(Reading time: 8 - 16 minutes)

 பசி, வலி தொல்லைகளால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓயாமல் அலறியது. அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் நெருங்கி வந்து விசாரித்தனர்.

 நடந்ததை கேட்டதும், "அடப் பாவி! பச்சைக் குழந்தை பசியிலே துடிக்குது, அந்தப் பணத்திலே சாராயம் குடிக்கப் போயிட்டியே, நீ உருப்படுவியா? நாசமாத்தான்போவே!" என்று சபித்துவிட்டு, ஓடிப்போய் பால் வாங்கி வந்து, குழந்தைக்கு தந்துவிட்டு, பிறகு அவர்களை போய் சேரவேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

 கெட்டவன் ஒருத்தன் இருக்குமிடத்தில், பத்து நல்லவர்களும் இருப்பார்கள் என்பதை அந்த அப்பாவி கிராமவாசிகள் தெரிந்துகொண்டனர்!

 மிராசுதாரின் கடித்த்தை படித்த அவர் நண்பர், உடனடியாக மூவரையும் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, குழந்தையை டாக்டரிடம் காண்பித்தார்.

 " குழந்தையை அட்மிட் பண்ணிக்கிறேன், டெஸ்ட் எல்லாம் எடுத்தபிறகுதான், என்ன வியாதின்னு தெரியவரும், அதற்குப் பிறகுதான் சிகிச்சை ஆரம்பமாகும். ரெண்டு மூணு நாளாகும், குழந்தையின் தாய் மட்டும் இங்கே இருக்கட்டும், நீங்க ரெண்டுநாள் கழித்து வந்து பாருங்க......"

 இப்போது பிரச்னை எதிரில் நின்றது, அந்தத் தாய் உணவுக்கு என்ன செய்வாள்? மருத்துவ மனையில் அவளுக்கு சோறு போடமாட்டார்கள், அவள் கணவன்தான் வேளாவேளைக்கு உணவு கொண்டுவந்து தரவேண்டும், அவனுக்கோ ஊர் புதிது! வயலில் இறங்கி வேலை செய்வதை தவிர, வேறெந்த திறமையுமற்றவன்!

 பரிதாபமாக, அவன் தன்னுடன் வந்தவரை பார்த்தான். அவருக்கும் என்ன செய்வதென தெரியவில்லை!

 அங்கிருந்த நர்ஸ் மேரி, " ஏசுநாதர் ஏழைகளை ஒருநாளும் கைவிடமாட்டார்.அவர்தான் எனக்கு சோறு போடறார், எனக்கு போடறதிலே நான் இவங்களோட பங்கு போட்டு மூணுபேருமா அரைவயிறோ, கால்வயிறோ சாப்பிடுகிறோம், நீங்க கிளம்புங்க!" என்றதும், கிராமத்தான் அவள் காலில் விழப்போனவனை தடுத்து அவள் கழுத்திலிருந்த சங்கிலியில் மாட்டியிருந்த ஏசுநாதர் உருவத்துக்கு வணக்கம் செய்யச் சொன்னாள்.

 மருத்துவமனையில், படுக்கையில் குழந்தை! அதனருகே, அதன் தாய்! தந்தையோ மருத்துவ மனைக்கு வெளியே நடைபாதையில் இரவும் பகலும்!

 மூன்றாவது நாள், தஞ்சாவூர் நண்பர் மருத்துவமனை வந்து, டாக்டரிடம் விசாரித்தார். 

 " டெஸ்ட் ரிபோர்ட் எல்லாம் வந்திடிச்சு! அதிசயமா, இந்த ஒரு வயசு பச்சைக் குழந்தைக்கு இருதயத்திலே கோளாறு! ஏழைகளுக்கு, குறிப்பா குழந்தைகளுக்கு, வரக்கூடாத வியாதி! அறுவை சிகிச்சை செய்தால், இந்தக் குழந்தை தாங்குமா என்பது சந்தேகமாக இருக்கு! ஆபரேஷன் டேபிளிலேயே உயிர்போனாலும் போய்விடும், மருந்து கொடுத்தால், ஏதோ சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ குழந்தை வாழலாம், நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க! அவங்க கடைநிலை ஏழைங்க, அதனாலே பணம் எதுவும் கட்டவேண்டாம்!"

 " மருத்துவமனையிலே அதிக பட்சமா எவ்வளவுநாள் வைச்சுப்பீங்க?"

 " மருந்து, மாத்திரை போதும்னா, இப்பவே கொடுத்து வெளியிலே அனுப்பிடுவோம், அறுவை சிகிச்சைன்னா மூணுவாரம் இங்கே வைச்சுப்போம்.........."

 ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, விழித்ததும், டாக்டர், நர்ஸ் மேரியிடம் " இவங்க முடிவெடுத்ததும், வந்து சொல்லு!" எனக் கூறிவிட்டு நகர்ந்தார்!

 தஞ்சாவூர் நண்பர் குழந்தையின் தாய் தந்தையிடம் விவரமாக டாக்டர் சொன்னதை தெரிவித்தார்.

 இருவரும் ஒன்றும் விளங்காமல் விழித்தனர். திரும்பத் திரும்ப, "எங்களுக்கு எங்க கொழந்தை உயிரோட இருக்கணும்!" என்றே புலம்பினர்.

 தஞ்சாவூர் நண்பர் என்ன செய்வார், பாவம்! 

 இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்! தவறாக ஏதாவது நிகழ்ந்து குழந்தை இறந்துவிட்டால், போன உயிரை தன்னால் வாங்கித்தரமுடியாதே என்று தவித்தார்.

 அந்த நேரம் பார்த்து, டாக்டரே எதிரில் நின்றார்.

 " என்ன முடிவு எடுத்தீங்க?"

 " நீங்க சொன்னதை நான் சரியா புரிஞ்சிண்டேனான்னு முதல்லே சொல்லுங்க! ஆபரேஷன் செய்தால், ரிஸ்க் அதிகம், ஆனா உயிர் பிழைத்து பல வருஷங்கள் குழந்தை வாழவும் சான்ஸ் இருக்கு! ஆபரேஷன் பண்ணிக்கறதுக்கு பயந்தால், மருந்து, மாத்திரை சாப்பிட்டு சில நாட்கள், சில மாதங்கள், சில வருஷங்கள்கூட வாழலாம், அது கடவுள் கையிலே இருக்கு! பத்து சதவிகித சான்ஸ் உள்ள ஆபரேஷனுக்கு தயாரா, இல்லையா என்பதுதானே உங்க கேள்வி?"

 " சரியாச் சொன்னீங்க!"

 " குழந்தையின் தாயும் தந்தையும் படிப்பறிவில்லா அப்பாவி கிராமத்து ஜனங்க! அவங்களுக்கு புரிஞ்சது, தெரிஞ்சதெல்லாம், 'எங்களுக்கு எங்க கொழந்தை உயிரோட இருக்கணும்!' என்பது மட்டும்தான்! டாக்டர்! எனக்கு இவங்களை இந்த மூணு நாளாத்தான் தெரியும், இவங்க என் நண்பர் ஒருவருடைய பண்ணையிலே வேலை செய்யறவங்க! நான் எப்படி இந்த விஷயத்திலே முடிவு எடுக்கமுடியும், சொல்லுங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.