Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 37 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 37
கங்காதேவியை நான்கைந்துபேர் கைத்தாங்கலாக நடத்தி வந்தார்கள். அவர்களில் இரண்டுபேர் சராசரி மனிதர்கள். அவர்களின் தோளில் கைபோட்டபடி அவர்களையே ஊன்றுகோலாகப் பயன்படுத்திக் கொண்டு, நொண்டியடித்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மேகலை துடித்துப் போய்விட்டாள். அவள் முகத்தில் சிராய்ப்புகள். கால் பாதங்களில் ரத்தம் தோய்ந்த சதைச் செதில்கள். முட்டிக்கைகள் வீங்கிப் போயிருந்தன. தலைமுடி அலங்கோலமாகக் கிடந்தது.
மேகலை அப்படியே எழுந்து அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘எம்மா... எம்மா’ என்று போட்ட கூச்சலில், லட்சுமி, நீலிமா, குஞ்சம்மா உட்பட அனைவருமே ஓடி வந்துவிட்டார்கள். கங்காதேவி, அவளைப் பார்த்து மெல்லச் சிரித்து அவளை மார்போடு அனைத்துக்கொண்டாள். இதுவே ஒரு உந்து சக்தியாக, மேகலை ஒப்பாரி போலவே ஓலமிட்டாள்.
“எம்மா நான் துரதிர்ஷ்டம் பிடிச்ச பொண்ணும்மா. அக்காமேல உயிரையே வெச்சிருந்தேன். அவள் கல்யாணம் நின்னு போச்சு. பச்சையம்மா மேல பாசம் வச்சேன். அவள் போலீசுல படாதபாடு பட்டாள். நீங்களும் என்ன எப்போ தத்து எடுத்தீங்களோ அப்பவே இப்படி ஆயிட்டீங்க... நான் இங்க இருக்கப்படாதும்மா... போயிடுறேன்... போயிடுறேன்...”
முண்டியடித்த மேகலையை நீலிமாவும் குஞ்சம்மாவும் பிடித்துக் கொண்டபோது, கங்காதேவி மேகலையை பெருமிதமாகப் பார்த்து, அவள் தலையைக் கோதிவிட்டபடியே பேசினாள்.
“என்ன மேகல். இப்படிப் பேசுற... நீ மட்டும் எனக்குக் கிடைக்காட்டால், நான் உயிரோட திரும்பியிருக்க மாட்டேன். அன்னை இந்திராவைப் பார்க்கவந்த கூட்ட நெரிசல்லருந்து மீளாமல், என்ன நானே சாகடிச்சிருப்பேன். என்னைப் பெறாமல் பெத்த தாய் போயிட்டாலும் நான் பெறாமல் பெத்த மகள் கிடைச்சுட்டாள்னு என்னை நானே ஆறுதல் படுத்துறேன். நீ மட்டும் போயிட்டால், நான் மட்டும் இங்க இருப்பனா... ஒரு வேளை உனக்கு என்கூட இருக்க இஷ்டம் இல்லியா...”
மேகலை இருக்கிறது என்பதுபோல் லேசாய் தலையை ஆட்டியபோது, நீலிமா, அந்தத் தலையைப் பிடித்து மேலும் கீழுமாய் பலமாய் ஆட்டிவிட்டாள். கங்காதேவி, எல்லோரையும்