(Reading time: 19 - 38 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

போராடிவிட்டு, இரவு பத்து மணிக்குக் கடையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறேன். அந்தக் காலத்தில் என்னை இப்படிப் படிக்க வைத்திருந்தால், நான் எவ்வளவோ படித்திருப்பேன். எனக்குச் சொல்வார் யாரும் இல்லை. உனக்கு எல்லாம் இருந்தும், உன் தலைவிதி இப்படி இருக்கிறது" என்று ஒரு புராணமே படித்துவிட்டார். அன்றைக்கு எனக்கு அந்தத் தேர்வு எண்களின்மேல் ஏற்பட்ட வெறுப்புக்கு அளவில்லை. இப்படி ‘மார்க்’ என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன்.

  

அம்மா ஒரு நாளும் என்னை அப்படிக் கண்டித்தது இல்லை. காலையில் நேரத்தோடு விழித்தெழாவிட்டால், அல்லது, மாலையில் விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டால், அப்போதுதான் அம்மாவின் வசை கேட்கும். சில வீடுகளில் வேளைக்குச் சாப்பிடாவிட்டாலும் தாய்மாரின் வசை கேட்கும். இயற்கை எனக்கு நல்ல பசியைக் கொடுத்திருந்தபடியால், நான் இந்த வசை கேட்கும்படி ஏற்படவில்லை.

  

சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும், அந்த அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால் சந்திரன் காலையில் நேரத்தோடு எழாவிட்டாலும், மாலையில் படிக்கத் தவறுவதில்லை, பாடங்களை மிக ஒழுங்காகப் படித்துவந்தான். அதனால் அந்த அத்தை வசை பாடும் வழக்கமே இல்லாமல் இருந்தது.

  

அத்தைக்கும் அம்மாவுக்கும் சந்திரன் வந்த அந்த வாரத்திலேயே பழக்கம் ஏற்பட்டது. அந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சந்திரன் தன் அத்தையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குள் வந்தான். "வாங்க அம்மா, வாங்க" என்று அம்மா முகமலர்ச்சியோடு அந்த அத்தையை வரவேற்றார். பாய் போட்டு உட்கார வைத்தார். "இருக்கட்டும் அம்மா. நமக்கு ஏன் இதெல்லாம்?" என்று அத்தை பாயைச் சுருட்டிவிட்டுக் கம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பையில் கொண்டு வந்திருந்த நான்கு தேங்காயையும் ஒரு வெல்ல உருண்டையையும் எடுத்து வைத்து, "எங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்தவை. எங்கள் தோப்புத் தேங்காய்; எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். அவற்றைக் கண்டதும், அம்மாவின் முகமலர்ச்சி முன்னைவிட மிகுதியாயிற்று. ஒரு தட்டுக் கொண்டுவந்து அவற்றை எடுத்து வைத்து எதிரில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.