(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குச் சென்று சேர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். அவனுடைய விடுமுறைக் காலம் முடிந்து அதற்கு முந்திய நாள் தான் சென்னைக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள். உடனே திரும்பிவிடலாம் போல் தோன்றியது. சந்திரனுடைய அம்மா, அப்பா, அத்தை மூன்று பேரும் வற்புறுத்தவே சோர்வோடு மூன்று நாள் தங்கியிருந்தேன். அந்தச் சோர்வுக்கு இடையே நான் பெற்ற மகிழ்ச்சி ஒன்று இருந்தது என்றால், அது கற்பகத்தின் முகத்தை இடையிடையே கண்டதில்தான். அவளோ, படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, சமையலறையில் பயின்று கொண்டிருந்தாள். என் முன் அடிக்கடி வர நாணினாள். அந்த நாணம் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆறு மாத காலத்தில் அவ்வளவு வேறுபாட்டோடு பழகுவாள் என்று நான் எண்ணவில்லை. ஆனாலும், யாரும் இல்லாதபோது, நடைவழியாகப் போனவள், இரண்டு மூன்று முறை புன்முறுவலும் கடைக்கண் பார்வையும் காட்டிவிட்டுச் சென்றாள்.

   

வழக்கம் போல் மாசன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். "நுங்கு இல்லையா?" என்று நான் கேட்ட போது, "அதற்கு இப்போது காலம் இல்லை. வேண்டுமானால், பனம் பழம் இருக்குமா என்று பார்த்து வருவேன்" என்றான்.

  

தென்னந் தோப்புக்குத் தனியே சென்றேன். காவலாள் சொக்கான் என்னை வரவேற்றான். "சுரைப்புருடை வேண்டுமா சாமி!" என்றான்.

  

"வேண்டா, நீ பக்கத்தில் இரு. நானே நீந்திப் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கிணற்றினுள் இறங்கினேன். படித்த வாய்பாடு தவறாமல் நினைவுக்கு வருவது போல், நீரில் இறங்கியவுடன் நீந்தும் திறமை தானே வந்தது. ஒருவகைப் பெருமிதத்தோடு திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி நீந்தினேன். "சொக்கான்! உன் துணை வேண்டா. இனிமேல் நானே தனியே நீந்துவேன். தண்ணீரும் எனக்குத் தரைபோல் ஆகிவிட்டது. நீ போகலாம்" என்றேன்.

  

"என்ன சாமி! இது ஒரு வித்தையா? நாய்க்குட்டி பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி எல்லாம் பிறந்த மூன்றாம் நாளில் போட்டாலும் நீந்திக் கரைக்கு வந்து சேருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்தையா?" என்றான் சொக்கான்.

  

"நாயும் பூனையும் ஆடும் மாடும் யாரும் கற்றுக் கொடுக்காமலே நீந்துகின்றனவே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.