(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பெற்றோரிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட இப்படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திரிகையில் நல்லபெயர் வாங்கலாம் என்பது அவர்களுடைய திட்டம்" என்றான். நான் உடனே மறுத்தேன். அவன் ஆணித்தரமாகப் பேசினான். "பொய்,பொய்" என்று உறுதியாக மறுத்தேன்.

  

ஒன்பது மணிக்குள் விடுதி மாணவர்கள் கல்லூரியின் எதிரே திரண்டுவிட்டார்கள். இன்று கல்லூரிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வெளியே இருந்து மாணவர்களுக்குச் சொல்லித் தடுத்தார்கள். என் வகுப்பில் கற்கும் மாணவர் சிலர் என்னிடம் வந்து, "என்ன செய்வது?" என்று கேட்டார்கள். "நம் நாட்டுப் பெரியவர் இப்படி அடக்குமுறை செய்து அவரைத் தண்டித்தபோது, நாம் வகுப்புக்குப் போய் இருப்பது நல்லது அல்ல. இன்று ஒரு நாளாவது நம்முடைய வருத்தத்தை தெரிவிக்கவேண்டும்" என்றேன்.

  

ஆனால் மாணவர் பலரிடையே வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தம் வேண்டுகோளை மீறிக் கல்லூரிக்குள் சென்றவர்களைப் பார்த்து, "கருங்காலிகள்" என்று கூச்சலிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்காதவாறு செய்தனர். பலர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. எள்ளி நகையாடும் மனநிலை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். காந்தியடிகளுக்காகச் செய்வதைவிட, தங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் காணவேண்டும் என்று செய்ததாகத் தெரிந்தது. அந்த மாறுதலைக் கட்டுப்பாடாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாட்டை மீறுகின்றவர்களை இகழ்ந்து பேசவேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையான துயரத்தோடு காந்தியடிகள் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் போல் முகம் வாடிச் சோர்ந்து நின்றவர்களும் சிலர் இருந்தார்கள். முதல் வகுப்புக்கு உரிய மணி அடித்தது. மாணவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்புக்குப் போவது தம் கடமை என்று ஆசிரியர்கள் சென்று உட்கார்ந்திருந்தார்கள். ஊர்வலம் போல் கூட்டமாகக் கல்லூரியைச் சுற்றிவர வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். அவ்வாறே எல்லாரும் உடன்பட்டுக் கூடினார்கள். சுற்றி வந்தபோது வகுப்பறைகளில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டபோது கூட்டத்தில் பலர் ஆரவாரம் செய்தார்கள். குறும்புப் பெயர்களிட்டுக் கூவினார்கள். "கருங்காலிகள் ஒழிக" என்றார்கள். வெள்ளைக்காரர்களின் வால்கள் ஒழிக" என்றார்கள். "ஆங்கிலேயர்களின் அடிமைகள் ஒழிக" என்றார்கள். கூட்டம் சுற்றி வந்து ஒரு மரத்தடியில் நின்றது. உயரமான ஒரு மாணவன் - கதர் அணிந்தவன் - "காந்தியடிகள் வாழ்க" என்று மும்முறை முழங்கினான். "மாணவ நண்பர்களே!" என்று விளித்தான். கூட்டம் அமைதியடைந்தது. "இன்று எந்தப் பெரியவருக்காக -

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.