருந்தபோது தான் மாமிசம் சாப்பிட்டால் உடம்பு வலுவாகி வெள்ளைக் காரர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம் என்று நினைத்து ரகசியமாகத் தன் நண்பனுடன் மாமிசம் சாப்பிட்டார். ஆனால் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் அவர் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்கவில்லை. எத்தனையோ இரவுகள் இதைப்பற்றி நினைத்துக் கொண்டு தூங்கவே மாட்டாராம்" என்றார் கல்யாணம்.

  

அப்படியானால் கெட்ட காரியங்களையும், மனசுக்குப் பிடிக்காதவைகளையும் செய்தால் தூக்கம் வராதா மாமா?" என்று கேட்டான் பாலு.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.