(Reading time: 13 - 25 minutes)

“உணவுங்கறது நம்மளோட அத்தியாவசியத் தேவை. ஒரு நாள் வீடியோ கேம்ஸ் விளையாடாம உன்னால் இருக்க முடியும். ஒரு நாள் முழுதும் உன்னால் சாப்பிடாம இருக்க முடியுமா? நிச்சயமா இருக்க முடியாது அஸ்வின்!” அது மட்டுமில்லாமல், “நீ சாப்பிடணும் உழைக்கிறவங்க உன்கிட்ட இருந்து பணம் நிறைய சம்பாதிக்கணும்ன்னு உழைக்கல. ஆனால் வீடியோ கேம்ஸ் தயாரிக்க உழைக்கிறவங்க நீ அடுத்த அடுத்த லெவல் விளையாடனும் உன்கிட்ட நிறைய பணம் சம்பாதிக்கணும்னு உழைக்கிறாங்க. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு அஸ்வின்.!” வீடியோ கேம்ஸ் விளையாடறது தப்பில்ல, அளவோடு விளையாடு, இந்த லெவல் அன்லாக் பண்ணனும் அப்படின்னு எந்நேரமும் விளையாடாத, அனாவசியமா பணம் நேரம் செலவழிக்காத!”

“எனக்குப் புரிஞ்சதும்மா. இனிமேல் எந்நேரமும் வீடியோ கேம்ஸ் விளையாடமாட்டேன்.! “

“நீ புரிஞ்சுகிட்டா அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். நேரமாச்சுல்ல, போய் தூங்கு அஸ்வின்.!” அம்ருதா சொல்லவும் அஸ்வின் தூங்கச்சென்றான்.

அஸ்வின் சென்றதும் ராம் உள்ளே வரவும், “நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க  ராம்,நான் அவனைக் கண்டிக்கும் போது அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. ஒரே பையன்னு அவன் செய்றதெல்லாம் சரின்னு விடுறது தப்பு. பாருங்க, இந்த உலகத்துல இருக்கிற இயற்கையான விஷயங்கள் கூட மனிதனோட பேராசையால் சுரண்டப்பட்டு இருக்கும்போது, எதையும் வீணடிக்கிறது ரொம்ப தவறுங்க. அதும் பலரின் கடின உழைப்பை வீண் பண்றது பாவம். விவசாயிங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க. உணவை மதிக்கணும்னு பிள்ளைகளுக்குப் புரியணுங்க. என்றாள்.

சரி அம்ருதா! நானும் உன் ஆதங்கத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். அவனை அவன் போக்கில் வளரவிடனுங்கறது எல்லா விஷயத்திலும் ஒத்துவராது என்பதையும் தெரிஞ்சிகிட்டேன். நீ கவலைப்படாத!  அவன் வளர வளர இன்னும் புரிஞ்சிப்பான். நிம்மதியா இப்போ தூங்கு!” என்றான் ராம்.

றுநாள் காலை மணி ஐந்தரை. எப்போதும் போல் விழிக்கும் நேரம் தான், பால் பாக்கெட்டை எடுக்கலாம் என்று அவள் வாசற்கதவை நோக்கி நடந்து வரும் போது, "விர்ரூம்!விர்ரூம்!" என்று கார் ஓட்டுவது போல் அஸ்வின் குரல் கேட்டது.

"எவ்வளவு சொல்லியும் அதிகாலையிலேயே வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சிட்டானா? கோபமாக வந்தது அம்ருதாவுக்கு"

"அஸ்வின்! அஸ்வின்!" என்று குரல் கொடுத்துக்கொண்டே அவனது அறையை எட்டிப்பார்த்தாள் .அங்கே அவன் இல்லை. எங்கே இருக்கிறான்? என்று எண்ணியவாறே அவள் ஜன்னல் வழியே பார்த்தபோது..

தோட்டத்தில் இருந்த உதிர்ந்த சருகுகளைச் சுத்தமாக பெருக்கிக் கொண்டு இருந்தான்.

"என்ன அஸ்வின்! நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"என்னோட வயசுக்கு என்னால் முடிஞ்ச உழைப்பும்மா! நீங்க சொன்னத நல்லா புரிஞ்சிகிட்டேன். நம்ம தோட்டக்கார அண்ணன் காய்கறிச் செடிகளை தன்னோட உழைப்பால நல்ல காய்கள் தர வைக்கிறாரு. அவரே தான் இந்த இடத்தைச் சுத்தம் பண்ணிட்டு இருந்தாரு. இது மாதிரி என்னால் முடிந்த சின்ன சின்ன வேலைய நானும் செய்யப் போறேன்!"

கையில் காபி கோப்பையை ஏந்தி வந்த ராம், அம்ருதாவிடம் நீட்டி,

"அம்ருதா, இன்னிக்குத் தெரிஞ்சுட்டேன் ஒரு துளிகூட வீணாகாதுன்னு"

"என்னது காபியா? நீங்க எப்பவுமே நல்லாத்தானே காபி போடுவீங்க ராம்!"

"அதை சொல்லல அம்ருதா! அஸ்வினை நீ நல்ல மனிதனா உருவாக்கிற உன்னோட உழைப்பு!"

புன்னைகையுடன் அதை ஆமோதித்தாள் அம்ருதா.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.