(Reading time: 21 - 41 minutes)

ந்த வருடமும் தன் மனதின் சொல்படி குறுவை சாகுபடி செய்தவருக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் ஏமாற்றத்தை அளித்தது.  வானத்தை நம்பினார்.  வானம் பொய்த்தது.  கணவனோடு சண்டையிட்டு பிறந்தகம் அடையும் பெண்… எப்படி… உறவினர்களின் ஊர்க்காரரின் உதவியோடும் பஞ்சாயத்தில் சமாதானம் செய்விக்கப்பட்டு கணவனிடம் திரும்புகிறாளோ அது போல எத்தனை தடைகளிருப்பினும் அவையனைத்தையும் கடந்து காவிரி ஓடி வருவாளென்று நம்பினார்.  இம்முறையோ பஞ்சாயத்தின் முடிவுபடி காவிரி தன் வருகையை தவிர்த்து விட்டாள்.  கிணறுதான் இவ்வளவு தூரம் காப்பாற்றியது.  கடைசியில், சில மனித மனங்களை போல் மண்ணின் மனமும் வரண்டதால் கிணற்றில் ஊறும் பயிர்களின் உயிரும் வரண்டது.

முதன்முறையாக சாமிகண்ணுவின் மனதில் தன் முடிவு சரியா? என்ற சலனம் ஏற்பட்டது.  சுற்றுப்புற கிராமங்களில் பல விவசாயிகள் செய்வதறியாது உயிரிழந்தது, அவரின் முடிவின் மீதான நம்பிக்கையை குலைத்தது.  இத்தனை வருடங்களாக தன்னை வாழ வைத்த பயிரின் நிலைமை என்னவாகும் என்றெண்ணி அவர் நிலைக்குலைந்து போனார்.   

எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்த சாமிகண்ணுவின் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்றியது அந்த செய்தி.  சில விவசாயிகள் தண்ணீரை டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து பயிர்களின் உயிரையும் தங்கள் உயிரையும் காப்பாற்றினார்கள் என்பது தான் அது.  இதனை அறிந்த சாமிகண்ணுவின் நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது.  உடனடியாக அது குறித்த விவரங்களை திரட்டியவருக்கு மனவேதனை தான் அதிகரித்தது.  தண்ணீரை டேங்கர் லாரிகளில் அரசியூர் கொண்டு வருவதற்கான செலவு அவரை அச்சுரித்தியது.  நாள் முழுவதும் அதுகுறித்து யோசித்தவர், ‘என்ன நடந்தாலும் பயிர்களை காப்பாற்றியாக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தவர் பணத்திற்காக தஞ்சையின் ஒரு கூட்டுறவு வங்கியை நாடினார்.  வங்கியில் கடன் பெறுவதற்கான எல்லா சம்பிரதாயங்களையும் கடந்த வாரம் முடித்திருந்தார் சாமிகண்ணு. 

இன்று, வங்கியில் கடன் குறித்த இறுதி முடிவு தெரிவிக்கபடுவதனால் தஞ்சை போக தயாரானவரை மனைவியின் வார்த்தை சிறிது நேரம் நிறுத்தியிருந்தது.

முருகாயி சாமி படத்திற்கு சூடத்தை காண்பித்தபடி கடவுளிடம் பேசினாள்.  ‘ஆத்தா மாரியாத்தா! இன்னைக்காவது உம்மேல நா வச்ச நம்பிக்கைய காப்பாத்திக்க… எஞ்சாமி வெவசாய விசயமா எது சொன்னாலும் அது நடந்திருக்கு.. எப்பவும் நடக்கும்னு நா நம்புறேன்.. இது மட்டும் பொய்யா போச்சு என் உசுரும் போச்சு..’ என்று ஆவேசமானாள்.

சிறிது விபூதியை கணவனுக்கு பூசியவள், “போற காரியத்தை அந்த மாரியாத்தா பார்த்துகிடுவா… எஞ்சாமி நீங்க நெனச்சது நெசமாவும்… போயிட்டு நல்ல சேதியோட வாங்க சாமி..” ஆவேசம் சற்றும் குறையாமல் வழியனுப்பி வைத்தாள் முருகாயி.

மனைவியின் வார்த்தை அவருக்கு தெம்பளிக்க, கம்பீரம் குறையாத நடையோடு கிளம்பினார்.

அந்த ஊரின் பெரிய ஆலமரமும் பஞ்சாயத்து கல்லும் பலருக்கு நியாயம் வழங்கியதோடல்லாமல் மற்ற நேரங்களில் மக்கள் கூடும் பொது மன்றமாகவும் பேருந்து நிறுத்தமாகவும் விளங்கியது.  

அதுவரை அவ்விடத்திலிருந்த சலசலப்பை சாமிகண்ணுவின் வருகை குறைத்தது.  மரியாதை நிமித்தமாக எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லி அந்த கல்லின் ஒரு ஓரத்தில் சென்று நின்றுகொண்டனர்.

“நீங்க எதுக்குப்பா நின்னுக்கிட்டு! சும்மா உக்காருங்க… பஸ்ஸு வந்தா நான் போக போறேன்”

இதுதான் சாமிகண்ணு! அவருக்காக யாரும் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது.  மரியாதை நிமித்தமாக அவர்கள் எழுந்து நிற்பதை அறிந்திருந்தாலும் தன்னால் அவர்களின் இயல்பான பேச்சும் சிரிப்பும் மாறுவதை அவர் விரும்பவில்லை.

“பரவாயில்லைங்கய்யா!” அந்த கூட்டத்திலிருந்த ஒருவன் பணிவானக் குரலில் சொன்னான். 

“நீங்க உக்காருங்கய்யா! செல சமய இந்த பஸ்ஸு சரியான நேரத்துக்கு வராது” என்றான் இன்னொருவன்.

மலர்ந்த முகத்தோடு, “நா சொன்னா கேப்பீங்களா? என்னோட நீங்களும் உக்காரனும்.. என்ன சரியா?”

“உங்க பேச்சுக்கு மறுப்பேதய்யா?! இப்ப நீங்க உக்காருங்க… பஸ்ஸு வந்ததும் நாங்களும் உக்காந்துட்டா போச்சு” என்று ஒருவன் சொல்லவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கிய நடத்துனர், “வாங்கய்யா!” என்று வரவேற்றார்.

“யாரு? சொரிமுத்து பையனா! எப்படியிருக்க? நம்ம ஊரு பஸ்ஸுக்கே மாத்திட்டாங்களா?” பேருந்தினுள் ஏறி அமர்ந்தார் சாமிகண்ணு.

“ஆமாங்கய்யா! இப்போ தான் ஒரு வாரத்துக்கு முன்னால மாத்தினாங்க”

“நம்ம ஊருக்காரங்க நல்ல பொழப்பு பொழச்சா சரிதே”

“தஞ்சாவூருக்கு ஒரு டிக்கெட்டு குடுப்பா” பணத்தை நீட்டினார் சாமிகண்ணு.

“பணத்தை பையில வைங்கய்யா… டிக்கெட்டை புடிங்க”

நீட்டிய கையை மடக்காமல், “பாசம் வேற… தொழில் வேற… இது உன்னோட தொழில். பணத்தை வாங்கிட்டு டிக்கெட்டை குடு”

“இல்லைங்கய்யா….” நடத்துனர் ஏதோ சொல்லவும் இடைபுகுந்தார் சாமிகண்ணு

“இதை வாங்கிட்டு டிக்கெட்டை குடு இல்லைனா வண்டிய நிறுத்துப்பா… நா இறங்கிக்குறே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.