சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி - சந்திரனுடைய சிற்றப்பா - தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் கிராமத்தில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில் சிகரெட்டும் வந்து சேர்ந்தது. சாராயத்தோடு மேனாட்டுக் குடிவகைகளும் வந்து சேர்ந்தன. சந்திரனுடைய சின்னம்மா நல்லவர் ; நல்லவராக இருந்து பயன் என்ன? பெண் என்றால் கணவன் சொன்னதைக் கேட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க வேண்டுமே தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது; தன் உரிமையை நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண் கணவன் கெடும்போது தானும் சேர்ந்து கெடுவது தவிர, வேறு வழி இல்லாதவளாக இருக்கிறாள். சந்திரனுடைய சின்னம்மா அப்படித்தான் குடும்பம் கெடுவதைப் பார்த்து, உள்ளம் நொந்து கொண்டிருந்தார். நீந்தத் தெரிந்தும், கைகால்களை மடக்கிக் கொண்டு கிணற்றில் மூழ்குவது போல் இருந்தது அவருடைய நிலைமை. கடைசியில் சிற்றப்பாவின் நிலங்கள் ஏலத்துக்கு வந்தபோது, சந்திரனுடைய தகப்பனாரே ஏலத்தில் எடுத்துக் கடன்காரனை அனுப்பிவிட்ட பிறகு தம்பியின் குடும்பத்துக்கென்று ஐந்து காணி நன்செய் நிலங்களை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றைத் தம் சொத்து ஆக்கிக் கொண்டார். அந்த ஐந்து காணி நிலங்களையும் தம்பியின் பொறுப்பில் விடாமல், தம்பி பெயரில் வைக்காமல், தம்பி மக்கள் இருவர்க்கும் பொதுவாக எழுதி வைத்தார். தம் பொறுப்பில் பயிரிட்டு விளைந்ததை அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். அந்தச் செயலைப் பெருந்தன்மையானது என்று ஊரார் போற்றினார்கள். தம்பி மனைவியோ, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத் தெய்வம் போல் போற்றி அவர் கொடுத்ததைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
தம்பி கெட்டுப் போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம். அந்த எண்ணம் சந்திரனுடைய படிப்புக்கே இடையூறாக நிற்கும் போல் இருந்தது. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரன்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.