(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 25 - நவம்பர் நாள்கள் - விசயநரசிம்மன்

This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - தலைப்பு சார்ந்த கதை - காதலியா... மனைவியா...!

எழுத்தாளர் - விசயநரசிம்மன்

Diary

குளிர் விடுமுறையின் (vacation) இரண்டாவது நாள். அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ, என் மனைவி வீட்டில் இல்லை. அம்மா வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். முதல் நாள் முழுக்க தூங்கிக் கழித்தாயிற்று. இன்றாவது உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும். வெளியில் கொட்டிக்கொண்டிருக்கும் மழையும், அது பரப்பும் குளிரும் என்னைக் கொஞ்சம் சோம்பேறி ஆக்குகின்றன.

அதைச் சோம்பேறித்தனம் என்று முழுவதுமாய்ச் சொல்லிவிட முடியாது. எனக்கு மழை பிடிக்கும். அதன் ஓசை அல்லது இரைச்சல், அதனால் பரவி இருக்கும் குளிர், வெளியில் காணும் எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு கழுவி வைத்த பளபளப்பு... ஆனால், மழை நிலத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அடிக்கு மேல்வரை வந்து சட்டென காணாமல் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும் – சாலையில் தேங்கியிருக்கும் குட்டைகளைப் பார்த்தால். வெளியே போய்விட்டு வரும்போதெல்லாம் குளிக்கச் சொல்வாள் என் மனைவி. இல்லாவிட்டால் நான் தீண்டத்தகாதவன் ஆவேன் – அவளையும், வீட்டில் உள்ள மற்ற பொருள்களையும்!

மழையின் இசைப் பின்னணியில், குளிரின் ஸ்பரிச சுகத்தில், மெத்தையில் படுத்துக்கொண்டு சுஜாதாவின் கதையோ வைரமுத்துவின் கவிதையோ படிப்பதைக் காட்டிலும் இன்பம் என்ன இருக்க இயலும்? குடிக்க சூடாக ஒரு தேநீர்? கரும்பு தின்னக் கூலி! சில நேரங்களில் மழையை இரசித்துக் கொண்டே சும்மா இருப்பதும் சுகம்தான். எனவே அதைச் சோம்பேறித்தனம் என்று சொல்லிவிட இயலாது. என்ன, எந்த வேலையும் நடக்காது.

அம்மா வீட்டிற்குப் போனவள் திரும்பி வந்தால் என்னைத் தெருப்பிச்சைக்காரனைப் போல நடத்துவாள். குப்பையிலேயே உழல்பவன் என்பாள். (என்னவளை அன்பில்லாதவள் என்று எண்ணிவிடாதீர்கள், கொஞ்சம் சுத்தக்காரி, அவ்வளவுதான்!)

இன்று வேலை செய்தே விடுவது என்று தீர்மானித்தேன். என்னை மன்னித்துவிடு மழையே!

எங்கிருந்து தொடங்கலாம்? வீட்டில் அதிகக் குப்பையான இடம் எது என்று எங்கள் பக்கத்துவீட்டுக் குழந்தையைக் கேட்டால் கூட யோசிக்காமல் சொல்லிவிடும் – என் புத்தக அலமாரி.

‘இத்தனை புத்தகமா?’ என்று வந்தவர்கள் வியக்கும் போது பெருமையாக இருக்கும் அதே கேள்வி, சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்கும் போது சலிப்பை உண்டாக்கும். பின் வாங்காதே!

ஒவ்வொரு முறையும் அதைச் சுத்தம் செய்வது என்று நான் திட்டம் போடுவேன், கடைசியில் என் மனைவிதான் அதைச் செய்து முடிப்பாள். நூல்களை வகைப்படுத்தி அழகாய் அடுக்கியும் வைப்பாள் (அப்படிச் செய்ய வேண்டும் என்று நான் முன்னரே திட்டம் போட்டுவிட்டேன்!) எடுத்துப் படிக்கப் படிக்கக் கலைந்துவிடும்.

மேல் தட்டில் இருந்து தொடங்கினேன். எல்லா நூல்களையும் எடுத்து தரையில் வைத்துவிட்டு, பின் தட்டைச் சுத்தப்படுத்திவிட்டு, பிறகு நூல்களை ஒவ்வொன்றாய் தூசிதட்டித் துடைத்து அடுக்கிக் கொண்டு வந்தேன். எண்பது முதல் நூறு நூல்கள் இருக்கும். ஆனால், முதல் தட்டை முடிக்கவே மதியம் ஆகிவிட்டது. தூசி தட்டும்பொழுது பல நூல்களைப் புரட்டியும் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அதில் இலயித்துவிட்டால் வேலை நின்றுவிடும். இப்படியே மந்த கதியில், மழையின் சுருதியில் நடந்தது வேலை.

மதிய உணவிற்குப் பின் இரண்டாவது தட்டு. மாலை தேநீருக்குப் பின் மூன்றாவது தட்டு. அதில்தான் சற்றும் எதிர்பாராத அந்த டைரி கிடைத்தது. நான் மறந்தேவிட்டிருந்த எனது இறந்தகாலம். நூல்களோடு நூல்களை இதுவரை ஒளிந்திருந்த அது இன்று என் கண்ணில் பட்டது. அதைப் பிரித்த அந்த நொடி நான் நிகழ்காலத்தை மறந்தேன், சுமார் பத்து ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தேன். என்னோடு வந்தவை அந்த டைரியின் பக்கங்களும், மழையின் பாடலும்தான்.

தன் முதல் பக்கமே எனக்கு அவளை நினைவூட்டியது. என்னைக் கவிஞன் ஆக்கியவள். முதல்முறை பார்த்தபொழுதே மனத்தில் கல்வெட்டு போல பதிந்தவள். சந்தன நிற சுடிதாரில், காற்றில் அலையும் கேசமும், சிறகு போல விரிந்த துப்பட்டாவுமாய்க் கண்டது மலர்ந்தது என் முதல் கவிதையாக,

துப்பட்டா சிறகு விரித்த

உன்னைப் பார்த்து

பட்டாம்பூச்சிகள் பொறாமைப்படலாம்,

தேவதைகள் கூடவா?

அடுத்த சில நாள்களுக்கு என் மனத்தை வியாபித்திருந்தது இந்த வரிகளும் அந்தக் காட்சியும்தான். உள்ளத்தில் ஒரு ரசாயன மாற்றம். அவள் பெயர் தெரிந்துகொள்ள ஒரு பேராவல்.

புவனா.

அத்தனை தித்திப்பாய் எதுவுமே இனித்ததில்லை என் வாயில், அவள் பெயரைப் போல.

நான் படித்தது இயற்பியல். அவள் வேதியியல். அவள் தோழிகளான என் வகுப்பு மாணவிகளைத் தோழிகளாக்கிக் கொண்டேன். அவளுக்கு அறிமுகமானேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.