(Reading time: 17 - 33 minutes)
Vata malli
Vata malli

கையில், சூட்கேஸைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மறு கையால் மேல் கம்பியைப் பிடித்துத் தடுமாறிய அவன் மீது மொய்த்தன. அவன் ஓரளவு தன்னை நிலைப்படுத்திய போது, பாதிக் கண்கள் திரும்பின. ஆனாலும், மீதிக் கண்கள் அவன் உட்காருவது வரை, திசைமாறப் போவதில்லை என்பது போல், ஒரு மனிதநேய வீச்சோடு, அவன் மீதே நிலை கொண்டன. அவனோ, பார்த்த கண்களைப் பார்க்காமல், பாராத கண்களையே பார்த்தான். ஆண் வரிசையில், அவன் கண் போகவில்லை. தாய்க்குலத்தின் வரிசையையே மாறி மாறிப் பார்த்தான். அந்த இளஞ்சிட்டு தனித்திருந்த இடத்தை தனித்துப் பார்த்தான். பேருந்தின் குலுக்கலுக்கு ஏற்ப குலுங்கிய உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டே, மேல் கம்பியைப் பிடித்த கையை அதன்மேல் சக்கரம் போல் உருள வைத்துக் கொண்டு, இடத்தைக் கண்டுவிட்ட திருப்தியில் கால்களை நகர்த்தினான். இந்த இளஞ்சிட்டின் இருக்கை அருகே வந்ததும் மேல்பிடியைச் சட்டென்று விட்டுவிட்டு, தடுமாற்றத்துடன், அந்த இருக்கையின் பிடியைப் பற்றிக் கொண்டே, அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். சும்மா 'சிவனே' என்று உட்காரவில்லை. உட்கார்ந்த வேகத்திலேயே, அவளின் இரட்டைச் சடைப் பின்னலுக்கு மேல் இன்னொரு இரட்டைச் சடை போல் காட்சியளித்த பூப்பின்னலை உற்று உற்றுப் பார்த்தான். முல்லைப்பூ பின்னல். பிறகு ஆச்சரியம் தாங்காமல் அவள் காதுகளில் வெள்ளை மீன் வடிவத்தில் தொங்கிய தொங்கட்டான்களைச் சிறிது நெருங்கிப் பார்த்தான். அவளாலோ, அல்லது அவளின் அலங்காரத்தாலோ ஈர்க்கப்பட்டவன் போல் அவள் உச்சந்தலையின் மத்தியில் பொருத்தப்பட்ட ஒரு சிவப்பு வளைவையும் சிறிது நேரம் பார்த்தான்.

  

அந்தப் பேருந்தின் ஓட்டுநர், திரும்பிப் பார்த்தார். பிறகு வலது பக்கமுள்ள வெளிக்கண்ணாடியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே வண்டியை ஓட்டினார். 'ஒலியும் ஒளியுமோ - அல்லது அவை, தேவையற்ற காட்சியோ'... அவர் தனது எதிர்பார்ப்புக் கூடக்கூட, பேருந்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார். இதே போல் 'விழித்திருக்கும்' பயணிகளும் அந்த இருக்கையை எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் பார்த்தார்கள். 'காலம் கலிகாலம். கண்ணு முன்னாலயே நடக்குது' என்று ஒரு தாத்தா, பாட்டிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதே சமயம், பாட்டி, அவர் தன்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்க்கிறாரே என்பது மாதிரி அவர் தலையைத் தன் பக்கம் திரும்பிவிட்டாள். பலர், அவனும் அவளும் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதுபோல் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களின் கண்களுக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் அவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில், 'இன்னுமா தூக்கம்?... இதுக்குமா தூக்கம்?' என்று கத்தியிருப்பார்கள். ஒரு நடுத்தர ஜோடியின் வாட்டசாட்டமான ஆண் பிறவி, தனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.