(Reading time: 8 - 16 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 13 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 13 -- மலைப் பாதை

  

ராமப்பட்டணத்திலிருந்து ஏல மலையின் உச்சி இருபது மைல் தூரம் தான். மொத்தம் மூவாயிரத்து ஐந்நூறு அடி உயரம் தான். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாரின் ஹிமகிரி காப்பி எஸ்டேட் இன்னும் கிட்டத்திலேயே மூவாயிரத்து இருநூறு அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த எஸ்டேட்டை நோக்கிக் கல்யாணம் உற்சாகமாகக் காரோட்டிப் போய்க் கொண்டிருந்தான்.

  

சாலையின் இருபுறமும் காப்பிச் செடிகளில் வேணி தொடுத்தாற் போல் வெண்மை நிறத்தில் காப்பிப் பூக்கள் மலர்ந்திருந்தன. காலைச் சூரியனின் ஒளியில் வெள்ளித் தகடுகளாக ஸில்வர் ஓக் மரங்களின் இலைகள் தகதகத்து மலையமாருதத்தில் சலசலத்தன. அவை காப்பிச் செடிகளுக்கு நிழல் கொடுத்தன. ஆனால் குடை விரிந்தாற்போன்று சூரிய ஒளியை மறைத்து விடாமல் தேவையான அளவில் வடிகட்டிக் கொடுத்தன. இப்படி ஒரு தாயின் பரிவுடன் காப்பிச் செடிகளைக் கவனித்துக் கொள்ளும் பணியைக் காப்பித் தோட்டங்களின் இதர சில பகுதிகளில் ஆரஞ்சு, பேரி, கொய்யா போன்ற வேறு சில மரங்கள் செய்து பழங்களும் ஈந்து கொண்டிருந்தன. உயரமான மரங்களில் உருவாகியிருந்த தேன் கூடுகளின் மணமும் பல்வேறு மலர்களின் நறுமணங்களும் பட்சி ஜாலங்களின் இனிய கானங்களும் காற்றில் கலந்து வந்து மலை வாசஸ்தலம் உடலுக்குத் தந்த குளுகுளுப்புடன் மனத்துக்குக் கிளுகிளுப்பையும் ஊட்டின.

  

கல்யாணம் அடிக்கடி பார்த்துப் பழகிய காட்சிகள்தாம் இவை என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதுப்புது குதூகல உணர்வுகளை அவன் அடைவது வழக்கம். இன்றோ இந்த எழிலையெல்லாம் தன்னுடன் சேர்ந்து பவானியும் அனுபவிக்கிறாள் என்ற எண்ணமானது அவனை எங்கோ சொர்க்க வானில் உயரே உயரே கொண்டு சென்றது! அந்த அளப்பரிய ஆனந்தத்தைக் காரின் பின் ஸீட்டில் பவானியின் மாமா குணசேகரன் உட்கார்ந்திருக்கிறார் என்ற நினைப்பு கூடக் குறைத்துவிடவில்லை.

  

குணசேகரன், "பவானி! இத்தனை வருஷமா நான் ராமப் பட்டணத்தில்தானே இருக்கேன். இவ்வளவு அழகான மலைகளும் நந்தவனங்களும் இங்கே இருப்பதை அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கிறேன்! கல்கத்தாவிலிருந்து நீ வந்து அழைத்துப் போய்க் காட்டுகிறாய்!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.