(Reading time: 16 - 32 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

திருமந்திரமும் வந்து எங்கள் வீட்டில் பத்துநாள் தங்கியிருந்தார்கள். அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. சில நாள் என் தங்கை தனியே இருக்க கயற்கண்ணியும் கற்பகமும் ஒரு கட்சியாக இருந்தார்கள். மற்றும் சில நாள் மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டையே அமர்க்களம் செய்தார்கள். அது கால் தேர்வின் நெருக்கமாக இருந்தபடியால், எனக்கு ஒரு வகையில் இடையூறாக இருந்தது. ஆனாலும் கற்பகத்தின் ஆடல் பாடல்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன். கற்பகம் இல்லாமல், என் தங்கையும் கயற்கண்ணியும் மட்டும் சேர்ந்து விளையாடிய போது, அவர்களைக் கடிந்துரைத்தேன். "கயற்கண்ணியின் குரல்தான் வீட்டையே தூக்கிக் கொண்டுபோகுது. அப்பப்பா! படிக்கவே விடமாட்டேன் என்கிறாள்" என்று அவள்மேல் குறை சொல்வேன். கற்பகம் வந்து அவர்களுடைய ஆட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எவ்வளவு ஆரவாரம் கேட்டாலும் வாய் திறக்காமல் பொறுமையாக இருப்பேன். என்னுடைய போக்கு எனக்கே வேடிக்கையாக இருந்தது. அந்தப் பெண்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டார்களோ, தெரியவில்லை.

  

இவ்வளவு மகிழ்ச்சியான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால், அத்தைமகள் கயற்கண்ணி இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அத்தையோடு ஊருக்குப் போகமாட்டேன் என்றும் சொன்னாள். இங்கேயே இருந்து படிக்க விரும்புவதாகவும் சொன்னாள். அத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனதைக் கண்டு என் மனம் மிக மகிழ்ந்தது. "இந்த வருசம் ஊரிலே படித்துப் பரீட்சையிலே தேறிவிடு. அடுத்த வருசம் அப்பாவுக்குச் சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன்" என்று ஆறுதல் கூறி அத்தை அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய நல்ல காலம், அவள் அந்த ஆண்டில் முழுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கே வந்து படிக்கும் முயற்சிக்கு இடம் இல்லாமற் போயிற்று. பள்ளிக்கூடப் படிப்புப் போய், சமையலறைப் பயிற்சி அவளிடம் உரிமையோடு வந்து சேர்ந்தது.

  

கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, "இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.