(Reading time: 25 - 49 minutes)

ல்லைனா இன்னைக்கு ராதா ஸ்கூல் டீச்சர் என்னை வரச் சொன்னான்னு போயிட்டு வந்தேன் இல்லை அந்த டீச்சர் சொன்னதை வச்சு, அப்புறம் இவ நடந்துக்கறது எல்லாத்தையும் பார்த்தா பயமா இருக்கு நேக்கு.  ஸ்கூல்ல டீச்சர்கிட்ட கிருஷ்ணர் பாட்டுத்தான் பாடுவேன், சினிமா பாட்டெல்லாம் பாட மாட்டேன்னு ஒரே அடம் பண்ணி இருக்கா.  மீறி டீச்சர் கொஞ்சம் அதட்டி சொன்ன உடனே அழ ஆரம்பிச்சுருக்கா.  என்னன்டையும் அதேதான் நேத்தைக்கு பண்ணினா.”, கண்ணீர்க் குரலில் கூறினாள் அலமு.

“சின்னதுலேர்ந்தே ராதாக்கு சினிமானா பிடிக்காதே அலமு, அதனால அவ டிவி பக்கமே வர மாட்டாளே.  இப்போ இப்போதான் மார்கழி மகோர்த்ஸவம், டிசம்பர் கச்சேரின்னு கேக்க ஆரம்பிச்சுருக்கா.  அதுதான் குழந்தை சினிமாப் பாட்டு அப்படின்ன உடனே பயந்துண்டு முடியாது சொல்லியிருக்கா”, அலமுவை சமாதானப்படுத்தினார் பார்த்தா.

“அச்சோ, உங்களுக்கு என் கவலையே புரியலைனா.  அவ பாருங்கோ மத்த குழந்தைகள் மாதிரியா இருக்கா.  ஒண்ணு புஸ்தகம், இல்லை பூஜை.  வெளில போகணம்னாக்கூட  கோவில்னா உடனே சரிங்கறா.  மத்த இடத்துக்கெல்லாம் கம்ப்பெல் பண்ணி இழுத்துண்டு போவேண்டி இருக்கு. எனக்கு பயமா இருக்குன்னா. இவ இப்படியே சந்நியாசியா போய்டுவாளோன்னு”,  இப்பொழுது முழுவதும் உடைந்து அழ ஆரம்பித்தாள் அலமு.

“அசடு மாதிரி பேசாதே அலமு, இந்தக் காலத்துல அவா அவா நமக்கு ராதா மாதிரி பொண்ணு இருக்க மாட்டாளான்னு எல்லாரும் ஏங்கறா. நீ என்னடானா பயப்படறே.  எதைப் பத்தியும் கவலைப் படாம போய்ப்படு.”, தன் மனைவியை சமாதானப் படுத்தினார் பார்த்தா.

“என்னடி இது இன்னைக்கு ஏதோ எக்ஸ்ட்ரா கிளாஸ் இருக்கு லேட் ஆகும் கவலைப் படாதேன்னு சொல்லிட்டு சீக்கிரமே வந்துட்ட.”, இன்ஜினியரிங் படிக்கும் மகள் சாதாரணமாக வரும் நேரத்தைவிடவே சீக்கிரம் வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டபடியே கேட்டாள் அலமு.

“அப்படித்தான்மா கார்த்தால நினைச்சேன்.  எனக்கு அப்புறம்தான் இன்னைக்கு வேலுக்குடியோட ஞானமும் ப்ரேமையும் உபந்யாசம் இருக்கறது ஞாபகத்துக்கு வந்தது.  அப்புறம் கிளாஸ் எப்போ வேணாலும் அட்டென்ட் பண்ணிக்கலாம்ன்னு வயத்த வலிக்கறதுன்னு HOD கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்.  நாளைக்கு ஞாபகமா எனக்கு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடு சரியா.  இல்லைனா அப்புறம் திட்டு விழும்”, டிவியை போட்டபடியே விளக்கமளித்தாள் ராதா.

“ஏண்டி பாக்க போறது சுவாமிப் ப்ரோக்ராம், இதுக்கு உங்க professor கிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்க. அது சரியா.  இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் பாடத்தை வேற விட்டாச்சு.  இப்போ அப்படியானும் அவர் வந்து கதை சொல்றதைக் கேக்கலைன்னு யார் அழுதா”.  படிப்பை ரெண்டாம் பட்சமாக்கிவிட்டு வந்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் அலமு கேட்க

“ஏம்மா கிருஷ்ணரே மஹாபாரதத்துல எத்தனை இடத்துல பொய் சொல்லி இருக்கார். “பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” அப்படின்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார்.  பெரியவா அவாளே பொய் சொல்லலாம் அப்படின்னு சொல்றா பாரு”

“அது சரி, இப்போ புரை தீர்ந்த நன்மை எது”

“நான் உபந்யாசம் கேக்கறதுதான், வேறென்ன.  சரி ப்ரோக்ராம் ஆரம்பிக்கப் போறது. ப்ளீஸ்மா பேசாமக் கேளு”

“எப்படியோ போ, நான் பக்கத்தாம் வரை போயிட்டு வரேன்.  நீ தாழ் போட்டுண்டு பாரு”. ம் ம்  என்ற முனகல் மட்டுமே ராதாவிடமிருந்து பதிலாக வந்தது அலமுவிற்கு.

ன்று இரவு வீடு வந்த பார்த்தா சில நாட்களாகவே  தன் மனைவி மிகுந்த மனவேதனையுடன் இருப்பதைக் கவனித்து என்னவென்று கேட்க,

“எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னா.  ராதா பண்ற ஒரு ஒரு விஷயத்தையும் பார்க்கும்போது மனசெல்லாம் தடக் தடக்குன்னு அடிச்சிக்கறது.  இவ போற போக்கே சரி இல்லை.  இன்னைக்கு காலேஜ்ல ஸ்பெஷல் கிளாஸ்.  அதை பொய் சொல்லி கட் அடிச்சுட்டு வேலுக்குடி உபந்யாசம் கேக்க வந்துட்டா.  இப்போ எல்லாம் பாதி நேரம் ஏதோ பூஜை பண்றேன், அபிஷேகம் பண்றேன்னு சுவாமி உள்ளே கதின்னு கிடக்கறா.  எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை”

அலமு ஒவ்வொன்றாக சொல்லச் சொல்லத் திகைத்த பார்த்தா, “நீ சொல்றது புரியறது அலமு.  இந்த காலேஜ் வயசுங்கறது ரெண்டு கெட்டான் வயசு அலமு.  காதல், கண்ட்றாவின்னு போற வயசு.  நம்ம பொண்ணு இப்போ பக்தி மார்கத்துல இருக்கறது நல்லதுதான்.  வேற எந்த தப்பு வழிக்கும் போக மாட்டா பாரு, இன்னும் ஒரு வருஷம்தானே, அவ படிப்பை முடிக்கட்டும் அப்புறம் வேலைக்குன்னு போயிட்டான்னா தன்னால மாறிடுவோ”, தனக்கு தெரிந்த வழியைச் சொன்னார் பார்த்தா.

“எனக்கு என்னமோ பயமாவே இருக்கு, இந்தப் பொண்ணு மாறுமான்னு.  படிப்பு முடிஞ்சதும் வேலையெல்லாம் ஒண்ணும் பார்க்க வேண்டாம் அவ, முதல்ல ஒரு நல்ல வரனா பார்த்து கல்யாணத்தை முடிச்சுடலாம். “

“என்ன அலமு இப்படி சொல்ற, அவ படிக்கற படிப்புக்கு காம்பஸ்ல வேலை ஈஸியா கிடைக்கும். நம்ம குழந்தைக்கு வர நல்ல வாய்ப்பை நாமே தட்டிக் கழிக்கலாமா”

“நீங்க சொல்றது சரினாலும், என்னால என்னாகுமோன்னு வயத்துல நெருப்பைக் கட்டிண்டு இருக்க முடியாது.  அதனால நல்ல வரனா பார்த்து முடிச்சுடலாம்.  அப்பறம் அவ வேலைக்கு போறதோ வீட்டுல இருக்கறதோ அவா பாடு”, இதுதான் முடிவு என்று பேசிவிட்டு சென்றாள் அலமு.

“வாடி ராதா உன் படிப்பு இன்னும் ஒரு 3 மாசம் இருக்கா.  இன்னைக்கு எந்த கம்பெனிலேர்ந்து காம்பஸ் வந்தா”, காலேஜில் இருந்து வந்த மகளை பார்த்துக் கேட்டாள் அலமு.

“இன்னைக்கு TCSலேர்ந்து வந்தாமா, என் கிளாஸ்ல 3 பேர் செலக்ட் ஆகி இருக்கா.”

“சரி நீ எப்போ ஜாயின் பண்ணனும்”, காம்பஸில் வந்த முதல் வேலையே கிடைத்த பெருமையில் தன் மகளைக் கேட்டாள் அலமு.

“எனக்கு காலேஜ் முடிஞ்சு மார்க் ஷீட்ஸ் வந்தப்புறம் ஒரு மாசம் கழிச்சு சேரணும்மா.  அதுக்கூட உடனே ப்ராஜெக்ட் கிடைக்குமா தெரியாது.  முதல்ல கொஞ்ச நாள் சும்மாதான் போயிட்டு வரணும்ன்னு நினைக்கறேன்.” அன்றைய பூஜைக்கான ஆயத்த வேலைகளைச் செய்தபடியே பதில் கூறினாள் ராதா.

“அப்போ சரி, நீ என்னத்துக்கு வந்ததும் வராததுமா பூஜைக்கு ஆயத்தம் ஆறே.  வந்து டிபன் சாப்பிட்டு கொஞ்சம் டிவி பாரு.  அப்புறம் 6 மணிக்கு மேல விளக்கேத்திட்டு பூஜையை ஆரம்பிக்கலாம். “

“இல்லமா  இன்னைக்கு நான் பாகவதம் முழுக்கப் படிக்கலாம்ன்னு இருக்கேன், அதனால நேரம் எடுக்கும்.   இப்போ ஆரம்பிச்சாதான் ஒரு எட்டு  மணிக்குள்ள முடிப்பேன்.  நீ போய் உன்னோட வேலையை கண்டின்யு பண்ணிக்கோ. “, கருமமே கண்ணாக பதில் சொன்ன மகளைப் பார்த்து ஒன்றும் சொல்ல முடியாமல் தன்னைக் கட்டுப்படுதியிருக்கும் தன் கணவனை ஆயிரமாவது முறையாக மனதிற்குள் திட்டித் தீர்த்தாள் அலமு.

பார்த்தா, ராதாவின்  படிப்பு முடியும் வரை அவளை அவளின் பக்தி மார்கத்தில் இருந்து மாற்றுவதோ, இல்லை படிப்பு முடிந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்வதாக எடுத்திருக்கும் முடிவோ தெரிய வேண்டாம் என்று சொல்லி வைத்திருந்தார்.  அது அவளின் மன நிலையை பாதிக்கும், படிப்பையும் இந்தக் கவலையிலேயே கோட்டை விட்டு விடுவாள் என்று சொல்லி அலமுவை கட்டுப் படுத்தி வைத்திருந்தார்.

“ராதா இங்க வாம்மா உன்னோட கொஞ்சம் பேசணும்”, ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே பேச அமர்ந்தார் பார்த்தா.

“சொல்லுங்கோப்பா, என்ன விஷயம்.”, தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தவாறே கேட்டாள் ராதா.

உள்ளே வேலையாக இருந்த அலமுவும் வந்த அமர, விஷயம் ஏதோ பெரிசு என்று குறுக்கே எதுவும் பேசாமல் அமைதியாக தன் தந்தை பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தாள் ராதா.

“உனக்கு எப்போ வேலைல சேரணும் ராதா”

“இந்த வாரத்துல மார்க் ஷீட் வந்துடும்ப்பா. இன்னும் 2 வாரம் கழிச்சு சேர சொல்லி இருக்கா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.