(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்

ரவு பதினோரு மணியிருக்கும்.  கரிய நிறக் கம்பளமாய் விரிந்து கிடந்த வானத்தில் அரிசிச் சிதறலாய் நட்சத்திரங்கள்.

       ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி, புதிதாக உருவாகியிருந்த முருகன் சொஸைட்டி காலனிக்கும் அடுத்து, நீ………….ளமாய் ஓடிய காம்பௌண்டு சுவற்றின் உட்பகுதியில் “மாநகராட்சி மயானம்” கெட்டியான இருளுக்குள் மூழ்கியிருந்தது.

       உள்ளே, சிமெண்ட் ஷீட் ஷெட்டிற்கு கீழே, அன்று மதியம் எரியூட்டப்பட்டிருந்த ஒரு சிதையிலிருந்து இன்னும் நெருப்பும், புகையும் மானாவாரியாய் கசிந்து கொண்டிருக்க,

       சற்றுத் தள்ளி, இலைகளைத் தொலைத்து விட்டு நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த ஒரு புங்க மரத்தினடியில் அவன் அமர்ந்திருந்தான்.

       அவனை “கோடாங்கி” என்று சிலர் சொல்லுவர், “குடுகுடுப்பைக்காரன்” என்று சிலர் சொல்லுவர், ஆனால் அவன் உண்மைப் பெயரை யாரும் இதுவரை அறிந்ததில்லை.

       நடுநிசி பனிரெண்டு மணியானதும், ஊருக்குள் சென்று குறி சொல்வதற்காக காத்திருந்தான்.

கேரளாவிலிருந்து வட இந்தியாவை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலொன்று, பேரிரைச்சலுடன் கடந்து செல்ல, கண்களை மூடியபடி மரத்தின் சாய்ந்திருந்தவன் மெல்ல விழிகளைத் திறந்தான்.  கூர்மையான நாசி அவனுக்கு.

அண்ணாந்து சிறிது நேரம் வானத்தைப் பார்த்தவன், ஏதோ ஒரு மனக்கணக்கில் நேரத்தை யூகித்துக் கொண்டு புறப்படத் தயாரானான்.  தன் மடியிலிருந்த அந்த கருப்பு நிறப் புடவையை உதறி, நீளவாக்கில் மடித்து, தலைப்பாகையாய்க் கட்டிக் கொண்டு,நெற்றியில் பொட்டிட வேண்டி, இடது புறம் கையை நீட்டித் தன் துணி மூட்டையைத் தேடினான்.  அது கைக்கு சிக்காது போக பார்வையைக் கூராக்கிக் கொண்டு பார்த்தான்.

அது இருந்த இடம் வெற்றிடமாயிருந்தது.

பகீரென்றது அவனுக்கு.  அந்த துணு மூட்டைதான் அவனது வாழ்க்கையே.  அவன் வசமிருக்கும் குட்டிச்சாத்தானின் பொம்மை உருவமும், கேரள நம்பூதிரி ஒருவரிடமிருந்து வாங்கி வந்த மந்திரிக்கப்பட்ட சில யந்திரத் தகடுகளும்…இன்னும் சில உக்கிர பூஜை உபகரணங்களும் அதனுள்தான் இருந்தன.

அவசரமாய் எழுந்து “பர…பர”வென்று சுற்றும் முற்றும் தேடினான்.

ம்ஹும்…எங்குமே காணோம்.

மெல்ல அந்தச் சிதையருகே சென்று, பாதி எரிந்த ஒரு விறகுக்கட்டையைக் கையிலெடுத்து, வாயால் ஊதி எரிய வைத்தான். கொழுந்து விட்டெரிந்த அந்த விறகுக்கட்டையை தீப்பந்தம் போல் ஏந்திக் கொண்டு, அந்த இடத்தை சுற்றிச் சுற்றி வந்து தேடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.