(Reading time: 21 - 42 minutes)

 

யோ இது ரொம்ப டேன்ஜரா இருக்கேடா.  மொதலாவது கட் பண்ணும்போது ரொம்ப வலிக்கும்.  ரெண்டாவது எனக்கு பாடத்தான் வேண்டாம், மத்தபடி உன்கூட எல்லாம் பேச எனக்கு நாக்கு வேணுமே”

“அது கரெக்ட்தாண்டா.  அப்போ ரெண்டாவது வழி சொல்றேன்,  ஆனா இந்த வழி follow பண்றது முழுக்க முழுக்க உன் கைலதான் இருக்கு.  இதுவும் டிவிலதான் பார்த்தேன்.  எங்க பாட்டி பார்த்த ஒரு சீரியல்ல சின்னப் பையன் ஒருத்தன் ஃபெயில் ஆயிடறான்.  வீட்டுக்குப் போனா அம்மாப்பா உதைப்பாங்கன்னு ஓடிப் போய்டறான்.  நீயும் எங்கயாவது போய்டு, இன்னும் பத்து நாள்ல அந்தப் போட்டிதான் முடிஞ்சு போய்டுமே, அப்பறம் வீட்டுக்கு வந்திடு.  என்ன சொல்ற”

“இது சரியா இருக்குடா.  ஆனா நான் எங்கடா போறது”

“ஹ்ம்ம் யோசிக்கலாம்.  ஹே அந்தப் பையன்  வீட்டை விட்டு ஓடிப் போய் ஒரு அநாதை ஆசரமத்துல சேர்ந்துட்டான்.  நீயும் அந்த மாதிரி செஞ்சுடு.  என்ன சொல்ற”

“ஓகேடா,  ஸ்கூல்லேர்ந்தே நேராப் போயிடவா.  ஆனா எந்த ஆசிரமம் போறது?”

“ஸ்கூல்லேர்ந்து போகாதடா.  நம்ம uniform வச்சு கண்டு பிடிச்சுடுவாங்க.  நீ வீட்டுக்குப் போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு போய்டு.  அந்தப் பையன் அப்படித்தான் பண்ணினான்.  அப்பறம் என் பொறந்த நாளைக்கு அம்மா ஒரு ஆஸ்ரமத்துக்கு கூட்டிட்டுப் போவாங்க.  எங்க வீட்டு பக்கத்துலதான் அது இருக்கு.  நீ அங்கேயே போய்டு.  நானும் சாயங்காலம் விளையாடப் போகும்போது உன்னை வந்து பார்ப்பேன்”

“சரிடா.  சாயங்காலம் வீட்டுலேர்ந்து எப்படி தப்பிக்கறதுன்னுதான் பார்க்கணும் இப்போ.   ரொம்ப தேங்க்ஸ்டா ரகு.  நீ இல்லைனா நான் என்ன பண்ணி இருப்பேன் சொல்லு”

“ச்சே என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு.  நீ ஹாப்பியா இருக்க இல்ல.  அதுவே போதும்.  வா பெல் அடிக்கறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் விளையாடப் போகலாம்”

இரு குழந்தைகளும் வீட்டை விட்டு போவதால் வரும் ஆபத்துகளைப்  பற்றி சற்றும் யோசிக்காமல், முடிவு செய்து விட்டு விளையாட சென்று விட்டனர்.

வாடா கண்ணா.  நான் தோசை பண்ணி வச்சிருக்கேன்.  சாப்பிடு.  அப்பறம் நான் இன்னைக்கு உன்கூட டான்ஸ் கிளாஸ் வர முடியாது.  பாட்டிக்கு உடம்பு முடியலையாம்.  அதனால அவங்களைப் பார்க்க நான் மாமா வீட்டுக்குப் போறேன்.  உன்னை அப்பா வந்து கிளாஸ் கூட்டிப் போவாரு. நான் இப்போவே கிளம்பினாத்தான் இருட்டறதுக்கு முன்னாடி அங்க போக முடியும்.  நீ தோசை சாப்பிட்டுட்டு ஹோம்வொர்க் பண்ணிட்டே இரு.  அதுக்குள்ள அப்பா வந்துடுவாரு சரியா”

ஆஹா, இது என்ன கடவுளாப் பார்த்து நாம தப்பிக்க ஒரு வழி செஞ்சுட்டாரு என்று மனதிற்குள்  நினைத்தபடியே, ஷன்மதி சொன்னவற்றிற்கு தலை ஆட்டினான் கண்ணன்.

“சரி வா. கதவைப் பூட்டிக்கோ.  அப்பறம் கதவைத் தொறந்து வச்சுட்டு வெளிய வந்துடாத, ஆட்டோலாக் ஆயிடும்.  அப்பறம் அப்பா வர்ற வரை நீ வெளியதான் வெயிட் பண்ண வேண்டியதாப் போய்டும்.  தெரியுதா”, என்று கடைசி வரை கட்டளைகள் பிறப்பித்தபடியே தன் தாயைப் பார்க்க கிளம்பினாள் ஷன்மதி.

அவள் கிளம்பிய அடுத்த நிமிடம் மடமடவென்று உடைகளை மாற்றி, தோசையைத் தின்றுவிட்டு சுவாமி உண்டியலிலிருந்து சிறிது பணம் எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான் கண்ணன், வீட்டிலிருக்கும் ஆபத்தைவிட வெளியில் அதிகம் ஆபத்து என்பது தெரியாமல்.

று மணி அளவில் வீடு திரும்பிய கண்ணனின் தந்தை சுந்தர் அழைப்பு மணியை  அடிக்க, சிறிது நேரம் நின்ற பின்னும் கண்ணன் வந்து கதவைத் திறக்காததால் தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே வந்தார்.

கண்ணன் ஹாலிலும், படுக்கை அறையிலும் இல்லாததால் ஒரு வேளை பாத்ரூமில் இருக்கிறானோ என்று அங்கு சென்று அழைக்க அதற்கும் பதில் இல்லாமல் போக எங்கே போனான், டைம் வேறு ஆகிறதே என்ற சலிப்பில் தன் மனைவியை அழைத்தார்.

“ஷம்மு, எங்க இருக்க?”

“ஏங்க? இங்க தம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.  நீங்க வீட்டுக்கு வந்துடீங்களா?”

“ம்ம் வந்தாச்சு.  ஆமா கண்ணன் எங்க? இன்னைக்கு டான்ஸ் கிளாஸ்க்கு என்னை கூட்டிட்டு போக சொன்னியே, அவனை ஆளைக் காணும்”

“என்ன சொல்றீங்க.  நான் அவன் வந்தப்பறம்தானே கிளம்பி வந்தேன்.  நல்லாப் பாருங்க.  வீட்டுல இல்லைன்னா, பக்கத்து வீட்டு பசங்களோட பார்க்ல விளையாடிட்டு இருக்கானா பாருங்க.  இல்லன்னா ரெண்டு தெரு தள்ளி இருக்கற கிரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பான்.  முதுகுல ரெண்டு வச்சு கூட்டிட்டு வாங்க.  எங்கயும் போகாம வீட்டுலையே இருக்கணும்ன்னு சொல்லிட்டு வந்தும் விளையாடப் போனான்னா என்ன அர்த்தம்.  ஒரூ தடவை நல்லா வச்சாதான் அறிவு வரும்”

“சரி சரி நான் போய் பார்க்கறேன்.  நீயும் ரொம்ப லேட் பண்ணாம அங்க இருந்து கிளம்பிடு சரியா”

“சரிங்க, நீங்க அவனை பார்த்த உடனே எனக்கு ஒரு கால் பண்ணி சொல்லிடுங்க”, என்றபடியே கைபேசியை வைக்க, கண்ணனின் தந்தை அவனைத் தேடி சென்றார்,  பக்கத்தில் இருந்த பார்க்கில் அவன் இல்லாமல் போக,  இரண்டு தெரு தள்ளி இருக்கும் மைதானத்திற்கு சென்றார்.  அங்கும் அவன் இல்லாமல் மற்ற குழந்தைகள் மட்டும் இருக்க, ஒரு வேளை தான் தேடும் வேளையில் அவன் வீட்டிற்கு சென்று விட்டானோ என்று அருகில் இருந்த சிறுவனிடம் சென்று விசாரிக்க, அவன் கண்ணன் தங்களுடன் விளையாட வரவில்லை என்பதை சொன்னான். அப்பொழுது அவர்கள் பேசுவதைக் கேட்டபடியே  வந்த மற்றொரு சிறுவன் சுந்தரைப் பார்த்து,

“அங்கிள் நான் விளையாட வரும்போது கண்ணனை பஸ் ஸ்டாப்கிட்ட  பார்த்தேன்.  எங்கியோ போகறதுக்காக நின்னுட்டு இருந்தான்.  நான் அவன் பக்கத்துல போய் கேக்கறதுக்குள்ள பஸ் வந்துடுச்சு.  அவன் அதுல ஏறிப் போய்ட்டான்”

“என்னது பஸ்ல போனானா?  கூட யாரானும் இருந்தாங்களா, பார்த்தியாப்பா.  அப்பறம் எந்த பஸ்ல ஏறினான், பஸ் நம்பர் ஞாபகம் இருக்கா?”

“நான் கவனிக்கலை அங்கிள்.  நான் ரோடுக்கு இந்தப் பக்கம் இருந்தேன்.  கிராஸ் பண்ணிப் போறதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சு”

“ஓ பரவாயில்லை.  நீ கொடுத்த தகவலுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா”, என்று சிறுவனுக்கு நன்றி கூறி இவன் பஸ்ஸை பிடிச்சு எங்க போனான் என்ற யோசனையுடன் மனைவியை அழைத்து நடந்ததைக் கூறியபடியே வீட்டிற்கு சென்றார் சுந்தர். 

“என்னங்க சொல்றீங்க, கண்ணன் பஸ்ல போனானா?  அதெல்லாம் இருக்காது.  அந்தப் பையன் யாரையானும் பார்த்துட்டு கண்ணன்னு சொல்றானா இருக்கும். பார்க்ல நல்லா பார்த்தீங்களா?   இன்னைக்கு கார்த்தாலேர்ந்தே கிளாஸ் போக மாட்டேன்னு ஒரே மொரண்டு பண்ணிட்டு இருந்தான்.  அதனால அதுக்கு டிமிக்கி கொடுக்கணும்ன்னு எங்கயானும் ஒளிஞ்சு இருக்கானா இருக்கும்.  இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வந்துடுவான் பாருங்க.  எதுக்கும் நான் உடனே கிளம்பி வரேன்”

“சரி ஷம்மு, நானும் அப்படித்தான் நினைக்கறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.  நீ எதுக்கும் கால்டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்துடு.  பஸ்க்கு நின்னு டைம் வேஸ்ட் பண்ணாத”, என்றபடியே செல்லை அணைத்துவிட்டு, தன் மனைவி செய்து வைத்த டிபனை சாப்பிட்டபடியே அலுவலக வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் சுந்தர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.