(Reading time: 6 - 12 minutes)

மெல்ல சுதாரித்துக் கொண்டு எழுந்த சுரேஷ், எப்படியோ சமாளித்துக் கொண்டு ஓட தொடங்கினான். ஆனாலும் அவனால் கதிரவனை வெல்ல முடியவில்லை.

கதிரவன் முதல் ஆளாக தூரத்தை கடந்து வெற்றி பெற்றான்!

சுரேஷ் இரண்டாவதாக வந்து சேர்ந்தான்!

சுரேஷால் கதிரவன் செய்ததை நம்ப முடியவில்லை!

அங்கே நின்றிருந்த குமரேசனின் முகத்திலும் ஏமாற்றம் இருந்தது. ஆனாலும் சுரேஷை தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.

ஆனால் ஏமாற்றத்தில் இருந்த சுரேஷால் அமைதியாக இருக்க இயலவில்லை.

“சார், கதிரவன் என் காலை தடுக்கி விட்டதால தான் நான் இரண்டாவது வந்தேன் சார்” என்று குமரேசனிடம் புகார் அளித்தான்

இதை எதிர்பார்த்திருந்த கதிரவன் பதிலையும் தயாராக வைத்திருந்தான்.

“சார், அவன் ஜெயிக்கலைன்னு வீணா என் மேல புகார் சொல்றான் சார். அவனுக்கு அந்த அளவுக்கு அந்த முதல் பரிசு வேண்டுமென்றால் அதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று நல்லவனை போல பேசினான்.

கதிரவன் சொன்னதைக் கேட்டு கோபத்துடன் சுரேஷை பார்த்தார் குமரேசன்.

“சுரேஷ், கதிரவன் சொன்னதைக் கேட்டாயா? போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணம். அதற்காக இப்படியா பொய் பேசுவது?” என்று அவனை கடிந்துக் கொண்டார்.

சுரேஷிற்கு வருத்தமாக இருந்தது.

அத்தனை முயற்சி செய்தும் ஒரு பொய்யை ஏற்று கதிரவனை வெற்றியாளன் ஆக்கி விட்டார்களே என்று மனதினுள் வருந்தினான்.

அந்த நேரம் அங்கே திடீர் என்று பரபரப்பானது.

இரண்டு மூன்று ஆசிரியர்கள் குமரேசனிடம் ஒரு தாளை காட்டி பேசினார்கள்.

அவரும் கையை அசைத்து சுரேஷ் பக்கமாக காட்டி எதுவோ சொன்னார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றிருந்தான் சுரேஷ்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து அவனருகே வந்த குமரேசன்,

“சுரேஷ் உனக்கு தான் முதல் பரிசு” என்றார்!

“சார்!!!” என நம்ப முடியாமல் நின்றான் சுரேஷ்.

“கதிரவன் போட்டியை முடித்த போது வந்தது ஐந்தாவது ட்ராக்கில். என்ன பார்க்கிறாய், புரியவில்லையா? அது உன்னுடைய ட்ராக்! அவன் ஓட தொடங்கியது நான்காவது ட்ராக்கில்”

சுரேஷ் தன் காதுகளில் விழுந்ததை நம்ப முடியாமல் அமைதியாக நின்றான்.

“நீ சொன்னது உண்மையாக இருக்க வேண்டும் சுரேஷ்! உன்னை தடுக்கி விழ செய்த போது கதிரவன் ட்ராக் மாறி ஓடி இருக்க வேண்டும். என்ன செய்து என்ன, ஏமாற்றி ஜெயிக்க முடியாதே! எப்போதும் வாய்மையே வெல்லும்! அவனை தகுதி நீக்கம் செய்தாகி விட்டது! உனக்கு தான் பரிசு! வாழ்த்துக்கள்” என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி நகர்ந்த சுரேஷின் மனதில், பரிசு கிடைத்த சந்தோஷத்துடனே, ஆசிரியர் சொன்ன ‘வாய்மையே வெல்லும்’ கூட நன்கு பதிந்து இருந்தது.

ஆம், நேரான பாதையில் செல்லாமல் தீய திட்டம் தீட்டிய கதிரவனை வீழ்த்தி அவன் சொன்ன உண்மையும், அவனின் கடின உழைப்பும் வெற்றியை தேடிக் கொண்டு வந்து தந்து விட்டதே!

குமரேசன் சார் சொல்வது சரி தான்!

வாய்மையே வெல்லும்!

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.