(Reading time: 14 - 27 minutes)

 சிவா தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு, முதன் முறையாக அவள்மீது தனக்குள்ள பாசத்தை பார்வையிலே கொட்டினான்.

 பத்மாவுக்கு சற்று நம்பிக்கை பிறந்தது.

 " சிவா! உங்கப்பாவும் ஊராரும் உன்னைப்பற்றிய அவங்க அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டு, மூக்கிலே விரலை வைக்கிறமாதிரி, நீ உன்னை மாற்றிக்கொண்டு, நல்லாப் படிடா!"

 " அம்மா நான் நல்லாதாம்மா படிச்சிண்டிருக்கேன்......"

 " என்ன நல்லா படிக்கிறே? பத்தாவதிலேயே ரெண்டு வருஷம் பரீட்சை எழுதி பாஸ் பண்ணினே......."

 " அம்மா! நான் பள்ளிக்கூடப் படிப்பை சொல்லலேம்மா......."

 " வேறெந்தப் படிப்பை சொல்றே?"

 " மனிதன், மனிதனா வாழத் தேவையான படிப்பை படிச்சுண்டிருக்கேம்மா!"

 " அதென்னடா ஏதோ புதுசா சொல்றே? புதிர் போடறே!"

 " அம்மா! உனக்கு ஒரு ரகசியத்தை சொல்றேன், அப்பாவிடம் சொல்லாதே! சரியா?"

 " சரிடா! என்கிட்ட மனசுவிட்டுப் பேசுடா! உனக்காக நான் எதையும் செய்யக் காத்திருக்கேன்டா!"

 " அம்மா! ......எனக்காக எதையும் செய்ய காத்திருக்கும் தாயே! எனது வேண்டுகோள் என்னவெனில், தாங்கள் எதுவும் செய்யவேண்டாம், என்பதே!"

 " பரிகாசம் பண்ணக்கூட உனக்குத் தெரியுமா, சிவா? ஆச்சரியமாயிருக்கே! சிவா! ப்ளீஸ்! இனிமேலாவது நீ இதைப் போல, கலகலப்பா சகஜமா இருடா!"

 " அப்படியே, அன்னையே!"

 பத்மா சிவாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

 " அம்மா! சமையற்கட்டிலே வேலை ஏதாவது மிச்சம் இருந்தால், அதை முடிச்சிட்டு வந்து உட்கார்! உன்னிடம் இன்று நான் மனம் திறந்து பேசப்போகிறேன்......."

 " கண்ணே சிவா! இந்த நிமிடத்துக்காகத் தானே நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன், வேற எந்த வேலையும் முக்கியமில்லை, நீ பேசு! நீ மனம் விட்டுப் பேசு! மனம் திறந்து பேசு!........."

 உணர்ச்சிவசப்பட்டவளாக, பத்மா மகனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்!

 " அம்மா! நான் சொல்வதை பொறுமையாக கேள்! நாம் எதற்காகப் பிறக்கிறோம்?"

 " இதென்னடா கேள்வி! சந்தோஷமா வாழத்தான்!"

 "சந்தோஷம்னு எதை சொல்றே?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.