(Reading time: 13 - 25 minutes)

“இந்த தட்டில இருக்கிற சாப்பாட்டுல எத்தனை பேரோட உழைப்பு இருக்கு தெரியுமா வீணாக்கக் கூடாது.சாப்பிடுமா அஸ்வின் சமர்த்துல்ல!படத்துக்கு வேற நேரமாகுதுல்ல!”

உட்கார்ந்து மீதம் வைத்த மசாலா தோசையையும், மெதுவடையையும் சாப்பிட்டான்

சர்வருக்கு டிப்ஸ் வைத்துவிட்டு எழுந்தாள் அம்ருதா.

சினிமா காம்ப்ளெக்ஸ் உள்ளில்  நுழைந்தார்கள். "மீண்டும் அம்மன்" படம் தான் அம்ருதா முடிவு செய்து வைத்திருந்த படம்.

அம்மா!இந்த படம் வேண்டாம்!வீட்டுக்கு வாங்க, இந்த படத்தில இருக்கிற கிராபிக்சை விட அப்பா செல்போன்ல இருக்கிற கேம்ஸ்ல கிராபிக்ஸ் நல்லா இருக்கும்.அதைப் பார்ப்போம்.

அப்பா டிரான்ஸ்பார்மர்ஸ் வந்திருக்குப்பா நாம அதப் பார்க்கப் போவோம் என்றான் அஸ்வின்.

ஒண்ணா படம் பார்க்கத் தானே வந்திருக்கோம். ஒழுங்கா என்கூட "மீண்டும் அம்மன்" பார்க்க வாங்க என்று அம்ருதா கூப்பிட மூவரும் உள்ளே  சென்றார்கள். அந்த தியேட்டர் காம்ப்ளக்ஸ் வீட்டருகே உள்ளது தான். ஆனாலும் அவர்களுக்கு எப்போதாவது தான் படம் பார்க்க நேரம் கிடைக்கும். தியேட்டர் உள்ளே சென்றனர். விளம்பரங்கள் ஓடிக் கொண்டு இருந்தன. விளக்குகள் அணைந்து படம் தொடங்கியது. படத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். அஸ்வினும் ராமும் வாசலை ஒட்டி இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள் அம்ருதா. பகல் காட்சி என்பதால் மொத்தமே இருபத்தைந்து முதல் முப்பது பேர் தான் இருந்தனர். படத்தில் பின்னணி இசை அமைதியாக இருக்கும் போது, “விர்ரூம் விர்ரூம்”  என்று கார் ரேஸ் சத்தம் போல கேட்டது. படத்தில் தான் இருக்கும் என்று முதல்முறை நினைத்தாள் அம்ருதா.

மீண்டும் ஒரு முறை கேட்டது. சட்டென்று அவளுக்கு முன் வரிசையில் அமைந்திருந்த வயதான தம்பதி திரும்பிப் பார்த்தனர்.எல்லாருக்குமே அந்த சத்தம் விசித்திரமாகத் தான் இருந்தது, படத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் அந்த ஒலி தொடர்ந்து கேட்டது. அருகில் இருந்த ராமும்,அஸ்வினும் இருக்கையில் இல்லை. மூன்றாம் முறை அந்த “விர்ரூம் விர்ரூம்” சத்தம் கேட்டது. அம்ருதா தனது இருக்கையை விட்டு எழுந்தாள். வெளியே வந்து படியேறி ஆபரேட்டர் அறைக்குச் சென்றாள். கதவைத் தட்டினாள். ஆபரேட்டர் கதவைத் திறந்தார்.

"என்னம்மா வேணும்? எதுக்குக் கதவைத் தட்டினீங்க?

"படம் ஓடும் போது விர்ரூம் விர்ரூம் ன்னு கார் வேகமாப் போற சத்தம் மாதிரி கேட்குதே!"

"ஒண்ணுமில்லைம்மா பிரிண்ட் சரியில்லை!"

"ஏன் சரியில்லாத பிரிண்ட் போடுறீங்க? இருங்க நான் பார்க்கிறேன்!"

ப்ரொஜெக்டர் அருகே இருந்த கணினியில் கார் ரேஸ் ஓடிக் கொண்டு இருந்தது.

"ஓஹோ!இங்கே இது ஓடுற சத்தம் தானா?"

நீங்க தான் விளையாடிட்டே படம் பார்க்கிறீங்களா? இருங்க எல்லார்கிட்டயும் போய் சொல்றேன்.

ஐயோ நான் இல்லமா!பிரிண்ட் தான் சரியில்ல!

திரையின் கீழ் இரண்டு ஜோடி கால்கள் தெரிந்தன.

ஓ அப்படியா சரி!பிரிண்ட் சரி இல்லன்னு படம் பார்த்துட்டு இருக்கிறவங்ககிட்ட சொல்லிர்றேன். மறுபடியும் காட்சி நடந்த அரங்கில் நுழைந்தாள் அம்ருதா. முன்னால் போய் நின்றாள், "பிரிண்ட் சரியில்லையாம்!அதான் அந்த விர்ரூம் விர்ரூம் சத்தம்!" காசு கொடுத்து நாம் ஏன் சரி இல்லாத பிரிண்ட்ல படம் பார்க்கணும். வாங்க மேனேஜர் கிட்ட போய் பேசுவோம். எல்லாரும் எழுந்தார்கள். கசமுசா வென்று பேச்சுச் சத்தம். வாங்க போய் கேட்கலாம் என்றார் அந்த வயதான பெரியவர். மேனேஜர் மாலைக் காட்சிக்கு இலவச அனுமதியும், இப்போது கட்டிய கட்டணத்தைத் திரும்பித் தருவதாகவும் சொல்ல, எல்லாரும் ஒப்புக் கொண்டனர்.எல்லாரின் பெயரையும்,தொலைபேசி எண்ணையும் அங்கிருந்த உதவியாளரிடம் எழுதி வாங்கிக் கொள்ள சொன்னார்.

"யார் இப்படித் தொல்லை பண்றது?" என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே வாங்கிக் கொண்டாள் அந்த உதவியாளர் பெண்.

"யாரோ ஒரு பொம்பளை! வேலை வெட்டி இல்லாம!" என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே தன்னிடம் பெயர், முகவரி எழுதிய தாளை நீட்டிய கையிடம் இருந்து வாங்கினாள்.

நிமிர்ந்து பார்த்ததும், "மேடம் நீங்களா? எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"நான் நல்லா இருக்கேன்மா! காலேஜ்லாம் எப்படிப் போகுது?"

"நல்லாவேப் போகுது மேடம்! நீங்க எந்த படம் பார்க்க வந்தீங்க!"

இப்போ திட்டிட்டு இருந்தியே அந்த வேலை வெட்டி இல்லாம வந்த பொம்பளை நான் தான் என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தாள் அம்ருதா.

"ஐயோ சாரி மேடம்!நான் சும்மா சொன்னேன்!"

“பரவயில்லைமா! நல்லா படி!நான் கிளம்பறேன்!”

"சரி மேடம்"

அந்தப் பெண்ணிடம் விடைபெற்று கிளம்பினாள் அம்ருதா. வீடு நடக்கும் தூரம் தான். கதவைத் திறந்தாள். வீட்டுக்குள் அதே கார் ரேஸ் சத்தம். ஆத்திரமாக வந்தது அம்ருதாவுக்கு

"அப்பாவுக்கும் மகனுக்கும் வேற வேலையே இல்லையா?"

"உங்கள் விளையாட்டால் தியேட்டரில் ஒரு காட்சியே நஷ்டம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.