கொடுக்குது. ஹெலன் ஹெல்லரே இதுக்கு ஒரு உதாரணம். பைபிளில் கூட ஒரு வாசகம் உண்டு... தேவகுமாரன் உலக பாவங்களைச் சுமந்தது மாதிரி, அவர் வழியில் மானுடத்தின் பாவங்களைச் சுமக்கக் கடவுள் திடமான, நம்பிக்கைக்குரிய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிலுவையைச் சுமக்கச் சொல்லிக் கொடுக்கிறாராம். இது பொய்யா இருந்தாலும், இதுலயும் ஒரு உண்மை இருக்கு. முடம், செவிடு, குருடு போன்ற ஊனம் கடவுள் கொடுத்த சிலுவை என்றால், முழுக்க முழுக்க அலித்தன்மை கொண்ட நாம் சுமக்கிற சிலுவை ஏசுநாதர் சுமந்ததை விடப் பெரிய சிலுவை. பிறக்கும்பேதே மரித்து அந்த மரிப்பிலிருந்து எழுந்தவர்கள் நாம். அதனால நம்மள பற்றி நாமே இரக்கப்பட வேண்டாம்!”
“உங்களால எப்படியம்மா இப்படிப் பேச முடியுது...?”
“யாரையும் வியந்து பார்க்காதே! நான் இப்படிப் பேசுறது நீ நினைக்கிறது மாதிரி பெரிசல்ல. நம் முன்னோர்கள், நமக்காக எழுதி வைச்சிருக்கிற புத்தகங்களைப் படித்தால். அறிவு தானாய் பெருகும். பட்டறிவை அதில் கலந்தால், அதுவே போகப் போக ஞானம் ஆகும். எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். இன்னைக்கும் நாளைக்குமான உதவி அல்ல. என் வாழ்நாள் வரைக்குமான உதவி...”
“அதுக்குத்தானம்மா நான் இருக்கேன்.”
“தினமும் காலையில் ஒரு மணி நேரம்... மாலையில் ஒரு மணி நேரம் நான் சொல்ற புத்தகங்களை நீ படிச்சுக் காட்டணும் செய்வியா...?”
“எங்க ஊருல ஒரு பழமொழிம்மா. கரும்பு தின்ன கூலியான்னு...”
“அப்படிச் சொல்லு என் ராசாத்தி. காலைல இந்த சமூகத்தை தராசில் நிறுத்த கார்ல்மார்க்சோட சிந்தனைய எளிய முறையில் விளக்கும் கட்டுரைகளைப் படிச்சுக் காட்டணும், மாலையில் பகவத்கீதை, இல்லன்னா பைபிள். இப்படி என்னோட ஆயுள் பரியந்தம் வரைக்கும் நீ படிச்சுக் காட்டணும்.”
“இப்பவே ஆரம்பிக்கலாமா அம்மா...”