(Reading time: 13 - 26 minutes)

மலம் ருத்ரதாண்டவம் ஆடி, மகனிற்குத் தூபம் போடத் தொடங்கினாள். சுஜானாவை விவாகரத்து செய்துவிட்டு மறுகல்யாணம் செய்யச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தாள்.

கணேஷைப் பொறுத்தவரையில், சுஜானாவைப் பிடிக்கும்..அவளோடு வாழ்ந்த வாழ்க்கை உவப்பானதாகத்தான் இருந்தது..ஊராரும் உற்றாரும் குழந்தையைப் பற்றிக் கேட்கும் வரையில்... கொஞ்சம் அவமானமாக உணர்ந்ததன் விளைவுதான் மனைவியிடம் பாராமுகம்..எரிச்சல் எல்லாம்..இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் கமலம்..

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தானே..கணேஷும் கரைந்தான்..விவாகரத்துக்கு வித்திட்டான்..மேலும் மேலும் கொடுமையைத் தாங்க இயலா சுஜானா பொங்கிவிட்டாள்..இனியும் இங்கே இருந்து துன்பத்தைத் தாங்குமளவிற்கு, மனவலிமை அவளிடம் இல்லை..அத்தோடு உடல்நலமும் குன்றியதுதான் மிச்சம்.

இந்த விஷயம் ப்ரீத்தியின் காதுகளை எட்டியது.அவளும் வந்தாள்.கமலத்திடம்,”அத்தை, நான் கேள்விப்பட்டது நிஜமா...கணேஷுக்கு மறுகல்யாணம் பண்ணப்போறீங்களா?”என,

“ஆமா, ப்ரீத்தி, வேற என்ன பண்ணறது,இந்த பூக்காத மரத்த வச்சுக்கிட்டு”

“என்னத்தை இப்படி சொல்றீங்க, பூக்காத மரம்னு சொல்றீங்க...அப்படிச் சொல்ல முடியாதே..ஏதோ அவ நேரம்...இப்படி ஆகுது..அதுக்காக...சுஜானா பாவம் இல்லையா..டாக்டர் வாய்ப்பே இல்லன்னு சொல்லலையே..திரும்ப முயற்சி பண்ணலாமே”

“ஆமாம்மா..ஆமா..இன்னும் எத்தன நாள் காத்துக்கிட்டு இருக்க சொல்ற..இப்படியே போனா வயசாகுறது தான் மிச்சமாகும்..இதப்பாரு, நீ உன் தங்கச்சிக்கு எடுத்துச் சொல்லி விவாகரத்து ல கையெழுத்துப் போடச் சொல்லு..அதவிட்டுட்டு எனக்குப் புத்தி சொல்லாத..புரியுதா?”

அதுவரை அத்தையிடம் பேசிய ப்ரீத்தி, அங்கேயே கல்லுப்பிள்ளையார் மாதிரி உணர்ச்சியற்ற முகத்தோடு உட்கார்ந்திருந்த கணேஷிடம் திரும்பினாள்.

“என்ன கணேஷ், அம்மா சொல்லற மாதிரி தான் நடக்கப் போகுதா?இது சரின்னு படுதா உனக்கு? சுஜானாவுக்கு பண்ற துரோகம் இல்லையா” என,

“இது எப்படி அண்ணி துரோகம்னு சொல்லறீங்க..இவளுக்குத் தெரியாம நான் எதும் பண்ணலியே...அதோட முறையா விவாகரத்து வாங்கிட்டுதான் வேற கல்யாணம் பண்ணப் போறேன்” என்று ப்ரீத்தியைப் பாராமலே சொல்லி முடித்தான்.

“ஓ..உன்னோட அகராதிப்படி எதுன்னாலும் சொல்லிட்டுப் பண்ணினாத் தப்பு இல்ல அப்படித்தானே..”

“அப்படி இல்ல...அது...எனக்கும் பொறுத்துப் பொறுத்து வெறுத்துப் போயிட்டு..எவனப் பாத்தாலும் இன்னுமா உனக்குக் குழந்தை இல்லன்னு ஏளனமாப் பேசறாங்க..என்ன பண்ணச் சொல்றீங்க என்னை..அதுமட்டுமில்ல..குறை இவகிட்டன்னு தெரியாம என்னமோ என்கிட்டதான் குறை இருக்கா மாதிரி பாக்கறாங்க..என்னவோ நான் ஆண்மையில்லாதவன் மாதிரி...எப்படி சொல்றதுன்னு தெரில அண்ணி..ஆனா எனக்கு ஒரு வாரிசு முக்கியம்..அதான் அம்மா சொல்றபடி கேக்கறதா முடிவு பண்ணிட்டேன்..இந்தப் பேச்ச இத்தோட விட்ருங்க..”என்று கூறிவிட்டு நகரப்போனான் கணேஷ்.

“கணேஷ்..நீ சொல்லறது வாஸ்தவம் தான்..ஆனா அதுக்காக இவ்வளவுநாள் சுஜானாவோட நீ வாழ்ந்த வாழக்கை...உனக்காக அவ பாத்துப்பாத்து செஞ்சது, உனக்காகவே அவ விரும்பிப் படிச்சு, கிடைச்ச வேலைய விட்டது, எல்லாத்துக்கும் மேல அவ மனசு...இது எதுவுமே பெரிசில்லையா உனக்கு...அவளுக்கு குழந்தைக்கான வாய்ப்பே இல்லாம இல்லையே..இதே குறை உனக்கு இருந்தா அவ இப்படி ஒரு முடிவு எடுப்பாளான்னு யோசிச்சியா ”

ப்ரீத்தியின் இந்தக் கேள்விக்கு எதுவும் சொல்லாமல் கணேஷ் நிற்க, மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், சுஜானாவைப் பரிதாபமாகப் பார்த்த ப்ரீத்திக்கு அழுகை தொண்டையை அடைத்தது.வெறுமனே சுஜானாவின் அருகில் வந்தவள் அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

விட்டுடுங்கக்கா..இனி எதுவும் பேசி பிரயோஜனமில்லை..அவங்க முடிவு பண்ணிட்டாங்க..இதுவரைக்கும் நானும் என்னோட உடம்ப வருத்தி, வலியெல்லாம் பொறுத்து முயற்சி பண்ணியாச்சு..எனக்கு இப்படித்தான்னு எழுதியிருந்தா அதை மாத்த முடியாதே..அவங்களாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்னு பரஸ்பரம் பிரியறதுக்கு ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டுட்டேன் க்கா..” என்றவள் பத்திரத்தை எடுத்து கணேஷிடம் கொடுத்தாள்.

ஏற்கனவே தயாராக வைத்திருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு, “அக்கா எனக்கு ஒரு உதவி செய்யனும்...ஊருக்குப் போறதுக்கு பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டுப் போய்டுங்கக்கா..அதோட...என்று நிறுத்த,

“என்னம்மா சொல்லு..”

“எனக்குப் பஸ்சுக்கு கொஞ்சம் பணம் வேணும்.நான் ஊருக்குப் போயிட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கறேன்...என்று கண்ணீர் மல்கக் கூறினாள் சுஜானா.

இதைக்கேட்ட கணேஷ், “அண்ணி, அவள் ஒன்னும் இப்பப் போகத் தேவையில்லை..நாளைக்கு நானே கொண்டுபோய் விடறேன்னு சொல்லுங்க”

“தேவையில்லக்கா..என்னோட தேவை இங்க முடிஞ்சு போச்சு..அவங்க எதுக்கு தேவையில்லாம என்னோட வரணும்.நான் போறது ஒருவழிப்பாதைக்கா..திரும்பி வரப்போறதில்லைன்னும் போது தனியாப் போக பழகிக்கறேன்..கடைசிவரை துணைன்னு நினைச்சவங்க, ரயில் சிநேகம் மாதிரி ஆகும்போது நான் இப்படி நினைக்கறது சரிதானே ”

“சரி அண்ணி...அவள் தனியா போறதானா போகட்டும்..இந்தாங்க பணம்..இதைக்கூட குடுக்காத அரக்கன் இல்ல நான்..இத எடுத்துக்கச் சொல்லுங்க” என்று பணத்தை நீட்ட,அதை ஏளனமாகப் பார்த்த சுஜானா,

“ம்ஹ்ம்...இந்த வீட்டுல எனக்கு சோறு போட்டது, முதல் ஒரு வருஷம் மட்டும்தான்..எப்ப ட்ரீட்மென்ட்னு போக ஆரம்பிச்சோமோ,அப்போ இருந்து எனக்கு ஆகற ஒவ்வொரு செலவும் எங்க அப்பா குடுத்தது..ஏன் இவரோட புள்ளைய சுமக்கத்தானே நான் கஷ்டப்பட்டேன்..அப்போ சரிபங்கு இவருக்கும் இருக்குல்ல..அதோட, வலியும் வேதனையும் தன்னந்தனியா நான் மட்டும் அனுபவிச்சேனேக்கா...அப்ப இவர் எங்க போனார்..ஒரு வாய் வார்த்தைக் கூட கிடையாதே..இப்ப இந்தக் காசு மட்டும் எதுக்கு..அதயும் வட்டியோடத் திருப்பி அனுப்பச் சொல்லி வக்கீல் நோட்டிஸ் கூட வவுச்சர் போட்டு அனுப்பினாலும் அனுப்புவாங்க..வேண்டாங்க்கா வேண்டாம்..நாம கிளம்பலாம் என்று வெளியே நடந்தாள் சுஜானா.

தன் படிப்புக்கேற்றதொரு வேலையில் சேர்ந்தவள் தனியாகவே இருக்கிறாள்.பெற்றோரின் வீட்டிற்குச் செல்வது தம்பி தங்கையின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று நினைத்து தனித்து வாழப் பழகிக்கொண்டாள்.

ந்தப் பொங்கல் பண்டிகையிலாவது தனக்கு வழி பிறக்கும் தன் வாழ்க்கை செழிக்கும் என்று நினைத்தவள் திருமண வாழ்வு அஸ்தமித்தாலும், தன்னம்பிக்கை என்று ஒளியை நிலை நிறுத்தத் தொடங்கினாள் சுஜானா.

ஆயிற்று...சுஜானா போனதும் சொந்தத்தில் பெண் பார்த்து முடித்தார்கள் கணேஷிற்கு..பெண்ணிற்கும் இது இரண்டாம் திருமணம் தான்.அவளின் கணவன் சரியல்ல என்று திருமணமான இரண்டாம் நாளே திரும்பி விட்டவள்.ஆரம்பத்தில் கணேஷிற்கு தயக்கம் தான்..இருந்தாலும் வேறுவழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தான்.

டுத்த இரண்டாம் ஆண்டில் குழந்தையும் பிறந்து விட்டது..ஆனால் கணேஷின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை..சுஜானாவோடு வாழ்ந்த அந்த ஆறாண்டு கால வாழ்க்கை அவன் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து கிடந்து வாட்டியது.விளைவு , அவளை மறக்கவும் முடியாமல், இவளோடு ஒன்றவும் முடியாமல், இன்றளவும் தவித்துக் கொண்டிருக்கிறான் கணேஷ்.

மனமொன்றிய திருமண வாழ்விற்குப் பரிசு தான் குழந்தையே தவிர, அது கெளரவம் என்று நினைத்தால் இப்படித்தான் அல்லாட வேண்டும்.

ஆம்..கணேஷ் செய்ததும் கொலை தான்..கௌரவக் கொலை..குழந்தைப்பேறு என்னும் கௌரவத்திற்காக, சுஜானாவின் மனதைக்கொன்றவன் அவன்.இந்தப் பழியிலிருந்து அவன் மீளவே போவதில்லை..

 

குறிப்பு:

இந்தக் கதை, முழுக்க முழுக்க நிஜம்...பெயர்கள் மட்டுமே கற்பனை..இன்னமும் இந்தக் கதையின் மாந்தர்கள் கண்முன்னே உலவுகின்றனர். குழந்தைப்பேறு என்பது கடவுளின் கொடைதான் என்பதில் சந்தேகமில்லை..ஆனால்,விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியுள்ள இந்தக் காலத்தில், வாரிசு உருவாக்குதல் என்பது ஒன்றும் பெரிதல்ல..அப்படியிருக்க,ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று பரமபதம் ஆடுவது வீணான மனச்சிதைவிற்குத்தான் வழிகோலும்.எல்லாவற்றையும் விட, தாய் தகப்பனின் தேவையுள்ள ஒரு குழந்தைக்குப் பெற்றோராக வாழலாமே..அத்தோடு இணைந்து, அறிவியல் மூலம், தங்கள் உதிரத்திலிருந்தும், குழந்தைப் பூ மலரச்செய்யலாமே..எல்லாவற்றிற்கும் மனம் வேண்டும்..நல்ல மனமிருந்தால் வழிகள் கண்முன்னே குவியல் குவியலாய்க் கொட்டிக்கிடக்கின்றன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.