(Reading time: 7 - 13 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 14 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 14 -- ஹிமகிரி எஸ்டேட்

  

லமலையில் கோபாலகிருஷ்ண முதலியாரின் எஸ்டேட் பங்களா மிகவும் வசதியாக இருந்தது. சாப்பாட்டுக் கூடம் தவிர, இரண்டு மூன்று பெரிய அறைகள், பங்களாவைச் சுற்றிப் பெரிய தோட்டம் எல்லாம் இருந்தன.

  

கையோடு டிபன் காரியரில் கொண்டு வந்திருந்த இட்டிலி தோசைகளையெல்லாம் ஒரு கை பார்த்து விட்டுக் குணசேகரன் கட்டிலில் கட்டையைக் கிடத்திக் குறட்டைவிடத் தொடங்கி விட்டார். உண்ட மயக்கம்.

  

கல்யாணம் எஸ்டேட் விவகாரங்களில் மூழ்கி மேஸ்திரிகள் மூன்று நான்கு பேர்களை விசாரிப்பதும் கட்டளைகள் இடுவதும் கணக்குப் பார்ப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.

  

பவானி தோட்டத்தில் மெள்ள வளைய வந்தாள். அதில் ஒரு பக்கமாகக் கல்யாணத்தின் 'டப்பா' கார் நின்றது. 'இது இத்தனை உயரம் ஏறி வந்ததே அதிசயம்தான்' என்று எண்ணினாள் பவானி. 'இவ்வளவு பெரிய எஸ்டேட்டுக்கும் பங்களாவுக்கும் சொந்தம் கொண்டாடுகிற செல்வந்தர்கள் அந்தப் பழைய மாடல் காரை விற்க மனமின்றி வைத்திருப்பது விசித்திரம் தான். உயிரற்ற பொருள்களிடம் கூட நாளடைவில் சில சமயம் பாசம் வளர்ந்து விடும் போலும். ஜடப் பொருள்களிடம் கூட அன்பு செலுத் தும் கல்யாணமா அடியாட்கள் அனுப்பிக் கையைக் காலை முறித்துவிடுவதாக மாஜிஸ்டிரேட் கோவர்த்தனனை மிரட்டி யிருப்பார்? நம்பவே முடியவில்லையே! என்றாலும் காதல் கீதல் என்று அசட்டுத்தனமாக ஏதாவது எண்ணிக் கொண்டால் சில அபத்தக் காரியங்களையும் அதன் விளைவாகச் செய்யலாம்தான். யோசித்தபடியே நடந்து தோட்டத்தைக் கடந்து பிரதான சாலைக்கு வந்துவிட்ட பவானி திரும்பிப் பங்களாவை நோக்கினாள். கல்யாணம் காரியங்களை முடித்துக் கொண்டுபடி இறங்கித் தன்னை இங்குமங்கும் திரும்பித் தேடுவதைக் கண்டாள். அவன் பார்வையில் படுமாறு நின்று கரம் அசைத்தாள். பங்களா வாசலில் நின்ற காரைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவன் இவளை நோக்கி நடந்தான். எப்படியோ இரண்டு மூன்று தடவை குளிர்ந்த நீரைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட அது, கடமை முடிந்த திருப்தியுடன் நிற்பதாகத் தோன்றியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.