(Reading time: 49 - 98 minutes)

“அண்ணா... நாங்க விளையாடிட்டு இருந்த பந்து ஒன்னு, அந்த மதில்சுவரைத் தாண்டி விழுந்துடுச்சுங்கன்னா... அதை எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம்... ” என்ற அந்த சிறுவர்கள் கை காட்டிய திசையில் எட்டிப் பார்த்த ஜாஃபர், ஆர்யாவைப் பார்த்து,

“டேய்... ஆர்யா... அவங்களுக்கு அந்த பந்தை எடுத்துக் குடுத்துடுடா...” என்றான். 

“ஹ்ம்ம்... சரி...” என்று புன்னகைத்தவாறே தலையை ஆட்டிய ஆர்யா, மதில்சுவரைத் தாண்டி எட்டிப் பார்த்த அவன், யோசிக்காமல் உடனே அதில் ஏறி கீழே குதித்தான். கீழே கேட்பாரற்றுக் கிடந்த அந்த தரிசு நிலம், வெறும் குப்பை கூளங்களால் நிரம்பி வழிந்திருந்தது. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த ஆர்யா, ஒரு மூலையில், பழைய கட்டிடம் ஒன்றின் இரண்டு சுவற்றுக்கு நடுவே, கைக்கு எட்டாத தொலைவில், அந்த பந்து இருப்பதைக் கண்ட அவன், அந்த இரண்டு சுவற்றுக்கு நடுவே தன்னை உட்புகுத்தி உள்ளே செல்ல முன்றான். ஒரு இரண்டு நிமிடப் போராட்டம். சற்று கடினப்பட்டு, ஒரு வழியாக உள்ளே நுழைந்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆர்யா, அந்த பந்தை கையில் எடுத்து விட்டு, வெளியே வர முயன்ற அடுத்த வினாடி, அந்த மர்மக் குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் சற்றே திடுக்கிட்டுப் பார்த்த ஆர்யா, அந்த குரல் வரும் திசையை நோக்கி, தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவனின் அடுத்தடுத்த நடைகளில், அந்த குரல் மெல்ல மெல்ல தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யாவின் முகம் கொஞ்ச நேரத்தில் வெடவெடத்திருந்தது. ஒரு கட்டத்தில் தான் நின்று கொண்டிருக்கிற இடத்திற்கு கீழே இருந்து தான், அந்த குரல் வருகிறது என்பதை அறிந்த ஆர்யா தன் காதுகளை இன்னும் தீட்டி வைத்து அந்த குரலின் பின்னணியில் இருக்கின்ற நிதர்சனத்தை அறிய முற்பட்டான். மிகுந்த நேரமாகியும் ஆர்யாவைக் காணாததால், அந்த மதில்சுவரிலிருந்து எட்டிப் பார்த்த ஜாஃபர்,

“டேய்... ஆர்யா... என்னடா பண்ணிட்டு இருக்கிற...??” என்று சப்தமாய் கேட்டான்.

“உஷ்...! ” என்று அவனைக் கையமர்த்திய ஆர்யா, சைகையின் வாயிலாக அவனை உள்ளே வரச் சொன்னான். ஆர்யாவின் முகத்தில் தெரிந்திருந்த களேபரத்தை உணர்ந்த ஜாஃபர், உடனடியாக அந்த மதில்சுவரிலிருந்து கீழே குதித்து ஆர்யாவின் பக்கம் நெருங்கினான். இந்த முறை ஆர்யா கேட்டுக்கொண்டிருந்த அதே மர்மக்குரல், ஜாஃபரின் காதுகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இருவர் கண்களிலும் பதற்றம் தெரிந்தது. இப்படியே ஒரு ஐந்து நிமிடம் கடந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜாஃபர்,

“ஆர்யா... இந்த குரலின் பின்னணியில், எனக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவது போல் தெரியுடா... எனக்குத் தெரிந்து, கீழே ஏதோ ஒரு சுரங்கம் இருப்பது போல் தோணுதுடா...”

“எனக்கும் அதே சந்தேகம் தான் ஜாஃபர்... ” 

“இப்ப என்ன பண்ணலாம் ஆர்யா...?”

சற்று நேரம் யோசித்த ஆர்யா,

“ஜாஃபர்... இப்ப உடனடியாக கீழே என்ன நடக்குதுங்கற தகவல் நமக்குத் தெரிஞ்சாகனும்... கீழே போறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு மொதல்ல தேடுவோம்...”

“ஹ்ம்ம்... சரி...”

ஒரு பதினைந்து நிமிட தேடல். இரு புறமும் நன்றாக தேடித் பார்த்துக் கொண்டே வந்த அவர்கள், சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தில், காய்ந்த சருகுகள் மூடி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதும் நின்றார்கள். ஒரு பத்து நிமிட இடைவெளியில், சருகுகளை அப்புறப்படுத்தியிருந்த அவர்கள் பிரமித்தார்கள். கீழே ஒரு சுரங்கத்தின் விசாலமான படிக்கட்டுகள், பாதாளம் வரை சென்றிருந்தது. இருவரும் திகைத்துப் போய், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர். 

“ஆர்யா... வா... உள்ள போய் பார்ப்போம்... என்ன தான் இருக்குன்னு ஒரு கை பார்த்திடுவோம்...” என்றான் ஜாஃபர்.

“அவசரப்படாதே ஜாஃபர்...! நம்மில் யாரோ ஒருத்தர் தான் உள்ள போகணும். ஏதாவது விபரீதமாக இருந்தால், இன்னொருத்தர் அதை வெளிஉலகிற்கு தெரியப் படுத்த கட்டாயம் வெளியே இருந்தாகணும்...”

“சரி... அப்ப நான் போறேன் ஆர்யா...!”

“நீ போக வேண்டாம் ஜாஃபர்... நான் போறேன்... நீ வெளியிலயே இரு. ” என்று அவனை சமாதானப்படுத்தினான் ஆர்யா. 

“உன் இஷ்டம் ஆர்யா...” என்றான் ஜாஃபர் அரைமனதோடு.

“ஜாஃபர்... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு. நான் இப்ப உள்ள போகப் போறேன். போனதுக்கு அப்புறம், சரியா பத்து நிமிடத்துல எப்படியும் நான் வெளியில வந்துருவேன். ஒருவேளை நான் வரலைன்னா, நீ உடனே போலீசுக்கு போன் பண்ணி, இன்பார்ம் பண்ணிடு. காவல்துறை கட்டுப்பாட்டு எண் நியாபகம் இருக்குல்ல..?”

“நியாபகம் இருக்குடா...”

“சரி... இப்ப மணி சரியா நாலு பதினைந்து. சரியா நாலு இருபத்தைந்தைக்கு நான் வெளியில வந்துருவேன். இல்லைன்னா...” என்று சொல்ல வந்த ஆர்யாவைக் கையமர்த்திய ஜாஃபர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.