பிள்ளையார், தோட்டத்திற்கு போய் வந்ததன் அத்தாட்சியாய், தலையில் ஏறிக் கிடந்த ஒரு சுமை அகத்திக்கீரைக் கட்டை, தொப்பென்று முற்றத்தில் போட்டார். தலையில் பாம்பு மாதிரி சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டை எடுத்து ஒரு முனையைப் பிடித்து உதறியபடியே, சமையலறைத் திண்ணையில் உட்கார்ந்தார். பொதுவாக, தோட்டத்திற்குக் காலையில் போனால் அங்கேயே இரண்டு தேங்காய் பறித்து, வயித்த நிரப்பிக் கொள்பவர், மத்தியானம் சாப்பாட்டுச் சமயத்தில் மட்டும் தான் வருவார். ஆனால், இன்று தோட்டத்திற்குப் போன வேகத்திலேயே திரும்பி விட்டார். எதிர் அறைப் படிக்கட்டில் லுங்கியும் பனியனுமாக இருந்த சுயம்புவை நோட்டம் விட்டபடியே, தட்டில் பழைய அரிசிச் சோற்றைத் தேங்காய்த் துவையலோடு பிசைந்து கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியைப் பார்த்துக் கேட்டார்:
“ஏடே... பெரியவன்... இவன் இன்னும் போகலை? நான் என்னடா சொல்லிட்டுப் போனேன்? தோட்டத்துல இருந்து திரும்பும் போது, ஒண்ணு நான் இவன் கண்ணுல படப்படாது... இல்லாட்டா, நான் ஒங்க கண்ணுல படமாட்டேன்னு சொன்னத மறந்திட்டியளா? செருக்கிமவன், ‘கரிவலிச்சி’ வாரான். பெரிய படிப்புன்னா கஷ்டமாத்தான் இருக்கும்... இந்த ஒரு மாதத்லயே ரெண்டு தடவை அவன் வரும் போதே எனக்கு சந்தேகம்... ஒவ்வொருத்தியவள மாதிரி நான் வாக்குத் தவறுற வம்சம் இல்லடா... இப்ப அவன் போறானா... இல்ல நான் போகணுமான்னு கேளு...”
தப்பித் தவறி ஒரு வார்த்தை வாயிலிருந்து விழுந்து விட்டாலும், அந்த ஒரு சொல்லில் நிற்கும் அப்பாவின் போக்கை அறிந்திருக்கும் ஆறுமுகப் பாண்டி, பாதிச் சோற்றைச் சாப்பிடாமலே கையைக் கழுவினான். இதற்குள், மரகதம் ஓடி வந்து தம்பியின் தோளில் பாண்ட் சட்டையைத் தொங்கப் போட்டு, அவனைத் தூக்கி விட்டாள்.
மரகதம், தம்பியை ஆடையை மாற்றிக் கொள்வதற்காக, பக்கத்து அறைக்குத் தள்ளி விட்டாள். அவனும், அக்காவின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பது போல் சிறிது நடந்து, மீண்டும் அவள் பக்கமே வந்தான். தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஓலமிட்டான். அக்காவிடம் மௌனச் சம்மதமானவன், இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறப் போவது போல் அபலத்தோடு பேசினான்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.