(Reading time: 6 - 11 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 49 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

   

அத்தியாயம் 49. -- தப்பியோடிய கைதி.

  

'மக்குத் துன்பம் நேரும்போதெல்லம் நம்மைவிட அதிகத் துயரத்தில் ஆழ்ந்திருப்போரைப் பற்றிச் சில கணங்கள் நினைத்துப் பார்த்தால் போதும், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது உடனே புரியும். இவ்விதம் எண்ணாமல் நமது துயரம்தான் உலகிலேயே மிகப் பெரிது என்பதாகக் கருதிக் கொண்டு அதைப் பொறுக்கவோ சகிக்கவோ திராணியின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முற்படுவது எவ்வளவு அபத்தம்?' - வேதனையுடன் முனகிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்ததும் இவ்வாறு நினைத்தாள் கமலா.

  

அவன் அருகில் அமர்ந்து. "நீ யார்? எப்படி இவ்வளவு பலமான காயம் பட்டது உனக்கு? ஒரு டாக்டரைத் தேடிப் போகாமல் ஏன் இங்கே முனகியபடி படுத்திருக்கிறாய்?" என்றெல்லாம் வினவினாள்.

  

"நீ யார்? அதை முதலில் சொல்லு" என்றான் அந்த வாலிபன் ஈனசுவரத்தில். "உன்னை நான் நம்பலாமா என்பது முதலில் எனக்குத் தெரிய வேண்டும்."

  

"பேஷாக நம்பலாம். ஏனென்றால் நானும் உன்னைப் போல் மரணத்தின் வாயிலில் நிற்பவள்தான். அதோ அந்த மொட்டைப் பாறையிலிருந்து பள்ளத்தாக்கில் குதிக்கவிருந்த என்னை உன்னுடைய முனகல் சத்தம் தான் தடுத்து நிறுத்தியது!"

  

எதுற்காக அப்படி ஒரு கோரமான முடிவைத் தேடிக்கொள்ள எண்ணினாய், பெண்ணே?"

  

"எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது!"

  

அவன் வேதனையையும் மறந்து புன்னகை புரிந்தான். "வாழ்க்கையில் வெறுப்பா? அப்படி என்ன பெரிதாகத் துன்பம் அனுபவித்துவிட்டாய் நீ? இதோ, என்னைப் பார்! நாலு வருஷங்கள் சிறைக் கைதியாகப் படாத பாடுபட்டேன். சுதந்திர ஆர்வத்தால் தப்பிக்கொண்டும் வந்தேன். சதா ஸி. ஐ. டி. களால் பின் தொடரப்பட்டு ஓடுகிறேன். இதைவிட உன் துன்பங்கள் பெரிதா? என் தோளில் ஒரு ஸி.ஐ.டி.யின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அடிபட்டு ரத்தமிழந்து தவிக்கும் போதும்கூட எனக்கு உயிரின் மேல் ஆசை விடவில்லையே!"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.