(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

உலாவும் இடம் என்று சொல்லத்தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.

  

அடுத்தநாள் முதல் மெல்ல மெல்ல விடுதிக்கு உயிர் வந்தது எனலாம். எல்லோரும் கலகல என்று பேசும் குரல் கேட்டது. சீழ்க்கை அடித்தலும் சினிமா பாட்டுப் பாடலும் மெல்லமெல்லத் தொடங்கின. படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. அந்த நல்ல மாணவன் மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். என்ன நடந்தது என்று விரிவாகச் செய்தி வந்தது. கூட்டம் கூட்டியதாகவும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், பேசித் தூண்டியதாகவும் போலீசார் குற்றம் சாட்டினார்களாம். முன் சொன்ன இரண்டிற்கும் தன் தொடர்பு இல்லை என்றும், பேசியது மட்டும் உண்மை என்றும், அந்தப் பேச்சிலும் எந்தச் செயலுக்கும் மாணவரைத் தூண்டியதில்லை என்றும் சொன்னானாம். கல்லூரித் தலைவரின் நற்சான்று கேட்டறிந்து பிறகு விடுதலை செய்து விட்டார்களாம். ஆனால் அந்த நல்லவனைக் காட்டி கொடுத்த குற்றவாளியைப் பற்றிய பேச்சே இல்லை. அவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போலீசாரை ஏய்த்துவிட்டது போலவே அவன் விடுதியில் உள்ளவர்களையும் ஏய்த்துவிட்டுக் கவலை இல்லாமல் இருந்தான்.

  

அடுத்த வாரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீர் அறைக்குப் பக்கத்தில் ஆரவாரம் கேட்டு உடனே அறையை பூட்டிவிட்டு அங்குச் சென்றேன். அதற்குள் அங்கே ஐம்பது அறுபது மாணவர்கள் கூடிவிட்டிருந்தார்கள். சந்திரன் குரல் உரக்கக் கேட்டது. அவனுடைய குரலில் ஆத்திரமும் இருந்தது. அதனால் உடனே கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றேன். சந்திரனுக்கு எதிரே அந்த நல்லவன் - சிறை சென்ற மாணவன் - அமைதியாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். விடுதிச் செயலாளரும் வளர்ந்த மாணவர்கள் சிலரும் குழப்பத்தில் தலையிட்டு, "இங்கே வேண்டா, போகவர இடையூறாகவும் இருக்கிறது. தயவு செய்து படிப்பகத்துக்கு வாருங்கள். குழப்பம் இல்லாமல் அமைதியாக அங்கே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நமக்குள் இப்படிப் போரிட்டுக்கொண்டால் நல்லதா? விடுதியில் இருப்பவர்கள் ஒரு குடும்பம்போல் வாழ வேண்டாவா?" என்றார்கள்.

  

சந்திரன் "சரி" என்று அவர்களுக்கு இணங்கினான். அவனுக்கு ஒரு துணை உண்டு என்று காட்டுவதுபோல் நான் அவன் பக்கம்போய் நின்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.