(Reading time: 11 - 21 minutes)

சுரேந்திரனும் கூட அதே போலொரு மன நிலையில் காணப்பட்டான். வெளியே சிரித்துப் பேசிக் கொண்டாலும் கூட உள்ளே அந்த இருவர் மனநிலையும் மிக போராட்டமாக இருந்தது.நரேந்திரன் எப்போதும் அதிகமான ஆசைகளால் அலைபாயாதவனாக இருந்ததால் மிக சாதாரணமாகவே அப்போட்டிகளை எதிர் கொண்டான்.

மூவருமே சம பலத்தில் இருந்தாலும் கூட முதலில் வாள்வீச்சு, பின்னர் ஈட்டி எறிதல் , அதன் பின்னர் மல்யுத்தம் என மூன்றுப் போட்டிகளிலும் நரேந்திரனே முதல் இடம் பெற்றான்.

தங்கள் மனதில் எழுந்த பய உணர்வும் , தோல்வியையே எண்ணிக் கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்களுமே அவர்களை தோல்வியுறச் செய்தது என உணராதவர்களாக, இருவரும் காழ்ப்புணர்வோடு நரேந்திரனை தோற்க்கடிக்க வழி தேடினர். தன் தம்பியின் வாழ்வின் பலகீனமான பகுதி எது என்று சிந்தித்தவர்கள், அவன் தன் மனைவியை இது வரையிலும் அரசவை கூட்டிக் கொண்டு வராததை குறித்து எண்ணி புதியதொரு திட்டம் தீட்டினார்கள்.ஏற்கெனவே கலந்து ஆலோசித்து வந்திருந்தவர்கள் சபையின் நடுவே தாங்கள் நரேந்திரனின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். நான்காவதாக இன்னொரு போட்டியை நடத்த வேண்டும் என்றும் கூறினர். வழக்கத்திற்க்கு மாறான இந்த விண்ணப்பத்தை கேட்டு அவையோர் வியப்புற்றனர்.

அதற்கு அவர்கள் கூறிய விளக்கம்," ஒரு நாட்டின் மன்னன் மட்டுமே வல்லவனாக இருந்தால் போதாது, அரசியும் கூட புத்திசாலியாகவும், பற்பல போர்க்கலைகள் பயின்றவளாகவும் இருப்பது அவசியம். எங்கள் மனைவியர் திருமணத்திற்க்கு பின்னர் இளவரசிகளுக்கு அளிக்கப் படும் பயிற்சிகளில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்று விட்டனர் ,ஆனால் நரேந்திரனின் மனைவி இது வரை அரசவைக்கு கூட வந்தது கிடையாது அவளுடைய திறமைகளை பரிசோதிக்க நான்காவதான போட்டி 3 இளவரசிகளுக்கும் இடையில் நிகழ வேண்டும். அதில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்களுக்கே நாட்டின் அரசியாகும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும்".

அவர்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் நான்காவதான போட்டிக்காக தன் தவளை மனைவியை அழைத்து வர நரேந்திரன் மனக் கலக்கத்துடன் புறப்பட்டான். போட்டியில் தோல்வியுறுவது குறித்தோ, தன் அண்ணன்கள் முதலாக அனைவரும் தன்னை கிண்டல் செய்யப் போவது குறித்தோ அவன் கவலைப் படவில்லை. ஆனால், தன் வயதான பெற்றோர்கள் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்றே அவன் துயரம் கொண்டான்.

மூத்த இளவரசர்களோ தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி தங்கள் மனைவிகளை மிக உற்சாகமாக போட்டிக்காக தயார் படுத்தினார்கள்.

காட்டில் குடிசையில் போய் சேர்ந்த நரேந்திரன் தன் தவளை மனைவியிடம் தாங்கள் அரண்மனை உடனே புறப்பட வேண்டிய அவசரத்தை கூறினான்.தனது குதிரையில் அவளை ஏற்றிக் கொண்டு பயணமானான். வழிப்பாதையில் ஒரு குன்றைக் கடந்து வருகையில் குதிரையின் வேகத்தின் காரணமாக அவன் பின்னே அமர்ந்திருந்த தவளை மனைவி கீழே விழுந்து விட்டதை அறிந்து, பதறியவனாக உடனே குதிரையை விட்டு இறங்கி அவளைத் தேடினான். புதர் ஒன்றில் அவள் முனகல் சத்தம் கேட்க அதை தொடர்ந்து தேடிச் சென்றால் அங்கு ஒரு மிக அழகிய பெண்ணைக் கண்டான். அவள் கூந்தல் வெகு நீளமாக சற்றுத் தள்ளி வரை பரந்து விரிந்து கிடந்தது. அந்த கூந்தலின் அருகில் அது என்ன வழ வழப்பான தோலைப் போல?!!!............திக்கென்று அதிர்ந்தவன் அவள் முகத்தை மறுபடியும் ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

அவள் அவனிடம் மிகப் பரிச்சயமான விதமாக புன்னகைத்து "என்னை தூக்கி விட மாட்டீர்களா இளவரசே?" எனக் கேட்டாள். அதே குரல்.... திகைப்பிலிருந்து வெளிவராதவனாக அவளை தூக்கி நிறுத்தினான். எழும்பி தன்னை சீர் செய்துக் கொண்ட அவள் அவன் முன்பாகவே கழன்று தனியே கிடந்த வழ வழப்பான தவளைத் தோல் போன்ற தோற்றம் கொண்ட உடையை அணிய ஆரம்பித்தாள்.

சுய நினைவிற்க்கு வந்த நரேந்திரன் என்ன இது? நீ யார்? என்று கேட்டான்.

" நான் தான் உங்கள் மனைவி இளவரசே"என்று அவள் பதிலிறுத்தாள். அப்படியென்றால் நீ தவளைப் பெண்ணில்லையா? நீ யாரென்று இப்பொழுதாவது சொல்வாயா? என கேட்டான். 

சொல்கின்றேன் இளவரசே, நான் மகிழ நாட்டின் இளவரசி நர்மதா தேவி.......

என்ன?... நீ மகிழ நாட்டின் இளவரசியா?........ சில மாதங்களுக்கு முன்பு உள் நாட்டுக் கலவரங்களால் மகிழ நாட்டின் சேனாதிபதி ஆட்சியை கைப் பற்றியதாக அறிய வந்தேனே... என்றான்.

ஆமாம் நீங்கள் கூறுவது மிகவும் சரியே, என் தாய் தந்தையை அந்த கொடிய சேனாதிபதி சிறையில் அடைத்து வைத்து உள்ளான். அவனிடமிருந்து தப்பித்து வந்த என்னை சில நாட்கள் இங்கு தங்கும் படி எமது ஆதரவு படையினர் கூறினர்.அதனால் தான் நான் அந்த குடிசையில் மறைந்து வாழ்ந்து வந்தேன்....

இந்த தவளை உடை.............

இது தலை மறை வாழ்வில் என்னை பாதுகாத்துக் கொள்வதற்கான எனது கவசமாகும் , எனக் கூறினாள்.

தன்னுடைய மனக் கவலைகள் அனைத்தும் நீங்கப் பெற்றவனாக ....நீ இவற்றையெல்லாம் என்னிடமிருந்து ஏன் மறைத்தாய் நர்மதா தேவி?........எனக் கேட்டான்.

"முதலில் நீங்கள் யார் என்று அறியாததால் பயத்தின் காரணமாக நான் என்னை வெளி ப்படுத்தவில்லை.பின்னர் உங்கள் பணிப்பெண் வாயிலாக உங்களைப் பற்றி அறிய வந்த போது உண்மையை சொல்ல எண்ணினேன்.ஆனால் அந்த நேரத்தில் தான் உங்கள் போட்டிகளில் ஆரம்பமாகின. நான் உண்மை சொல்வதால் உங்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இது வரை நான் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்." எனக் கூறினாள்.

" உன் பாதுகாப்பிற்காக தவளை உடையை இனி நீ அணிய வேண்டிய அவசியமில்லை இளவரசி, உன்னை நான் பாதுகாப்பேன்.உன் தாய் தந்தையை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் ஆலோசிப்போம். ஆனால் நாம் இப்போது மிக அவசரமாக அரண்மனைக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. செல்வோமா...எனக் கூறி அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

இளவரசி நர்மதா தேவி ஏற்கெனவே அரச குடும்பத்தை சார்ந்தவள் ஆகையால், எளிதாக அத்தனை போட்டிகளிலும் வினிதா தேவியையும், மாலினி தேவியையும் வென்றாள்.

இளவரசர்கள் வீரேந்திரனும் , சுரேந்திரனும் இத்தகைய ஒரு திருப்பம் நிகழும் என எதிர்பார்க்காத காரணத்தால் தோல்வியை ஏற்றுக் கொண்டனர்.

அதிசய நாட்டின் ராஜா ராணியாக முடி சூட்டப்பட்ட நரேந்திரனும், நர்மதா தேவியும் மகிழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சேனாதிபதியை வீழ்த்தி நர்மதா தேவியின் தாய் தந்தையை சிறை மீட்டு அவர்கள் நாட்டை அவர்கள் வசம் ஒப்படைத்தனர்.

மேலும் தங்கள் அதிசய நாட்டை மிக சிறப்பான முறையில் வழி நடத்தி, மக்கள் மனங்கள் மகிழும்படி நீண்ட ஆண்டுகளாக நல்லாட்சி செய்து வந்தனர்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.