திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். "யோகம்" என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். இன்ஸ்பெக்டரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.
"ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்" என்று எழுந்தார்.
"இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்" என்று சாமண்ணா தடுத்தார். "நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்" என்றார்.
வெற்றிலை முதலியன வந்த பிறகு, இன்ஸ்பெக்டர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, "நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்" என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.
வேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் கிராமப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்.
----------------
தொடரும்...