(Reading time: 5 - 9 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 55 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

   

அத்தியாயம் 55 -- யாரை நம்புவது?

  

ண்மதி விரித்த வெள்ளி நிலவு. இரவுக் கன்னிக்கு இதமளிக்கவென்று வீசிய தென்றல் காற்று. மொட்டை மாடியில் உமாகாந்தனும் பவானியும் அவள் மாமா குணசேகரனும் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள். பவானி ரொம்ப உற்சாகமாக இருந்தாள். உமாகாந்த் இவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட ஆரம்பிப்பான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. டாக்டர் கொடுத்த நல்ல மருந்து உமாகாந்தின் இயற்கையான திடகாத்திரமான தேக வாகு, பவானியின் பணிவிடை எல்லாம் சேர்ந்து அவனைத் துரிதமாக உடல்தேற வைத்தன. முகம் மட்டும் சற்றே வெளிறியிருந்தாலும் அவன் வதனத்தில் அவள் முன்பு பார்த்துத் தன் மனத்தைப் பறி கொடுத்திருந்த ஜீவ களை திரும்பியிருந்தது.

  

"பவானி! ஏதாவது பாடேன்" என்றார் மாமா குணசேகரன். அப்படி ஓர் அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல் உடனே மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தாள் பவானி.

  

அந்தத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் வாசம் புரிந்த குயில் ஏற்கனவே பகலெனக் காய்ந்த வெண்மதியால் குழப்பம் அடைந்திருந்தது. இப்போது பவானியின் இனிய சாரீரம் ஒலிக்கவே, தன் இனத்தைச் சேர்ந்த சகாக்கள் விடிந்து கூவுவதாக எண்ணி அதுவும் பதிலுக்கு குரலெடுத்துப் பாட ஆரம்பித்தது.

  

பாட்டு முடிந்ததும் உமாகாந்தன் நெடுமூச் செறிந்தான்.

  

"களைப்பாக இருக்கிறதா? பால் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளலாமே" என்றாள் பவானி.

  

"இருந்த கொஞ்சநஞ்ச சோர்வையும் உன் பாட்டு போக்கிவிட்டது பவானி. ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆனந்த வாழ்க்கை எனக்குக் கிட்டப் போகிறது என்று எண்ணியபோது தான் ஏக்கத்தில் பெருமூச்சு பிறந்தது. என் உடம்பு குணமாகிவிட்டது. பவானி, உன்னிடமும் உன் மாமாவிடமும் நான் விடைபெற வேண்டிய தருணம் வந்து விட்டது!"

  

"இது என்ன அசட்டுத்தனம்?" என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள் பவானி.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.