Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 39 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 39
கூத்தாண்டவர் கோயிலுக்கு, முன்னாலும் பின்னாலும், சராசரி மனிதர்களுக்குக் கூத்தாகிப் போனவர்களின் கூட்டமயம்.
சந்தனக் காப்பிட்ட கூத்தாண்டவர் சிலை, சிறிது தொலைவில் அலை அலையாய் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. அந்தக் கடலிரைச்சல் காதில் பட்டு, கவனம் கலைந்து, கூத்தாண்டவர் திடுக்கிட்டுப் பார்ப்பது போன்ற கண்கள். பீடத்திற்குக் கீழே கிருஷ்ணன், அலியாய் உருவெடுத்து அரவானிடம் கழுத்தை நீட்டும் படம். இதற்கு அருகே பசியடங்காக் காளியின் கோர சொரூபப் படம். அந்தச் சின்னக் கருவறைக்குள், ஒரே புகை மயம், தேங்காய்த் தண்ணிர் குட்டைபோல் பெருகியிருந்தது.
அந்தக் கோவிலுக்குப் பின்பக்கம் ஒரே மாதிரியான குடிசை வீடுகள். அவற்றின் திண்ணைகள் கூட மேடு பள்ளமில்லாமல் இடையிடையே வாய்களைக் காட்டிக் கொண்டிருப்பது போன்று தோன்றின. ஒவ்வொரு திண்ணையிலும், நான்கைந்து அலிகள். ஊர் ஊராய், மொழி மொழியாய், கூடியிருந்தார்கள். நாதியற்றது போல், சாதியற்ற சனங்கள். ஒருத்தி புருவத்திற்கு மை தீட்டிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி, மேக்கப் செட்டிலுள்ள கண்ணாடியைச் சார்த்தி வைத்துவிட்டு, அழகு பார்த்தாள். இன்னொருத்தி வேடிக்கை பார்த்த விடலைப் பயல்களை துரத்திவிட்டு, பாவாடைமேல் படர்ந்த வாயில் புடவையைக் கழட்டிவிட்டு, பட்டுப் புடவையைக் கட்டிக்கப் போனாள். கொண்டைக் குருவிகளைப் போன்ற சத்தம். பூணிக்குருவி மாதிரியான சிணுங்கல்கள். சிலருக்குப் பற்கள் மட்டுமே வெள்ளை. சிலருக்கு முழி மட்டுமே கருப்பு. தூக்கணாங்குருவிக் கூடுகள் மாதிரி கொண்டைகள். அவற்றில் அரளிப் பூக்களிலிருந்து அத்தனை பூக்களும் சவகாசம் செய்தன.
அந்தக் கோவிலுக்கு முன்னால், கற்பூரங்கள் திட்டுத் திட்டாய் ஏற்றப்பட்டு, காட்டுத் தீயாய்ப் பற்றி எரிந்தன. பல அலிகள் கருப்பட்டியை விட, பெரிய பெரிய கற்பூரக் கட்டிகளைப் போட்டார்கள். பேச்சைக் குறைக்காத உருமி மேளம். அலிகள் அல்லாதோர், அந்தக் குப்பத்து மக்கள், தேங்காய் பழத்தட்டுக்களோடு கூடி நின்றார்கள். அக்கம் பக்கத்து அற்புதப் பிறவிகளைக் கூவாகத்தில் பார்ப்பது போல் பார்க்காமல், தங்களில் ஒருவர் போல் பார்த்தார்கள். சிலருக்கு உறவுமற்ற பகையுமற்ற சூன்யப் பார்வை.