(Reading time: 7 - 14 minutes)

பாட்டி அவளையும், அவள் தேர்வுச் செய்த பெட்டியையும் பார்த்து மகிழ்ச்சியோடு, "மகளே, நீ வீட்டிற்கு போய் கதவை அடைத்துக் கொண்டு இந்தப் பெட்டியில் உள்ளதை நீயும் உன் வீட்டாரும் சுகிப்பீர்களாக" என்றுக் கூறினார்.அவளும் தான் சேகரித்த கீரைகளோடும் அந்தப் பெட்டியோடும் வீட்டிற்குள் வந்தாள். தன் பிள்ளைகள் வரும் முன்னே உணவை தயாரித்தாள். பின்னர் கதவை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியைத் திற்ந்தாள். என்ன ஆச்சரியம்!!! அந்த சிறுப் பெட்டியில் வைரங்களும் வைடூரியங்களும், சின்ன சின்ன விலை மிகுந்த நகைகளும் இருந்தன. அன்றே அவளது வீட்டின் வறுமை தீர்ந்து விட்டது. அவளும் அவள் குடும்பத்தினரும் மிகவும் நிறைவாக வாழ்ந்து வந்தனர்.

 தங்கையின் திடீர் வளமான காரணத்தை தெரிந்துக் கொள்ள அக்காவிற்கு வெகுவாக ஆர்வம் ஏற்ப்பட்டது. உடனே மிக அன்பாக தங்கையின் வீட்டிற்குச் சென்று அதன் காரணத்தை கேட்டறியலானாள். தங்கையும் கள்ளம் கபடம் இல்லாதவளாக தான் கீரைப் பறிக்கச் சென்றதையும் அங்கு பாட்டியை சந்தித்ததையும், பாட்டி பெட்டி ஒன்றை எடுக்கச் சொன்னதையும், தான் இருப்பதிலேயே சிறிய பெட்டியை எடுத்து வந்ததையும், பாட்டி தன்னை கதவை அடைத்துக் கொண்டு திறக்கச் சொன்னதையும் என எல்லாவற்றையும் கூறினாள்.

 முகத்தில் புன்னகையை வைத்துக் கொண்டு கேட்டாலும் அக்கா மனதிற்குள் தங்கையை திட்டிக் கொண்டிருந்தாள். 

"மடைச்சி, மடைச்சி, சின்ன பெட்டியை எடுத்து வந்திருக்கா.......நானா இருந்தா......" என்று நினைக்கும் முன் அவள் மனதில் திட்டம் ஒன்று உருவானது. விடைபெறும் போது,

" பார்த்தியா என்ன இருந்தாலும் என்னால தான் நீ பணக்காரியா ஆகியிருக்க அதை நீ மறந்துடாத, நான் மட்டும் அன்னிக்கு உனக்கு அரிசி திரும்ப தந்திருந்தா நீ இப்போ பணக்காரியா ஆகியிருக்க முடியுமா?" என்று பேசி விட்டுச் சென்றாள். அக்காவின் குணத்தை நன்கு அறிந்திருந்த தங்கை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 அக்கா தனது திட்டத்தின் படி அடுத்த நாள் சாயங்காலம் தங்கைச் சென்ற அதே இடத்திற்கு கீரைப் பறிக்கச் சென்றாள். தான் மிகவும் ஏழை என்று காட்டும் விதமாக கிழிந்த சேலை ஒன்றை அணிந்துச் சென்றிருந்தாள். பாட்டியும் அங்கே வந்திருப்பது யார் என்று அறிந்துக் கொள்ள அங்கே வந்தார்கள். காரணம் கேட்டதும் அக்கா பொய்யாக அழுது, தான் மிகவும் ஏழை என்றுச் சொல்லி அதனால் தான் உணவிற்காக கீரைப் பறிக்க வந்திருப்பதாக சொன்னாள். பாட்டி அவளிடம்,

" கவலைப் படாதே மகளே, நான் உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன். என்னோடு என் வீட்டிற்கு வா என்றுச் சொல்லி தன்னுடன் கூட்டிச் சென்று,

"மகளே, வீட்டுக்கு உள்ளே போய் உனக்கு எது தேவையோ அதை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு வா" என்றுச் சொல்லி அனுப்பினார்கள்.

 அவ்வளவு நேரம் அதற்காகவே காத்துக் கொண்டிருந்த அக்கா அதி விரைவாக வீட்டுக்குள் நுழைந்து தேடத் தொடங்கினாள். அந்த வீட்டில் இருப்பதிலேயே மிகப் பெரிய கூடை ஒன்று ஓரமாக வைக்கப் பட்டு இருந்தது. அக்கா மனதிற்குள்ளாக ,

" இந்த கிழத்திற்கு எவ்வளவு மோசமான புத்தி பாரேன், இருப்பதிலேயே பெரிய பெட்டியை இப்படி ஒளித்து வைத்திருக்கிறது .ஏதோ நான் புத்திசாலியாக இருந்ததால் கண்டு பிடித்து விட்டேன் "என்று குதூகலித்தாள். அந்தப் பெட்டியை மிகவும் கஷ்டப் பட்டு இழுத்து வெளியே கொண்டு வந்தாள்.

 அவளையும் அந்தப் பெட்டியையும் பார்த்த பாட்டிக்கு முகம் மாறியது, ஆனாலும் அவளிடம் , மகளே, நீ வீட்டிற்கு போய் கதவை அடைத்துக் கொண்டு இந்தப் பெட்டியில் உள்ளதை நீ மட்டுமே சுகிப்பாயாக" என்றுக் கூறினார்கள். அவளும் மனதிற்குள், 

"ஆமாம் நான் மட்டும் தான் சுகிப்பேன், பிறகு என் வீட்டுக்காரருக்கு ஏன் நான் கஷ்டப் பட்டு கொண்டு வந்த பரிசைக் கொடுக்கணும்" என்று நினைத்துக் கொண்டாள்.

 வெகு சிரமப் பட்டு அந்தப் பெட்டியை எப்படியோ வீட்டுக்குள் கொண்டுச் சென்ற அக்கா, கதவை , ஜன்னல்களை இறுக மூடினாள். ஆர்வத்தோடு அந்தப் பெட்டியைத் திறந்தாள். அதனுள்ளே இருந்தது மிகப் பெரிய கொடிய விஷமுள்ள பாம்பு, அந்நேரம் வரை தன்னை கூடையில் அடைத்து வைத்திருந்ததால் ஏற்கெனவே அது சீறிக் கொண்டிருந்தது . பெட்டியை திறந்ததுமே உள்ளே ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தவளை தப்பிக்க வாய்ப்பேக் கொடுக்காமல் மாறி மாறி கொத்தியது. அளவுக் கடந்த பேராசைக் கொண்ட அக்காவின் உயிர் அங்கே உடனே பிரிந்தது.

தன்னிடம் இருப்பதில் நிறைவுக் கொள்ளாததால் தன்னுடைய வாழ்க்கையையே அவள் இழந்து விட்டிருந்தாள்.

பின்னுரை: ப்ரண்ட்ஸ் இது என் பாட்டி அம்மாவிற்கு சொன்ன கதை. பழைய காலத்துக் கதை அதனால் தான் கொஞ்சம் வயலன்ஸ்...பொருத்தருள்க :)

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.