தோற்றத்தோடு வகை வகையான உடையலங்காரங்களோடு இருப்பார்கள். அவர்களைத் தொலைவில் இருந்து கண்ணால் பார்த்துத்தான் மகிழவேண்டும். இந்தப் பூக்களில் எத்தனை நிறம், எத்தனை அழகு! பாரய்யா. இப்படித்தான் அவர்களும் நெருங்கிப் பழகினால், பொறுக்கமுடியாது. உடனே வெறுப்புக் கொள்வாய்" என்றான்.
இதைக்கேட்ட எனக்குப் பெருங்காஞ்சி ஏரிக்கரையில் நான் ஆராய்ந்து உணர்ந்த அரளிப்பூவும் துளசிச் செடியும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு கருத்து ஒற்றுமை உடைய இந்த இளைஞனோடு பழக வேண்டும், நட்புக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.
"பெயர் என்ன?" என்று கேட்டேன்.
"மாலன்"
"எந்த வகுப்பு"
"இண்டர்"
"நான் பார்த்ததில்லையே, நானும் அதே வகுப்பு. பெயர் வேலய்யன்."
"நீயும் அதே வகுப்பா?"
"ஆமாம். ஏ பிரிவு. நீ எந்தப் பிரிவு?"
"சி."
"அதனால்தான் பழக வாய்ப்பு இல்லை. பார்த்திருப்பதாக நினைவு வருகிறது. ஆனால் தெரிந்துகொள்ளவில்லை. ஊர்?"
"சோழசிங்கபுரத்துக்குப் பக்கத்தில்........"
உணவுக்காக விடுதி மணி அடித்தது. உணவுக் கூடத்திற்கு நேரே சென்றோம். சென்றபோது