(Reading time: 19 - 38 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பழகிப் பழகி அவருடைய உள்ளத்தில் ஒரு மகனுக்கு உரிய இடத்தைப் பெற்றுவிட்டேன். உணர்ச்சி மிக்க காதலுக்கு உரிய அவருடைய இளமைப்பருவம் என்னுடைய ஆடல் பாடல்களிலும் பிடிவாதங்களிலும் அழுகை ஆரவாரங்களிலும் ஈடுபட்டுக் கழிந்தது. பாக்கியத்திடம் நான் பெற்ற அன்பில் பாதிதான் என்தங்கை மணிமேகலை பெற்றிருப்பாள். தம்பி பொய்யாமொழியோ அதிலும் பாதிதான் பெற்றிருப்பான்.

  

சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தபோது, பாக்கியத்தின் துயரம் ஒருவாறு ஆறிப்போயிருந்தது எனலாம். கண்ணீரிலும் விம்மலிலும் மூழ்காமல், சிந்தனையிலும் பெருமூச்சிலும் பாக்கியத்தின் துயரம் கழிந்த காலம் அது. கடமையுணர்ச்சியோடு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் என் மேலும் சந்திரன் மேலும் அன்பு இருந்தது; அந்த அன்பு ஒரு தாயின் அன்பு என்று சொல்ல முடியாதபடி குறைந்திருந்தது. என்மேல் பேரன்பு செலுத்தி, நான் விலக விலக, ஏமாற்றம் அடைந்த உள்ளம் ஆகையால், மறுபடியும் அப்படிப்பட்ட பாசம் பிறக்கவில்லை போலும்.

  

அந்தக் குடும்பம் சிறைபோன்ற குடும்பம்; சிறையிலாவது ஒத்த மனம் உடையவர்கள் இருப்பார்கள்; அதனால் ஆடல்பாடலும் சிரிப்பும் வேடிக்கையும் இருக்கும். பாக்கியத்தின் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லை. தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கியம் பருவம் அடைவதற்கு முன்பே அவர் தாய் காலமாகிவிட்டாராம், தந்தையோ அன்று முதல் நொந்த உள்ளத்தோடு குடும்பச் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்தார். பாக்கியத்திற்கு ஒரு தம்பி உண்டு. அவர் நலிந்த உடல் உடையவர். பதினாறு வயதிலேயே அறுபது வயதுக்கு உரிய அடக்கமும் ஒடுக்கமும் அவரிடம் இருந்தன. விநாயகம் என்பது அவருடைய பெயர். அவர் அக்காவுடன் பேசுவது குறைவு. பத்தாவதில் தேர்ச்சி பெறாமல், கூட்டுறவு மளிகையில் கணக்கராகப் போகுமாறு வற்புறுத்தப்பட்டார். அந்த வேலைக்குப் போவதும் வருவதும், அக்கா நான்கு சொல் சொல்லிக் கேட்டால் இரண்டு சொல் விடையாகச் சொல்வதும், திண்ணையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கிடப்பதும், படிப்பகத்துக்குப் போய்ச் செய்தித்தாளை மட்டும் படித்து வருவதுமாக இப்படி அவர் வாழ்க்கையைக் கழித்தார். இப்படிப்பட்ட தம்பியோடு ஓர் அக்கா எப்படி உள்ளம் திறந்து சிரித்துப் பழக முடியும்? தந்தையோ மனைவி இறந்த பிறகு இட்ட முக்காட்டை இன்னும் களையாதவர் போல் இருந்தார். தலையில் இட்ட முக்காட்டைக் களைந்துவிட்டாலும், உள்ளம் முக்காடு இட்டபடியே கிடந்தது. "அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை" என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.