(Reading time: 10 - 19 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

வைத்திருப்பதில்லை. ஆகையால் இப்போது உள்ள குதிரைகளும் முன்போல் பார்ப்பதற்கு அழகாக இல்லை. தாலுகா நிலையத்துக்கு வருவோரும் பதிவு நிலையத்துக்கு வருவோரும் தவிர, வேறு யாரும் இப்போது எங்கள் ஊர்க்கு வருவதில்லை. நெசவுத் தொழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊரில் மட்டுமே முன்பு உயர்நிலை பள்ளி இருந்தது. அதனால் வெளியூரிலிருந்து மாணவரும் பெற்றோரும் படிப்பை நாடியும் வந்தார்கள். இப்போது பக்கத்து ஊர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்பட்டு விட்டபடியால் கல்வி காரணமாக வருவோரும் குறைந்து விட்டார்கள். முன் இந்தக் குறை எல்லாம் இல்லாத படியால், எங்கள் தெரு கண்ணுக்கு இனிய காட்சியோடு பெருமை பெற்று விளங்கியது.

  

இந்தத் தெருவில் எங்கள் வீடு கிழக்குப் பார்த்து அமைந்திருந்தது. நான் ஒருநாள் காலையில் வேப்பமரத்தை அடுத்த பெரிய திண்ணையின் மேல் உட்கார்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பசையும் வைத்துக்கொண்டு காற்றாடி செய்து கொண்டிருந்தேன். அதற்கு வால் வேண்டுமே என்று எண்ணித் திண்ணையைவிட்டு எழுந்த போது, "தம்பி" என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.

  

ஐம்பது வயது உள்ள ஓர் அம்மையாரும் என் வயது உள்ள பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டெதிரே நின்றிருந்தார்கள். அந்த அம்மையார் என்னைப் பார்த்து, "23ஆம் எண் உள்ள வீடு எது அப்பா!" என்றார்.

  

"இது 20, இன்னும் மூன்று வீடு கழித்து இதே போல ஒரு வீடு இருக்குது பாருங்கள்" என்று வடக்குப் பக்கம் காட்டினேன்.

  

"எல்லா வீடும் ஒரே மாதிரி; வேப்பமரம், நீளமான திண்ணைகள் எல்லாம் ஒரே வகையாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?" என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அந்த அம்மையார்.

  

"வீட்டு எண் பார்த்தால் தெரியுமே! வா அத்தை, போகலாம்" என்று ஒரு பையன் முன்னே பரபரப்பாகச் சென்றான்.

  

உடனே நான் வீட்டிற்குச் சென்று ஒரு மூலையில் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பழம் புடைவையில் நீளமாக ஒரு துண்டு கிழித்துக் கொண்டு வெளியே வந்தேன். வீடு கேட்டவர்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.