(Reading time: 9 - 18 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 56 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

   

அத்தியாயம் 56 கைதியின் கதை

  

காலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் கருணாகரனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சட்டப் படிப்பு முடித்துக் கொண்டு உத்தியோகம் ஏற்கும் நிலையில் இருந்தான். இளைய பையன் உமாகாந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் தேசபக்தி மிக்கவன். இரண்டொரு முறை மறியல் செய்து தடியடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வந்தான். இன்னும் சிறை செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

  

'பிள்ளை இப்படி நடந்து கொள்கிறானே, நாளைக்கு இவன் சிறைக்குப் போகும்படி நேர்ந்தால் என்ன செய்வது?' என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன். அவன் சிறை சென்றால் அது தனக்குப் பெரிய அவமானம் என்று நினைத்தார். 'ஆனமட்டும், "மறியல், போராட்டம் இதெல்லாம் வேண்டாம். சிரத்தையாகப் படித்துத் தேறி நல்ல உத்தியோகத்தில் அமர்கிற வழியைப் பார்" என்று எடுத்துச் சொன்னார். ஆனால் உமாகாந்தன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. சுதந்திரப் போரில் தானும் இயன்றமட்டும் ஈடுபட்டதுடன் புரட்சியாளர் பலருக்கு இரகசியமாக உதவியும் வந்தான்.

  

அவனுடைய இந்தப் போக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கருணாகரனுக்கு இருந்த ஒரே ஆறுதல், மூத்த மகனாவது சமர்த்தா யிருக்கிறானே, சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு நல்ல உத்தியோகத்தில் அமரத்தயாராய் இருக்கிறானே என்பதுதான். உமாகாந்தனை உள்ளத்திலிருந்து ஒதுக்கிக் கோவர்த்தனனை அடிக்கடி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

  

ஆனால் உண்மையில் தமையன் கோவர்த்தனன் கெட்ட சகவாசங்களால் குடிப்பது, பணம் வைத்துச் சீட்டாடுவது போன்ற காரியங்களில் இறங்கி மார்வாரிகளிடம் ஏகமாகக் கடன்பட்டிருந்தான். இது தகப்பனாருக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில், "உடனே கடனைத் திருப்பித் தராவிட்டால் வாரண்டு" என்று மார்வாரி கடைசி எச்சரிக்கை செய்து விட்டான். 'அவன் வீட்டு வாசலுக்கே வந்து ரகளை செய்தால் என்ன நடக்கும்? என்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பா மனமுடைந்து போய் அதிர்ச்சியில் இறந்தே விடுவார். அப்படி ஒருவேளை இந்தச் செய்தி கேட்டு அவர் இதயம் நின்றுபோக வில்லை என்றாலும் ஒரு முழக் கயிறு தேடுவார். அவர் மானஸ்தர். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது?' என்று கோவர்த்தனன் யோசித்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.