(Reading time: 49 - 98 minutes)

"ஜாஃபர்... கட்கா கலையின் முதல் பாடமே தன்னம்பிக்கை தான்... என்னால, அவங்க தோட்டாக்களின் வேகத்தைத் தாண்டி ஓட முடியும்ன்னு நான் நம்புனேன். அதனால நான் ஓடுனேன். அவ்வளவுதான்... ரொம்ப சுலபம்."

“ஆர்யா... அந்த கட்கா கலையை நீ முழுசா கத்துக்கிட்டயா...???”

“இல்ல ஜாஃபர்... நான் இன்னும் அதோட ஆரம்பக் கட்டத்துல தான் இருக்கிறேன். இந்த முறை லீவ்ல போகும்போது, அதை எப்படியாச்சும் முழுசா கத்துக்கணும்ன்னு ஒரு வைராக்கியத்தொடு இருக்கிறேன்.”

“சூப்பர் ஆர்யா... நானும் இந்த முறை விடுமுறையை உன்னோடு கழிக்கலாம்னு ஆசைப்படறேன் ஆர்யா...” என்றான் ஜாஃபர்.

“டேய்... அப்புறம் உன்னோட ஆசைக் காதலி “மானஷா”வோட கதி... அவ ஏற்கனவே உன்ன பார்க்கனும்னு நெறையா தடவ இங்க வந்துட்டு போயிருக்கா... நீ வேற லீவ்ல எங்கூட வந்துட்டின்னா... அவளுக்கு என்னால பதில் சொல்ல முடியாதுடா...” என்று சிரித்தான் ஆர்யா.

மெல்ல சிரித்த ஜாஃபர், உடனே தன் பர்சில் இருந்த மானஷாவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்து, அதை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அதைப் பார்த்த ஆர்யா,

“என்னடா… மலரும் நினைவுகளா...???” 

“இல்லடா ஆர்யா... நானும், அவகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். இந்த இராணுவ வாழ்க்கைங்கறது என்னிக்குமே நிரந்தரம் இல்ல. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்ப என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது. அதனால நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிப் பார்த்துட்டேன். அவ கேட்கிற மாதிரி இல்ல... ஆனா, இப்ப என்னோட ஆசை கனவு எல்லாம், எனக்காகவே காத்துக்கிட்டிருக்கிற அவளை கரம் பிடிக்கிறது தான்...” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

“எல்லாம் நல்ல படியாக நடக்கும் ஜாஃபர்... நீ கவலைப் படாதே. கண்டிப்பா நீ அவள கை பிடிப்ப...” என்ற ஆர்யா, பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீளமான கம்பை எடுத்து, வேகமாக சுழற்ற ஆரம்பித்திருந்தான்.

“அதெல்லாம் இருக்கட்டும் ஆர்யா.... நீ என்ன முடிவு பண்ணிருக்க...?? உன்னோட ஆசை தான் என்ன...?”

சுழற்றிக் கொண்டிருந்த கம்பின் வேகத்தை சற்றும் குறைக்காத ஆர்யா,

“எனக்கு அந்த மாதிரி எல்லாம் ஒரு ஆசையும் இல்லை ஜாஃபர்... ”

“அப்புறம்... என்ன பண்ணலாம்ன்னு இருக்க ஆர்யா...??”

“என்னோட ஆசையெல்லாம், இந்த எல்லைப் பாதுகாப்புப் படையிலே என்னோட வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் ஜாஃபர்.”

“என்னடா சொல்ற...??” என்றான் ஜாஃபர்.

“ஆமாம் ஜாஃபர்... என் உயிர் இந்த எல்லையிலேயே பிரிந்து விடவேண்டும் என்று தான் நான் ஆசைப்படறேன். எனக்கு இந்த வெளி உலக வாழ்க்கை வாழ்றதுல ஒரு துளியும் ஆசை இல்லை. எந்த விதமான இலட்சியமுமே இல்லாமல் தனக்கென சுயநலமாக வாழ்கின்ற அந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் ஜாஃபர். ” 

என இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயம்,

சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ரா, காயமடைந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்வையிட்ட படியே மருத்துவக் கூடத்தில் விசிட் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரும்,

“ BSF – கான்ஸ்டபிள் வீர் பிரதாப்சிங் ஆர்யா ரிப்போர்ட்டிங் சார்...! “

“ BSF – கான்ஸ்டபிள் ஜாஃபர் காதிம் ரிப்போர்ட்டிங் சார்...! “ என்று சல்யூட் அடித்தவாறே அசையாமல் நின்றனர் . அவர்களை கையமர்த்திய அவர்,

“NO FORMALITIES, MY DEAR BOYS... WELL DONE. YOU GUYS DID A FANTASTIC JOB.” என்ற இருவரையும் கட்டியணைத்துக் கொண்ட அவர்,

“I AM REALLY PROUD OF YOU GUYS… அந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உங்க உயிரையும் துச்சமாக மதித்து அவர்களை வீழ்த்தியிருக்கின்றீர்கள். அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ” 

“தேங்க் யூ சார்...” என்று இருபுறமும் பதில் வந்திருந்தது.

“காயங்கள் ஆறும் வரை நீங்க ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. அதுவரைக்கும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயக்கமில்லாம கேளுங்க... YOU GUYS ARE DESERVE TO BE HONOURED”.

“சார்... அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை… மீண்டும், நாங்க ரெண்டு பேரும் எல்லையில் நிற்பதற்கு தயாராக இருக்கிறோம் சார்... எங்களுக்கு ஓய்வு தேவையில்லை சார்...” என்றான் ஜாஃபர்.

“இதெல்லாம் வெறும் சாதாரண காயம் தான் சார்... நாங்க தயாராக இருக்கிறோம் சார்...” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறே கூறினான் ஆர்யா.

அவர்களைப் பார்த்து புன்னகைத்த சஞ்சய் மிஸ்ரா,

“உங்களுடைய உணர்வுகளை நான் மதிக்கிறேன். இருந்தாலும் 100 சதவிகித உடல் தேர்ச்சி இல்லாமல், யாரையும் எல்லையில் நிறுத்த முடியாது என்பது நம் தேசத்தின் இராணுவ விதி. HOPE YOU GUYS UNDERSTAND.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.