(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

தெரிந்துகொண்டேன். 'தூங்கும்போது இந்திரியம் வெளிப்பட்டு விடுவதைச் சொல்கிறாயா? மாதத்துக்கு எத்தனை முறை?' என்று விளக்கமாகக் கேட்டேன். 'ஐந்தாறு முறை' என்றான். 'அது இயற்கை. அதைப்பற்றிக் கவலைப்படாதே!' என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கித் தைரியம் ஊட்டி அனுப்பினேன். அதுவும் போதாது என்று ஒரு மருத்துவரிடமும் அழைத்துச்சென்று, அவரையே சொல்லுமாறு செய்தேன். வாரம் ஒருமுறை ஆனால் கெடுதியே இல்லை என்றும் அவரே அவனுக்குச் சொல்லியனுப்பினார். அப்படி மனம் சோர்ந்து கலங்கிய அந்தச் சந்திரனா இப்போது இப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறான்? எண்ணிப் பார்த்தால் நம்ப முடியவில்லையே" என்றார்.

  

குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சாமண்ணா அப்போது விழித்துப்பார்த்து, "எது? என்ன நம்பமுடியவில்லை?" என்றார்.

  

"ஒன்றும் இல்லை. நீங்கள் தூங்குங்கள்" என்றார் ஆசிரியர்.

  

"தூக்கமாவது, பாழாவது! அவள் போன நாள் முதல் நல்ல தூக்கமே இல்லை. குடும்பப் பாரத்தை என்மேல் போட்டுவிட்டுச் சுகமாகப் போய்ச் சேர்ந்துவிட்டாள். கடவுளே கடவுளே" என்றார்.

  

மறுபடியும் என் மனம் சந்திரனுடைய தாயைப்பற்றி நினைத்து வருந்தியது. அன்பான மனம் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக, தன் மகனுக்காக நொந்து நொந்து அழிந்ததே என்று வருந்தினேன்.

  

ரயில் மேட்டுப் பாளையத்தில் நின்றதும் இறங்கிப் பல்சக்கர வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். சிற்றுண்டி உண்டோம். ஆசிரியர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர்க் குவளையைக் கையில் ஏந்தியதும் அதன் நிறத்தைப் பார்த்துத் தயங்கினார். "என்ன இது! இப்படிக் கலங்கலாக மண்ணாக இருக்கிறதே! இதை எப்படிக் குடிப்பது?" என்றார். பக்கத்திலே இருந்த ஒருவர், "குடியுங்கள், குடிக்கலாம். ஒன்றும் செய்யாது; இங்கே இப்படித்தான்" என்றார். குடிக்க மனம் இல்லாமல் ஒரு விழுங்குநீர் குடித்துவிட்டு நிறுத்தினார் "காப்பியிலும் இந்தத் தண்ணீர்தான் கலந்திருக்குமா? நீங்கள் எப்படிக் குடித்தீர்கள்?" என்று சாமண்ணாவைப் பார்த்துக் கேட்டார். "என் வாழ்க்கையே ஒரே கலங்கலாக இருக்கிறது. தண்ணீர் கலங்கலாக இருந்தால் என்ன?" என்று சிறிது சிரித்தார், அந்தச் சிரிப்பில் பெருந்துன்பம் கலந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.