(Reading time: 6 - 11 minutes)

காட்டிற்கு அருகாமையிலேயே ஒரு ஆறு ஓடிக் கொண்டு இருந்தது. அவன் உடனேயே,

“அப்பா , அப்பா இந்த ஆறு எங்கே போகிறது?” என்றுக் கேட்டான்.

ஏற்கெனவே அவன் கேள்விகளால் எரிச்சலுற்றிருந்த அவன் தந்தை அவனிடம் கோபத்தில்,

“ அதுவா, அது உன் பேத்தியா (பாட்டி) வீட்டு புழக்கடைக்கு (வீட்டின் பின்புறம்) செல்கிறது என்றுச் சொன்னார்.

"அப்படியா" என்றுக் கேட்டவன் மறுபடியும் மாறி மாறி பற்பலக் கேள்விக் கேட்க அவன் அம்மா , அப்பா அவனுக்கு பதில் சொல்ல என்று ஒரு வழியாக அவர்களுக்கு தேவையான கம்புகள் கிடைக்கும் மரங்களின் அருகே வந்துச் சேர்ந்தனர்.

கோபாலின் பெற்றோர் கம்புகளை வெட்டி வெட்டி வந்து ஒரு இடத்தில் சேர்க்க, அவனோ உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு காட்டில் உலாவிக் கொண்டு இருந்தான். சீக்கிரமே அவனுக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது. அவன் தன் அம்மாவிடம் போய்,

“அம்மா எனக்கு பசிக்குதும்மா..” என்றான்.

அம்மாவும் அவனுக்கு கட்டுச் சோற்றைக் கொடுத்து,

“இங்க பாரு கோபாலு , நீ சாப்பிட்டுட்டு பாதி சோறை எங்களுக்கு வச்சிடு என்ன? என்றுச் சொல்லிச் சென்றார்.

அவனும் சாப்பிட்டு முடித்தான்.

அவனுடைய பெற்றோருக்கும் பசிக்கவே அவர்கள் சாப்பிட அவனிருந்த இடத்திற்கு வந்தனர்.

“கோபாலு, கோபாலு, எங்க மீதி சோறை இங்க தா, எங்களுக்கு பசிக்குது” என அம்மா கேட்க அவன் ,

“அம்மா, மீதிச் சோறு இங்க இருக்கு பாருங்க” என அவர்களுக்கு ஒரு முள்செடியைக் காட்டினான். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்னடா சொல்லுற? எனக் கேட்கவும்,

“ஏம்மா நீங்க தான சொன்னீங்க பாதிச் சோறை உங்களுக்கு மீதி வைக்கணும்னு………”

“ஆமாடா:

அதான் நான் மித்த சோறெல்லாம் தின்னுட்டு, இந்த முள்ளுல பாதிச் சோற உங்களுக்கு வச்சிருக்கேன் பாருங்க…..” எனவும் தான் அந்த முள் செடியில் ஒரு சோற்றில் பாதிப் பருக்கைச் சோற்றை அவன் குத்தி வைத்திருப்பது அவர்களுக்கு தெரிந்தது.

உழைத்துக் களைத்து வந்தவர்களுக்கு தங்களுக்கு மீதி வைக்காமல் மொத்தச் சோற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட மகனை என்ன செய்வது என்றே தெரியவில்லை, அவனுடைய தந்தைக்கு கோபம் வர அவனை அடிக்க விடாமல் அம்மா பார்த்துக் கொண்டார்கள்.

“நாம அவங்க சொன்ன மாதிரி தான செஞ்சோம், பின்ன எதுக்கு அப்பாக்கு கோபம் வந்துச்சு” என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் கோபால்.

சரி சரி, சீக்கிரம் கம்பு சேகரிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம், வீட்டுக்கு போய் சமைச்சு சாப்பிடலாம்” என்று கோபாலின் அம்மா தன் கணவரிடம் சொல்லவும் அவர்கள் மறுபடியும் தங்கள் வேலையில் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வேலையை முடித்து விட்டு திரும்பச் செல்ல வந்தார்கள். நாள் முழுவதும் பாடுபட்டு, பசியில் வருந்தி கடுமையாக உழைத்து சேர்த்து வைத்திருந்த கம்புகள் ஒன்றையும் அதன் இடத்தில் காணவில்லை.. தூரத்தே பார்த்தால் ஆற்றின் ஓரம் அமர்ந்து கோபால் கையிலிருந்த கம்புகள் ஒவ்வொன்றாக ஆற்றில் விட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா செய்யிற?” எனப் பதறிக் கொண்டு அவர்கள் அவனிடம் செல்லும் முன் அவன் தன் கையிலிருந்த கடைசி கம்பையும் ஆற்றில் விட்டு விட்டான்.

அதிர்ச்சியில் என்னடா இப்படிச் செஞ்சிட்ட?” என்றுக் கேட்ட தந்தையிடம் வெகு சாதாரணமாக,

"அது வேற ஒண்ணுமில்லப்பா, இந்த கம்புகளையெல்லாம் என் பேத்தியா வீட்டு புழக்கடைக்கு அனுப்பிட்டு இருக்கிறேன். நாம சுமந்துட்டு போக வேண்டாம் அங்க போயி எடுத்துக்கலாம் எப்படி என்னோட யோசனைனு" கேட்கவும்,

அப்படியா இப்போ எனக்கும் ஒரு யோசனை வந்திருக்கு, நீ எங்க அந்த கம்பையெல்லாம் அனுப்பி வச்சியோ அங்கேயே நீயும் போய் சேரு" என்றுச் சொல்லி அவனைத் தூக்கி ஆற்றில் எறிந்து விட்டார்.

ஐயையோ, அதுக்கு பிறகு என்னாச்சுனு கேட்கறீங்களா? அதை நான் அடுத்த பகுதியில் சொல்றேன்.                                      

தொடரும்

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.