(Reading time: 49 - 98 minutes)

உடனே “ஓகே... சார்...” என்ற குர்தாஸ் சிங் அங்கிருந்தவர்களை நான்கு தனித் தனி குழுக்களாகப் பிரித்து அவர்களை தேடுதல் பணியில் தீவிரப்படுத்தி அனுப்பியிருந்தார்.

ராணுவ மருத்துவக் கூடம். மதியம் 3 மணி.

"எவ்வளவு நேரம் தான் இந்த மெடிக்கல் கேம்ப்லயே, இப்படி சும்மா உட்கார்ந்துட்டு இருக்கிறது ஜாஃபர்…??? கை கால்கள் எல்லாம் மரத்துப்போய்விடும் போல் இருக்கிறது. " என்றான் ஆர்யா.

"வேற என்ன பண்ணலாம் ஆர்யா...?”

"வா... வெளியில போய் சுத்திப் பார்க்கலாம். இன்னிக்காவது, வெளி உலகத்தோட தொடர்பில இருக்க முயற்சி பண்ணுவோம். இதை விட்டா வேற சந்தர்ப்பமே கிடைக்காதுடா...! "

"சரி... எங்க போகலாம் ஆர்யா...?”

"பகத்சிங் நினைவிடம்..."

"டேய்... வெளியில போகிறதுக்கு நமக்கு அனுமதி கிடைக்குமா...?”

"அதெல்லாம், நான் நேற்றே பேசி வாங்கிட்டேன். பயப்படாம வா...! போகலாம்…" என்ற ஆர்யா ஜாஃபரை அழைத்துக் கொண்டு, அந்த ராணுவ மருத்துவக் கூடத்தின் நுழைவு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு ஐந்து நிமிட நடை பயணத்தில் அந்த பெரிய நுழைவு வாயில் வந்திருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விவரங்களை தெரிவித்துவிட்டு, மீண்டும் உள்ளே வருவதற்கான நேரம் குறிப்பிடப்பட்ட சீட்டையும் வாங்கி கொண்டு வெளியே வந்தார்கள் இருவரும்.

வெளியே தயாராக நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறியிருந்த அவர்கள், சரியாக இருபது நிமிடப் பயணத்தில், ஹுசைனிவாலா கிராமத்தின் தேசிய தியாகிகள் நினைவிடத்தை அடைந்திருந்தார்கள். 

"ஜாஃபர்... அதோ பார்...! பகத்சிங் நினைவிடம்... " என்று ஆர்யா கையைக் காட்டிய திசையில் அமைந்திருந்தது அந்த தேசிய தியாகிகள் நினைவிடம்.

தன் கைகளை மேலே உயர்த்தி, ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, வீர முழக்கமிட்டவாறே பகத்சிங்க்கும், அவரோடு கைகோர்த்தபடி ராஜகுருவும், சுகதேவும் அந்த தேசிய தியாகிகள் நினைவிடத்தில், கற்சிலைகளாக நின்றிருந்தார்கள். 

--தேசிய தியாகிகள் நினைவிடம். ஹுசைனிவாலா.

அந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை, சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தன. அந்த இடம் முழுவதிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

"இந்த இடத்தில் நிற்கும் போதே உடல் சிலிர்க்குது ஆர்யா...!” என்றான் ஜாஃபர்.

"நிச்சயமாக ஜாஃபர்...! நீ நிற்பது, விடுதலை புரட்சியின் வீர நாயகன், மீளாத் துயில் கொண்டிருக்கும் நினைவிடம் ஆயிற்றே...!"

"ஆமாம் ஆர்யா... வெறும் 23 வயதில், இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையே அர்ப்பணித்த ஒரு புரட்சி இளைஞன் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தியாகத்தை நினைத்துப் பார்க்கும் போது, நாம் எவ்வளவு ஒரு அற்பத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது ஆர்யா... " 

ஒரு அரை மணி நேரத்தை, அந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே உலாவி செலவிட்டிருந்த அவர்கள், கடைசியாக அந்த இடத்தை தொட்டு வணங்கிவிட்டு கொஞ்ச தூரம் முன்னே நடந்திருந்தார்கள்.

வழியெங்கும் காவல்துறை கட்டுப்பாட்டு எண் பொறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள் அபாயக் குறியீடுடன் பார்வைக்குத் தென்பட்டன.

"பிரதமர் வருகையை முன்னிட்டு, இந்த இடம் முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப் பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் என எதையேனும் கண்டால் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காவல்துறை கட்டுப்பாட்டு எண் : 01632-246697." என்ற வாசகங்கள் அதில் அதிகம் இடம்பெற்றிருந்தன.

“என்னடா...! வழியெங்கும் அறிவிப்புப் பலகையா வெச்சிருக்காங்க...???”

“பிரதமர் வருகையாச்சேடா...! பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும் ஜாஃபர்..”

ஒரு பதினைந்து நிமிட நடைபயணத்தில், “ஜவகர் நவோதய வித்யாலயா” பள்ளிக்கூடம் வந்திருந்தது. பகத்சிங் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, அந்த பள்ளியின் சாரணர் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை, ஒரு ராணுவ ஒழுங்கோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் இருந்த சிறுவர் விளையாட்டுத்திடலில், ஒரு நான்கைந்து சிறுவர்கள் கூட்டமாக நின்று, ஏதையோ தீவிரமாகத் தேடுவதைப் போல் தெரிந்தது. ஆச்சர்யத்துடன் அவர்களின் பக்கம் சென்ற ஜாஃபரும் ஆர்யாவும் அவர்களைப் பார்த்து,

“தம்பி...! என்ன தேடிட்டு இருக்கீங்க...?” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.