(Reading time: 14 - 27 minutes)

தங்கமாலாவும்--பஞ்சகல்யாணியும்.... - தங்கமணி சுவாமினாதன்

முன்னொரு காலத்தில் மரகதபுரி என்றொரு நாடு இருந்தது.என்ன பட்டூஸ் மரகதம்னா என்னன்னு தெரிலன்றீங்களா?மரகதன்னா இந்த வைரம் வைடூரியம் போல ஒரு விலை உயர்ந்த கல்.அது பச்சைக் கலர்ல இருக்கும்.இப்ப புரிஞ்சிதா?இந்த மரகதபுரியும் பேருக்கு ஏத்தாமாறி ரொம்ப பசுமையா வளமையா இருந்திச்சி.அந்த நாட்ட சந்திர வர்மன் அப்பிடிங்கிற ராஜா ஆண்டுக்கிட்டு வந்தான்.

ராஜா பேரு என்ன?கரெக்ட்...சந்திர வர்மன்.அவன் ரொம்ப ரொம்ப நல்ல ராஜா.நாட்டு மக்கள் எல்லாருக்கும் ராஜாவ ரொம்ப பிடிக்கும்.அந்த நாட்டுல எல்லாருமே சந்தோஷமா இருந்தாங்க.

ஆனா பாவம் அந்த ராஜாக்கு கொழந்த இல்ல.அதுனால ராணிக்கு ரொம்ப வருத்தம்.ராஜாக்கும்தான்.

flying Horseகொழந்ததை இல்லைன்னு ராஜாவும் ராணியும் வருத்தப் படரத பாத்து நாட்டு மக்களுக்கும் வருத்தம்தான்.அந்த ஒரு குறைதான் எல்லாருக்கும் இருந்திச்சி.மக்கள் எல்லாரும் ராஜா ராணிக்கு ஒரு கொழந்தைய குடுன்னு சாமிண்ட வேண்டிக்கிட்டே இருந்தாங்க.இப்பிடீ காலம் போச்சு.

ரு நாளைக்கு ராஜா சந்திர வர்மன் என்ன ப்ணணாரு காட்டுக்கு வேட்டையாடப் போனாரு.அவரோட கூட சேனாதிபதி,மந்திரிங்க சிலபேரு,நிறைய வீரர்களும் போனாங்க.காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயி நிறைய மிருகங்கள வேட்டையாடினாங்க.ரொம்ப தூரம் நடந்து போயி வேட்டையாடினதால எல்லாருக்கும் ரொம்ப களைப்பா இருந்திச்சி. அப்பிடிதானே இருக்கும் பட்டூஸ்?அதுனால அவங்கெள்ளாம் ஒரு இடத்துல ரெஸ்ட் எடுத்தாங்க.அப்ப என்னாச்சு தெரியுமா?அவங்க எல்லாரும் ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்தாங்கள்ல அந்த எடத்துக்கு கொஞ்ச தூரத்துலேந்து ஒரு குட்டிப் பாப்பா குவா..குவான்னு அழுவுர சத்தம் கேட்டிச்சி.இது என்னடா அதிசயமா இருக்கு?காட்டுக்குள்ள கொழந்த அழுவுர சத்தம்ன்னு எல்லாரும் அதிசயப் பட்டாங்க.ராஜா ரெண்டு மூணு வீரர்கள அனுப்பி பாத்துட்டு வரச் சொன்னாரு.அவங்களும் கொழந்த அழுவுர இடம் னோக்கி போனாங்க.

அங்க ஒரு பெரிய மரம் இருந்திச்சி.அந்த பெரிய மரத்துக்குக் கீழ அன்னப் பறவயோட சிறகவிட மிருதுவான பட்டுத் துணியில சுத்தப்பட்டு குழந்த ஒண்ணு கிடந்திச்சு.அழகு அழகு அப்ப்டி ஒரு அழகான குழந்தை அந்த குழந்தை.அந்தக் குழந்தையோட கழுத்துல தங்கத்தால செய்யப்பட்ட மாலை ஒண்ணு கிடந்திச்சி.அந்த மாலையில குட்டிக் குட்டியா தங்கத்தால செய்யப்பட்ட ருத்திராட்சங்கள் கோத்திருந்திச்சி.அந்த மரத்தோட கிளைங்களுக்கு இடையே நுழையும் சூரியனோட வெளிச்சம் அந்த மாலையில பட்டு அந்த தங்க மாலை பள பளன்னு மின்னி கண்ணப் பறிச்சிது.

வீரர்களுக்குக்கெல்லாம் ஒரே அதிசயம் அந்த குழந்தைய பாத்ததும்.அந்த வீரர்கள்ல ஒருத்தன் ராஜா இருந்த இடத்துக்கு ஓடி வந்தான்.

மஹா ராஜா..மஹா ராஜா..அதிசயம் அதிசயம்ன்னு மூச்சிறைக்க சொன்னான்.

என்ன அதிசயமா?உடனே சொல் வீரனே என்று கேட்டார் ராஜா.

மஹாராஜா..அவ்விடத்தில் குழந்தை ஒன்று உள்ளது.அக்குழந்தையின் அழகைப் பற்றி சொல்லவே இயலாது.....என்று சொல்லி முடிப்பதற்குள் ராஜா சந்திர வர்மன் சேனாதிபதி மற்றும் மந்திரிகளோடு குழந்தை இருக்கும் இடம் நோக்கிக் கிளம்பிட்டாரு.அந்த குழந்தை இருந்த எடத்துக்கு போன ராஜா குனிஞ்சு குழந்தைய பாத்தாரு.அது ஒரு பெண் குழந்தைன்னு புரிஞ்க்சிச்சு ராஜாவுக்கு.அதுவரைக்கும் அழுதுகிட்டுக் கிடந்த குழந்தை சட்டுன்னு அழுகைய நிறுத்திட்டு ராஜா மொகத்தப் பார்த்து சிரிச்சிச்சு.ஏற்கனவே ரொம்ப அழகாயிருந்த அந்த குழந்தஒதட்ட சுழிச்சிக்கிட்டு சிரிச்சப்ப அந்த அழகுல அங்க இருந்தவங்களுக்கெல்லாம் அப்பிடியே மயக்கமே வரமாதிறி ஆயிடுச்சி.அவ்வளவு கொள்ளை அழகு அந்த குழந்தை.கொழந்தைங்களே அழகுதான் அதிலயும் அதுங்க சிரிச்சா?அழகாதானே இருக்கும்..இல்லியா பட்டூஸ்?ராஜாக்கு கொஞ்ச நேரம் என்ன செய்யறதுன்னு புரில.ஒருவேள கொழந்தையோட அம்மாவும் அப்பாவும் இங்க எங்கையாவது இருப்பாங்களோன்னு வீரர்கள தேடிப் பாக்க சொன்னாரு.அப்பிடி யாரும் இல்லன்னு தெரிஞ்சதும் அந்த கொழந்தைய ரொம்ப ஆசையோட தானே தூக்கிக்கிட்டு அரண்மனைக்கு வந்தாரு.

ரண்மனைக்கு வந்த ராஜா குழந்தைய ராணிகிட்டக் காண்பிச்சு காட்டுல நடந்ததெல்லாம் சொன்னாரு.ராணிக்கு சந்தோஷம் தாங்க முடில.குழந்தைய ஆசையோடு தூக்கி நெஞ்சோட அணைச்சுக்கிட்டாங்க.அவங்க கண்ணுலேந்து தண்ணி தண்ணியா அருவி போல கண்ணீரு கொட்டிச்சு.குழந்தையோட கழுத்துல இருந்த தங்க மாலை டாலடிச்சிது.பளபளன்னு மின்னி கண்ணப் பறிச்சிது ராஜாக்கும் ராணிக்கும் அந்த குழந்தை தெய்வக் குழந்தையா தோணிச்சு.குழந்தை இல்லாத தங்களுக்கு ஆண்டவனே அந்தக் குழந்தைய கொடுத்ததா தோணிச்சி அவங்களுக்கு.குழந்தையோட கழுத்துல கிடந்த தங்க ருத்திராட்ச மாலைய ராணி கழற்ற முடியுமான்னு பாத்தாங்க.ஆனா என்ன அதிசயம் அந்த மாலைய கழற்றவே முடில.அது குழந்தையோட கழுத்தோட ஒட்டி இருந்தது.

நிச்சயமா இது ஒரு தெய்வக் குழந்தைதான்னு முடிவுக்கு வந்தாங்க எல்லாரும்.ராஜாவும் ராணியும் அந்த குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு யோசிச்சாங்க.கழுத்துல மாலையோடு பிறந்திருந்ததால குழந்தைக்கு "தங்கமாலா" அப்பிடின்னு பேர்வெச்சாங்க.குழந்தைய பாராட்டி சீராட்டி வளத்தாங்க.ராஜா வீட்டுல வளர்ர குழந்தயாச்சே..கேக்கணுமா?இளவரசி இல்லியா அவ.. சும்மா சூப்பரா வளந்தா இளவரசி தங்கமாலா.அற்புதமான அழகு அறிவு,ஆற்றல்,சண்டைப் பயிற்சி, பாட்டு,டான்ஸ்,ஓவியம் வரைதல் அப்பிடின்னு எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தாள் தங்கமாலா.இப்ப இளவரசி தங்கமாலாவுக்கு வயசு பதினாறு.ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... என்ன தெரியுமா அது..?இளவரசி தங்கமாலா பொறந்தப்போ ஒரு தங்க ருத்திராட்ச மாலையோடு பொறந்தாள்ள அது அவ கொஞ்சம் கொஞ்சமா பெரியவளா வளந்தப்போ அதுவும் அவளுக்கு ஏத்தாப்புல கொஞ்சம் கொஞ்சமா வளந்திச்சு.இப்பவும் அந்த மால அவ கழுத்துல ரொம்ப அழகா மின்னிக்கிட்டு இருக்குது.

ராஜா சந்திர வர்மனும் ராணியும் இளவரசி தங்கமாலாவுக்குத் திருமணம் செய்து வைக்கணும்

அவளுக்கு பதினாறு வயசாயிடுச்சுன்னு நெனச்சாங்க.பல நாட்டு இளவரசங்களப் பத்தி விசாரிச்சாங்க ஆனா தங்கமாலாவுக்குப் பொருத்தமான இளவரசன் யாருமே கிடைக்கல.ராஜாக்கும் ராணிக்கும் ரொம்ப கவலையாயிடுச்சி.

ரு நாளைக்கு அரண்மனை வாசலில் ஒரு குறிசொல்லும் குறத்தி வந்தா.அவ ராஜாவப் பாக்கணும்ன்னு சொல்ல ராஜாவும் அந்த குறத்திய உள்ளே வரச்சொன்னார்.அவ ராஜாகிட்ட இளவரசி தங்கமாலாவோட கைபாத்து அவளோட எதிர்காலம் பத்தி சொல்வதாக சொன்னா.

ராஜாவும் சரின்னு சொல்ல அந்த குறத்தி இளவரசி தங்கமாலாவோட கையப் பாத்தா.அடடா..அடடா ஆஹா..ஆஹா..அப்பிடின்னா.ராஜாக்கும் ராணிக்கும் அவ என்ன சொல்லப் போறான்னு தவிப்பா இருந்திச்சி.

கையில இருந்த குச்சியால இளவரசியின் கை ரேகைமேல தொட்டுத் தொட்டு இளவரசியின் எதிர் காலம் பற்றிப் பாட்டா பாட ஆரம்பிச்சா.ராஜாக்கும் ராணிக்கும் ஒண்ணும் புரில.அவ பாடி முடிச்சா.

அப்ப அந்த எடத்துல இருந்த பண்டிதர் ஒருவர் குறத்தி பாடிய பாட்டின் பொருளை ராஜா ராணிக்கு எடுத்துச்சொன்னார்.அதைக் கேட்டு ஆச்சரியத்தால் அசந்து போனார்கள் ராஜாவும் ராணியும்.

குறத்தி இளவரசியின் கை பார்த்து என்ன பாடினாள்ன்னு அந்த பண்டிதர் என்ன சொன்னார் தெரியமா..?

மஹா ராஜா..இந்த குறத்தி இளவரசி பற்றி சொன்னது இதுதான்.அதாவது நமது இளவரசி ஒரு சாதாரணமான பெண் இல்லை.ஓர் அதிசயமான அற்புதமான தெய்வீக பெண் என்றும் யாராலும் செய்ய முடியாத பெரும் சாதனைகளைச்செய்யவே அவர் பிறந்திருக்கிறார் என்றும் வெகு சீக்கிரமே அவர் அந்த சாதனைகளை நிகழ்த்துவாரென்றும் அவரால் பல அற்புதங்கள் நிகழுமென்றும் தனது பாட்டின் மூலம் கூறினார்.ஆனால் குறத்தி கூறிய மேலும் பல விஷயங்கள் என்னைத் திகைப்படையவே வைத்துள்ளன..மஹாராஜா என்றார் பண்டிதர்.

அப்படியா..அப்படியா?அந்த விஷயங்கள் என்ன பண்டிதரே..பரபரப்பாகக் கேட்டார் ராஜாசந்திர வர்மன்.

மஹாராஜா ..விரைவிலேயே அதிசயம் ஒன்று நடக்கப் போகிறதாம்.நம்து இளவரசி ஏழு மலை..ஏழு கடல் ஏழு தீவு தாண்டிச் செல்லப் போகிராறாம்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு சூனியக்காரியால் புதையுண்டு போன நாடு ஒன்று பூமிக்கடியில் உள்ளதாம்.அன்னாடு எட்டாம்தீவு என்றொரு தீவினடியில் புதையுண்டு கிடக்கிறதாம்.அன்னாட்டில் இந்த உலகத்தையே விலை கொடுத்து வாங்கக் கூடிய அளவுக்கு விலைமதிப்பில்லா புதையல் ஒன்று குவிந்து கிடக்கிறதாம்.

அப்புதையலை நம் இளவரசி ஒருவரால் மட்டுமே வெளியே கொண்டு வரமுடியுமாம்.அப்பெரும் புதையலை இளவரசி எடுக்கும் நாள் வெகு சீக்கிரம் னடக்கும் என்றும் குறத்தி சொன்னாள் என்றார்.

அப்படி புதயலை எடுத்தவுடன் சூனியக்காரியால் கல்லாக மாற்றப் பட்ட அன்னாட்டு மக்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்று எழுவார்களென்றும் கூறினாள் என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.