கூத்தாண்டவர் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம், பெரிய பெரிய கற்கள் கோணல் மாணலாகக் கிடந்தன. அவற்றிற்கு இடையே சதுரம் சதுரமான மணல் திட்டு. அங்கே அக்கம்பக்கத்து அலிகளின் ஜமா. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு சண்டை. அந்த இருவருக்காக, கட்சி பிரிந்து கையை நீட்டி நீட்டி, தட்டித் தட்டி ஆளுக்கு ஆள் பேச்சு. ஜமாத் தலைவி சுந்தரம்மா, அவர்கள் கத்தி அடங்கட்டும் என்பது போல் விட்டுப்பிடித்தாள். அந்தச் சமயத்தில் ஒரு வெள்ளைக்கார். கடலில் போகும் படகு போல் வந்து நின்றது. அதன் முன்பக்க, பின்பக்க கதவுகளிலிருந்து, ஆறுபேர் சிநேகிதமாய்ச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். மேகலை, வெளிர் மஞ்சள் பட்டுச் சேலையால் தலையை மறைத்த முக்காட்டை எடுத்தாள். நீலிமா, ஒரு அசத்தலான பார்வையோடு நின்றாள். லட்சுமியும், குஞ்சம்மாவும், மேகலை பக்கமே நின்று கொண்ட போது, இது வரை கடலையே பார்த்திராத மார்கரெட்டும், பகுச்சார் தேவியும் சிறிது ஓடிப்போய் ஆர்ப்பரிக்கும் கடலையே அங்குமிங்குமாய் துள்ளித் துள்ளிப் பார்த்தார்கள்.
கீழே உட்கார்ந்திருந்த அலிப் பெண்கள் அந்த அறுவரையும் மேலாய் பார்த்தார்கள். அவர்கள் கழுத்தில் மின்னிய நகைகளின், கண்கூச்சத்தையும் மறந்து அதிசயித்துப் பார்த்தனர். நிச்சயமாய் அது ‘கவரிங்’ இல்லை என்பதைக் கண்டறிந்ததும், அவர்களைக் கையாட்டிக் கூப்பிட்டார்கள். விவகாரம் பேசுவதற்கு, தான் ஆயத்தம் செய்தபோது, சேலாக்கள் கார்க்காரிகளைப் பார்ப்பதில் ஜமாத் தலைவிக்கு சிறிது எரிச்சல். ஆனாலும், தன்னை அறியாமலே எழுந்து நீலிமா பக்கம் போனாள். ஏதோ பேசினாள். உடனே அவள் - இடுப்பில் கைதட்டி, “மேகலை மே போலோ” என்று அவளைச் சுட்டிக் காட்டினாள்.
ஜமாத் தலைவியான சுந்தரம்மா, தனது குண்டுச்சட்டி உடம்பை ஆட்டியபடியே கேட்டாள்.
“அப் கிதர் ஹை...”
“தமிழிலேயே பேசுங்க. நானும் தமிழ் நாட்டுக்காரிதான்... படித்ததும் பக்கத்துலதான்...”
மேகலை மேற்கொண்டும் பேசாமல் அப்படியே நின்றாள். சுந்தரம்மாவும் புரிந்துகொண்டாள். ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் ஒவ்வொரு சோகம். அதை இடம் பொருள் ஏவல் தெரியாமல் கொட்ட முடியாது. அவள், நீலிமாவின் கையையும் மேகலையின் கையையும் ஒரு சேரப்