(Reading time: 13 - 26 minutes)

 

ம்மா, அங்க பாரு கீழ ஒரே கூட்டமா இருக்கு, ஏதானும் sale போட்டிருக்காங்களா.”, சாதனா தன் அம்மாவிடம் பாப்கார்ன் பொட்டலத்தைக் கொடுத்தபடியே கேட்டாள்

“தெரியலையே, சேல்ன்னா ஏன் இத்தனை டென்ஷனோட இருக்கணும். ஏதானும் சண்டையா இருக்கும்.  சரி நீ எல்லாம் வாங்கி ஆச்சு இல்ல. நான் டிரைவரை மெயின்கேட் கிட்ட வர சொல்றேன்.  கிளம்பலாம்.  லஞ்ச்சுக்குள்ள வீட்டுக்கு வரேன்னு அப்பாக்கிட்ட சொல்லி இருக்கேன்”

“ம் எல்லாம் முடிச்சாச்சும்மா. போகலாம்.  அதுக்கு முன்னாடி ஜஸ்ட் அங்க என்ன நடக்குதுன்னு மட்டும் பார்த்துட்டு போகலாம்மா. ப்ளீஸ் இல்லைனா என்னவோன்னு மண்டை வெடிச்சுடும்”

“அப்படியா, சரி நானும் யாருக்கும் மண்டை வெடிச்சு பார்க்கலை.  இப்போ பார்க்கறேன், எப்படி வெடிக்குதுன்னு”

அம்மா என்று சாதனா டென்ஷனாக, “சரி சரி அழாத வா போய்ப் பார்க்கலாம்”

இருவரும் சென்று அங்கு வரிசையில் கடைசியில் நின்றிருந்தவரை என்ன கூட்டம் என்று கேட்க்க அவர் நடந்த விபத்தை சொல்ல, “அடப்பாவிங்களா, ஒருத்தர் கூடவா அந்தப் பையனை கிட்டப் போய் பார்க்கலை.  ஒதுங்கி நின்னு இத்தனை பேச்சு பேசறீங்க”, என்று எல்லாரையும் திட்டி விலக்கியபடியே முன்னால் சென்று அடிப்பட்டவனை தொடப் போனார் விமலா.

“ஹலோ மேடம், என்ன பண்றீங்க.  விலகிப் போங்க. இப்படிக் கிட்ட எல்லாம் வந்து பார்க்கக் கூடாது.”, என்று கத்தியபடியே செக்யூரிட்டி வர

“என்ன சார் இது, இந்தப் பையன் கீழ விழுந்து 5 நிமிஷம் ஆச்சு, இன்னும் உயிர் இருக்கா, இல்லையான்னு கூட யாரும் பக்கத்துல போய்ப் பார்க்கலை. அநியாயம் பண்ணாதீங்க. நீங்க முதல்ல ஆம்புலன்ஸ் போன் பண்ணி வரவைங்க”

“சும்மா கத்தாதம்மா.  எல்லாம் எங்களுக்குத் தெரியும்.  போலீஸ்க்கு சொல்லியாச்சு, அவங்க வர்றாங்க”

“ஏன்யா லூசா நீயி, விழுந்து அடிப்பட்டா டாக்டரை கூப்பிடாம போலீஸ் கூப்பிட்டிருக்கே.  சாதனா நீ உடனே ஆம்புலன்ஸ் போன் பண்ணி வரச்சொல்லு.  இங்க பாருங்க சுத்தி இத்தனை பேரு நிக்கறீங்க.  இங்க இருக்கற ஒரு நாலு செக்யூரிட்டி ஆளுங்களை சமாளிக்க முடியலை. கூடிக் கூடி பேசறீங்களேத் தவிர அந்தப் பையனுக்கு உயிர் இருக்கா இல்லையான்னு கூட பார்க்க மாட்டேங்கறீங்க.  நான் ஒரு லேடி.  தைரியமா ஆம்புலன்ஸ் கூப்பிட்டிருக்கேன்.  நான் இந்தப் பையனை என்னோட சொந்த ரிஸ்க்ல ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போகப் போறேன்.  மனிதாபிமானம் இருக்கறவங்க அட்லீஸ்ட் இந்த செக்யூரிட்டி அதைத் தடுக்காம பார்த்துக்கோங்க” என்று கூட்டத்தைப் பார்த்து கத்தியபடியே அகிலிடம் சென்றார் விமலா.

“என்னம்மா இப்படி சொல்லிட்ட, பொம்பளை நீயே இத்தனை தைரியமா பேசும்போது நாங்க ஹெல்ப் பண்ண மாட்டோமா . என்ன ஆனாலும் நாங்க பார்த்துக்கறோம்”, என்று ஒவ்வொருவராக உதவ முன்வந்தனர். 

“அம்மா, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிட்டேன், 5 நிமிஷத்துல வந்துடும், அப்படியே அப்பாக்கும் சொல்லிட்டேன். கேர்புல்லா இருக்க சொன்னார்.  ஹாஸ்பிடல் போன உடனே கூப்பிடச் சொன்னார். உடனே அங்க வர்றாராம்”, சாதனா தன் அன்னையிடம் கூறினாள்.

அவள் பேசிய 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வர, முதலில் செக்யூரிட்டி ஆபீசர்ஸ் நான்கு போரையும் மக்கள் ஐந்து ஐந்து பேராக சுற்றி வளைக்க அவர்களால் ஒன்றும் தடுக்க முடியாமல் போக, அகிலை நான்கைந்து பேராகத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள்.  ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடல் நோக்கி ஓடியது. அவனை வண்டியில் ஏற்றும்போது சரியாகப் பார்த்த ஆட்டோ அண்ணா ஓடி வந்து தனக்கு தெரிந்த பையன் என்று கூறி அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்க்க, அகிலுக்கு அடிப் பட்ட விஷயத்தை அவர்கள் கூறி ஹாஸ்பிடலுக்கு அனுப்பினார்கள்.

ஆட்டோ அண்ணா அகிலின் அம்மா, அப்பாவிற்கு விவரம் கூறி வரச்சொல்லி விரைந்து சென்றார்.

மாலுக்கு வந்து சேர்ந்த போலீஸ் அங்கு அடிபட்ட பையனை ஹாஸ்பிடல் தூக்கிச் சென்ற விவரம் கேட்டு கடுப்பாகி அங்கிருந்த பொது மக்களைப் பார்த்து கத்த ஆரம்பிக்க, பதிலுக்கு மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப அங்கு மெது மெதுவாக சண்டை உருவாகி உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பொதுமக்கள் மாலின் தரம், மற்றும் செக்யூரிட்டியின் அலட்சியம் பற்றி கத்த ஆரம்பிக்க, போலீஸ் அவர்கள் வராமல் சட்டத்தை மக்கள் எப்படி கையில் எடுக்கலாம் என்று ஆரம்பிக்க வாக்குவாதம் முற்ற ஆரம்பித்தது.

போலீஸ் ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை சமாளிக்க முடியாமல் அனைவரையும் கைது செய்யப் போவதாக அறிவிக்க அங்கிருந்த அனைவரும் அப்படியே உட்கார்ந்து போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.  எல்லாருமே விமலாவின் நடவடிக்கையால் ஓரளவு தைரியம் அடைந்திருந்தார்கள்.

இதற்க்கு நடுவில் கூட்டத்தில் ஒருவர் நியூஸ் சேனலுக்கும், பத்திரிகைத் துறைக்கும் தகவல் தர அடுத்த ஐந்தாவது நிமிடம் எல்லாரும் வந்து சேர்ந்து காவல்த் துறையை கேள்வி கேட்க்க ஆரம்பித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் சின்ன விஷயம் பூதாகாரம் எடுப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல், மால் ஓனரை அழைக்க அவர் எப்படியாவது சுமூகமாக பிரச்னையை முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பத்திரிகையாளர்கள் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க்க அவர் பதில் சொல்ல முடியாமல் திணற ஆரம்பித்தார்.  ஒரு கான்ஸ்டபுள் இன்ஸ்பெக்டர் காதில் எதையோ சொல்ல அவர் சொன்ன விஷயத்தால் சந்தோஷமடைந்த இன்ஸ்பெக்டர் பத்திரிகையாளர்களைப் பார்த்து, “இப்போதான் எனக்கு விஷயம் தெரிந்தது.  அந்தப் பையன் ஏதோ காதல் தோல்வியால் தற்கொலை முடிவு எடுதிருக்கான்போல, அதனால் அவனேதான் மேல இருந்து கீழ குதிச்சிருக்கான்.  இதில் வேற யார் மேலயும் தப்பில்லை.  அதனால எல்லாரும் கலைஞ்சு போகும்படி கேட்டுக் கொள்கிறேன்”, என்று கூறினார்.

ரியாக அந்த நேரத்தில் அகிலை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு அவர்கள் அப்பா, அம்மா வரும்வரை அங்கு இருந்து அவன் உயிருக்கு ஆபத்தில்லை  என்பதையும் தெரிந்து கொண்டு மாலில் இருப்பவர்களிடம் விவரம் சொல்ல வந்த விமலா இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்டு கொதித்து எழுந்தார்.

“ஏன் இன்ஸ்பெக்டர் சார் இப்படி கூசாம ஒரு பொய்யை எடுத்து விடறீங்க,  நான் இப்போ அங்க இருந்துதான் வரேன்.  அங்க அவங்க அம்மா, அப்பாவைப் பார்த்து பேசிட்டுதான் வரேன்.  நாளைக்கு லண்டன் போற பையன்தான் இன்னைக்கு அதுவும் இந்த வீணாப் போன மாலுக்கு வந்து தற்கொலை செஞ்சுக்கப் போறானா.  உங்களுக்கு கேஸ் க்ளோஸ் பண்ணனும்ன்னு என்ன வேணாலும் சொல்லுவீங்களா”.

“இங்க பாருங்க மேடம் ரொம்ப அதிகமா பேசறீங்க, எனக்கு கிடைச்ச விஷயத்தைதான் உங்களுக்கு சொல்றேன்”

“சும்மா இருங்க சார், நீங்களும், இந்த மால் ஓனரும் இருந்த இடத்திலிருந்தே இங்க இருக்கற செக்யூரிட்டிக்கிட்ட பேசினது தெரியாதுன்னு நினைச்சீங்களா. அங்க இருந்த டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா, இன்னும் ஒரு பத்து நிமிஷம் லேட் ஆகி இருந்தாலும் காப்பாத்தி இருக்க முடியாதுன்னு,  உங்களுக்கும் குடும்பம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லை, நாளைக்கு உங்க மகளுக்கோ, மகனுக்கோ இந்த மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயம். “,

“மேடம் முதல்ல ஒன்னைப் புரிஞ்சுகோங்க, குற்றம் நடக்கற இடத்துல எல்லாம், நாங்கப் போய் முன்னாடியே நிக்க முடியாது.  நாங்க வர்றவரைக் கூட உங்களால வெயிட் பண்ண முடியலையா”

“நீங்க பேசறது கரெக்டா சார்,  இது என்ன திருட்டு கேசா. நீங்க வரவறைக்கும்  வெயிட் பண்ண.  உயிர்ப் பிரச்சனை சார்.  நம்ம ஊருல இருக்கற டிராபிக்குக்கு அடுத்தத் தெருவுக்கு போகவே அரை மணி ஆகுது.  நீங்க என்ன சூப்பர்மேனா அடுத்த நிமிஷம் வந்து நிக்க.  அட்லீஸ்ட் நீங்க உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போகவானும் சொல்லி இருக்கலாம்.  அதை விட்டுட்டு நீங்க வர்றது வரை  வெயிட் பண்ணச் சொன்னது எந்த விதத்தில் ஞாயம்”, அகிலின் அன்னை கதறி அழுததைப் பார்த்து விட்டு வந்திருந்த விமலாவால், ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

“இப்போ கூட பாருங்க அந்தப் பையனுக்கு என்ன ஆச்சு, உயிர்ப் பிழைத்தானா, இல்லையா  அப்படின்னு கூட கேட்கணும்ன்னு தோணலை உங்களுக்கு. சார் முதல்ல மனிதனா இருங்க சார் அப்புறம் போலீஸ் ஆகுங்க. Frineds அந்தப் பையனுக்கு தலைல அடி அப்புறம் கால், கை ரெண்டு இடத்துலயும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டிருக்கு.  தலைல ஒரு ஆபரேஷன் பண்ணனும்ன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க.  பாவம் நாளைக்குக் காலைல லண்டன் போக வேண்டிய பையன், இப்படி ஆகிப் போச்சு.  அவன் எழுந்து நடமாட இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகலாம்”, என்று கூட்டத்தைப் பார்த்து தனக்குத் தெரிந்த விவரத்தைக் கூறினார் விமலா.

“இங்க பாருங்க மேடம், லேடி ஆச்சேன்னு பார்க்கறேன், இல்லைனா நீங்க பேசற பேச்சுக்கு உள்ள தள்ளி இருப்பேன்”

“என்ன சார் லேடி, முடிஞ்சா உள்ள தள்ளுங்க சார்.  அந்த மால் ஓனர்க்கு MLA லெவெல்ல ஆளைத் தெரியும்ன்னா, எனக்கு மந்திரி லெவெல்ல தெரியும்.  நான் இந்த விஷயத்துல தலை இடும்போதே தெரியும், இப்படிதான் மிரட்டல் வரும்ன்னு, நம்ம நாட்டுல பெரிய ஆளுங்களைத் தெரியாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னும் தெரியும். முடிஞ்சா உங்களால ஆனதைப் பார்த்துக்கோங்க.  முன்னாடியானும் வந்து விஷயத்தை இவங்ககிட்ட சொல்லிட்டுப் போயிடலாம்ன்னு நினைச்சேன்.  இப்போ இதை விடப் போறதில்லை.  எப்போ உங்க ஆதாயத்துக்காக அந்த நல்லப் பையனைப் பத்தி தப்பா சொன்னீங்களோ, இந்த மாலை இழுத்து சீல் வைக்கறவரை நிறுத்தப் போறதில்லை. பார்க்கலாம் அதுக்கு எத்தனை நாள் ஆனாலும் இந்தக் கேஸ் எடுத்து நடத்தாம நிறுத்த மாட்டேன்”, விமலா பேசப் பேச கூட்டத்தினர் அத்தனை பேரும் கைத்தட்ட ஆரம்பித்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.