பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி இருப்பவர்கள் சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். சந்திரனைப் பொறுத்தவரையில் அது உண்மையாகவே இருந்தது. அவன் மிகச் சுறுசுறுப்பாக இருந்தான்; என் தாய் என்னைப் பார்த்து அடிக்கடி கூறுவது உண்டு. "நீ சோம்பேறி, இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்றும் வரவில்லையே!" என்பார். உடனே நான், "மெய்தான் அம்மா! பழகினால் வராது. நீ சொல்கிறபடி அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழ வேண்டும். அதற்கு வழி இல்லை. ஒன்று, நானாவது அவன் வீட்டுக்குப் போய், அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன் தூங்கி எழுவதற்கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க வேண்டும். அல்லது அவனை இங்கே நம் வீட்டுக்கு வரவழைத்து உறங்கச் செய்து, எனக்குமுன் எழாதபடி செய்ய வேண்டும்" என்று சொல்லிச் சிரிப்பேன்.
என் தாய் சொல்லியபடி உண்மையிலேயே சந்திரனுடைய முகத்தில் தனிக்களை இருந்தது. பால் வடியும முகம் என்பார்களே, அதை சந்திரனிடம் கண்டேன். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் எடுத்த நிழற் படங்களில் சந்திரன் மிக மிக அழகாகத் தோன்றுவான். என் முகமோ, என் பார்வைக்கே அழகாக இருக்காது. அப்போது சந்திரனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். அந்த வயதில் அவனுடைய முகம் ஒரு பெண்ணின் முகம்போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவனுடைய தங்கை கற்பகத்தின் முகத்திற்கும் அவனுடைய முகத்திற்கும் வேறுபாடு தெரியாதபடி அவ்வளவு அழகு அவனுக்கு இருந்தது. இரண்டு ஆண்டு கழித்து மீசை கரிக்கோடு இட்டு வளர்ந்த பிறகுதான், சந்திரனுடைய முகத்தில் மாறுதல் தோன்றியது.
அவன் நிறம் சிவப்பு, என் நிறமோ கறுப்பு. அந்த நிற வேறுபாட்டால் தான் அவன் அழகாகத் தோன்றினான் என்று அப்போதெல்லாம் எண்ணினேன். நாம் போற்றுகிற சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.