(Reading time: 21 - 42 minutes)

 

றுநாள் காலையில் ஷன்மதி ஒரு புறமும், சுந்தர் ஒரு புறமும் என அவனின் நண்பர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க பலன் என்னவோ பூஜ்யம்தான்.  காவல் துறையிலிருந்தும் எந்த விதமான தகவலும் கிடைக்காததால் தவிக்க ஆரம்பித்தனர்.  இப்படியே கண்ணனைப் பற்றிய தகவல் கிடைக்காமல் இரண்டு நாட்கள் ஓடியது.  அவர்களின் குற்ற உணர்ச்சியிலேயே இருவரும் அரை உயிர் ஆயினர்.  இரண்டாம் நாள் தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் கண்ணன் காணாமல் போன விவரம் வர, மூன்றாம் நாள் காலை பதினோரு மணி அளவில் காவல் துறையிலிருந்து அவர்களை உடனே கிளம்பி அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் வருமாறு செய்தி வந்தது.  இருவரும் என்ன ஆயிற்றோ என்ற பதைப்புடன் காவல் நிலையம் சென்று அடைந்தனர்.

அங்கே ஆளே அடையாளம் தெரியாத அளவில் உடலில் ஏகப்பட்ட காயங்களுடன் கண்ணன் அமர்ந்திருந்தான்.  அவனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் தாளாமல் சுந்தரும், ஷன்மதியும் கதறி அழ ஆரம்பித்தார்கள்.

“Mr சுந்தர் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.  கஷ்டமாதான் இருக்கும்.  உங்க பையன் கிடைச்சுட்டானே அதுவே பெரிசு இல்லையா”

“என்ன சார் இது, இப்படி அடிப்பட்டிருக்கு.  கண்ணா எங்கடா போன.  உன்னை இந்தக் கோலத்துல பார்க்க்கறதுக்காடா நாங்க அத்தனை கஷ்டப்படறோம்”

“சார் இப்போ அழுது என்ன பிரயோஜனம்.  அவனை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டது நீங்கதானே.  உங்க பையனை நீங்க பண்ணின கொடுமைக்கு  மொதல்ல உங்க ரெண்டு பேரையும்தான் உள்ள தூக்கிப் போடணும்”, என்று இன்ஸ்பெக்டர் கடுமையாக சொல்ல, கண்ணனின் பெற்றோர் தலை குனிந்தனர்.

“சார் அவன் நல்லா வரணும்ன்னுதானே இத்தனை செலவழிச்சு எல்லாம் பண்றோம்.  அதுவும் அந்த ஸ்கூல்ல இடம் கிடைக்கறதே கஷ்டம். ஏகப்பட்ட பேரை பிடிச்சு இடம் வாங்கினோம்”

“அவன் கேட்டானா சார் உங்ககிட்ட. அந்த நாயாலதான் இத்தனை பிரச்சனையும்.  உங்க பையன் எந்த நிலைல எப்படி இருந்தான் தெரியுமா?  நீங்க டான்ஸ் கிளாஸ் போயே ஆகணும்ன்னு கட்டாயப் படுத்தினதுனால, வீட்டுல இருந்தாதானே போகணும், பேசாம அநாதை ஆசரமத்துல போய் சேர்ந்துடலாம்ன்னு கிளம்பி போய் இருக்கான்.  ஆட்டோல போக பயந்துகிட்டு பஸ்ல ஏறி இருக்கான்.  நம்ம ஊருல பிள்ளை பிடிக்கற கும்பலுக்கா பஞ்சம், அதுவும் தனியா போற பசங்க மூஞ்சியை வச்சே அவங்க கண்டு பிடிச்சுடுவாங்களே.  அந்த மாதிரி கண்ணனும் ஏதோ பிரச்சனைல இருக்கான்னு பார்த்த உடனே அவனுங்களுக்கு தெரிஞ்சு போச்சு.  அவனோட பேசி அவனைத் தாங்களே நேரா அந்த ஆசரமத்துல சேக்கறதா அவங்க கூட கூட்டி போய் இருக்கானுங்க.  இவனும் அவங்களை நம்பி போய் இருக்கான்.  பஸ்ஸை விட்டு இறங்கின உடனே அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தங்களோட இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.  அவன் கண்ணு முழிச்சதே மறு நாள்தான்.  கண்ணு முழிச்சதுக்கப்புறம்தான் அவனுக்கு இருக்கற இடம், தான் மாட்டி இருக்குறது எல்லாமே புரிஞ்சு இருக்கு.  அப்பாம்மாகிட்ட போகணும்ன்னு முரண்டு பண்ணினதால அவனுங்க இவனை அடிச்சு வழிக்கு கொண்டு வரப் பார்த்திருக்கானுங்க.  அதுல பட்ட காயங்கள்தான் இது எல்லாம்”, என்று இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்ட ஷன்மதி கண்ணன் பட்ட துயரத்தை நினைத்து மேலும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

“இதுக்குள்ள அழுதா எப்படி மேடம்.  இன்னும் இருக்கு. அவனுங்க அடிச்ச அடி தாங்காம திரும்ப கண்ணன் மயக்கம் போட அவனை விட்டுட்டு மயக்கம் தெளியறதுகுள்ள வந்துடலாம்ன்னு பக்கத்துல எங்கியோ போய் இருக்கானுங்க.  அவங்க போன நேரம் இவனுக்கும் மயக்கம் தெளிய அந்த வீட்டை விட்டு ஓடி வெளில வந்துட்டான்.  அந்தத் தெரு வழியா ஏதோ ஒரு ஊர்வலம் வேற போய் இருக்கு.  அதனாலதான் உங்க பையன் இப்போ உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கான்.  அந்த ஊர்வலத்தை தாண்டி வந்தப்பறம் எங்கப் போறதுன்னு தெரியலை. அது எந்த இடம்னும் தெரியலை.  ரோட்லேயே நின்னா திரும்ப அவனுங்க வந்துடுவாங்கன்னு பயம் வேற வந்துடுச்சு.  அதனால பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போய் அங்க வந்த ஒரு அம்மாகிட்டயும், பூசாரிக்கிட்டையும் சொல்லி இருக்கான்.  அவங்களுக்கு இவனை நம்பறதா, வேணாமான்னு தெரியாம எதுக்கும் இருக்கட்டும்ன்னு பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல தகவல் கொடுத்திருக்காங்க.  நாங்க ஏற்கனவே கண்ணனைப் பத்தின தகவல் எல்லா  ஸ்டேஷன்லையும் கொடுத்து வச்சிருந்ததால உடனே இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க”

“என்னடா கண்ணா இப்படி பண்ணிட்ட.  உன்னைக் காணாம அம்மாவும், அப்பாவும் எப்படி தவிச்சுப் போய்ட்டோம் தெரியுமா?  நீ இல்லாம நாங்க எப்படி இருப்போம்ன்னு கொஞ்சமானும் யோசிச்சியா?”, அழுதபடியே ஷன்மதி கேட்க

“மேடம் இப்போ அவனை இத்தனை கேள்வி கேக்கறீங்களே, அந்தப் பையன் பேச வர்றப்போ கொஞ்சமானும் காது கொடுத்து கேட்டீங்களா.  இப்போலாம் குழந்தைகளுக்கு எந்த ரூபத்துல ஆபத்து வருதுன்னே தெரிய மாட்டேங்குது. குழந்தைங்க சொல்ல வர்றதை கேளுங்க.  நீங்க காது கொடுத்தே கேக்கலைன்னா அவங்களுக்கு நடக்கற நல்லதோ, கெட்டதோ எப்படி நமக்குத் தெரிய வரும். அவன் அந்த டான்ஸ் மாஸ்டர்கிட்ட அத்தனை கஷ்டம் பட்டிருக்கான்.  அந்த ஆள் தொடக்கூடாத இடத்தில எல்லாம் கைய வச்சிருக்கான்.  பொறுக்கி ராஸ்கல்.  இந்தக் கேஸ் முடிஞ்ச உடனே அடுத்து அந்த ஆளுக்குதான் நான் மேளம் கொட்டப் போறேன்.  நாதாரி நாய்.  அவனோட வெறிக்கு பிஞ்சு பசங்கதான் கிடைச்சாங்களா.  இனிமேயானும் உங்க குழந்தை சொல்றதை காது கொடுத்து கேளுங்க.  அவனோட விருப்பு, வெறுப்புகளுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்க”, இன்ஸ்பெக்டர் பேசப் பேச தங்கள் மேல் உள்ள தவறை முழுவதும் உணர்ந்த கண்ணனின் பெற்றோர் இனி அவனைப் புரிந்து நடப்பதாக வாக்கு கொடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து திருந்திய மனதுடன் வீட்டிற்கு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.