(Reading time: 21 - 41 minutes)

ன்னது மரியாதயா? அதும் உனக்கு போயி மரியாத கேக்குதா? கேவல வயகாட்டு சேத்துல வேல செய்யுற நீயெல்லா பேசுற” ஏளன சிரிப்பும் அசட்டையான வார்த்தைகளும் வேலென பாய்ந்தன சாமிகண்ணுவின் மனதில்.

“விவசாயன்னா அவ்வளவு கேவலமாயிருக்கா உனக்கு? நாங்க சேத்துல எறங்கலனா உங்களுக்கெல்லா சோறு கெடயாது.  என்னவோ ஒஞ்சொத்த கேட்ட மாறி பேசுற” கோபத்தில் கண்கள் சிவக்க கொதித்தெழுந்த சாமிகண்ணு உரக்க பேசிவிட்டிருந்தார்.

வங்கியிலிருந்தோர் பார்வை இவர்களை மொய்த்தன. 

‘ஒரு கிழவன், பேங்க்ல வேலை செய்ற என்னை அவமான படுத்திட்டானே? இவனை சும்மா விட்டா இருக்கிறவனுக்கெல்லா எம்மேல எளக்காரமா போகும்’ என்றெண்ணியவன் “யாருகிட்ட கொரல ஒசத்துற?” இருக்கையிலிருந்து எழுந்து சாமிகண்ணுவை அறைந்திருந்தான்.

வயதில் சிறியவன் இத்தனை பேர் மத்தியில் தன்னை அறைந்ததால் அவமானத்தில் கூனி குறுகி போனார் சாமிகண்ணு.

சாமிகண்ணுவை போலவே விவசாய கடனுக்காக காத்திருந்த சிலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

சாமிகண்ணுவின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததை தனக்கு சாதகமாக்கி கொண்ட அந்த அதிகாரி, “உனக்கு கடன் குடுக்க முடியாது” திமிராக சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  

“என்னய்யா இது அநியாயமா இருக்கு? அவரை அடிச்சதுமில்லாம கடன் குடுக்க முடியாதுன்னு வேற சொல்லுற?”  கூட்டத்தில் ஒருவர் மனம் பொறுக்காமல் கேட்டு விட்டார்.

எல்லோரும் அவரை ஆமோதித்தனர்.  “சரிதானே! இது எப்படி நியாயமாகும்?”

‘இவர்கள் ஒன்று கூடி போராட்டம்னு போயிட்டா மேனேஜர் வரை சேதி போயிடுமே… அப்புறம் என் பாடு தான் திண்டாட்டம்’ “நீங்க கேட்ட கடனையா குடுக்க முடியாதுன்னு சொன்ன… அந்த ஆளுக்கு பரிஞ்சு பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு அதே முடிவுதான்”

அவனின் எச்சரிக்கையில் சாமிகண்ணுவின் உதவிக்கு வந்தவரெல்லாம் கல் விழுந்த காக்கை கூட்டம் போல் கலைந்தனர்.  அவர்கள் சாமிகண்ணுவிற்காக பரிதாபப் பட்டனரே தவிர தங்களின் நிலையை எண்ணி அமைதியாயினர்.

அதிர்ச்சியில் அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்த சாமிகண்ணுவை விரட்டினான் அந்த அதிகாரி.

“உனக்கு ஒரு முறை சொன்னா போதாதா?” ஏளனமாக கேட்டுவிட்டு வாயில் காவலனிடம் அவரை வெளியே அழைத்து செல்லும்படி கட்டளையிட்டான்.

அப்போதும் நடந்தவைகளை ஜீரணிக்க முடியாது அசையாமல் நின்றிருந்த சாமிகண்ணுவிடம் வந்தான் காவலாளி.

“வாங்க பெரியவரே… இங்கேயே நின்னுக்கிட்டிருந்தா எல்லா சரியாயிருமா? உங்க கஷ்டம் எனக்கு புரியாமலில்ல… ஆனா என்னால எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லியபடி அவரை வங்கியின் வெளியே கொண்டு விட்டிருந்தான்.

“நடந்ததையே நெனச்சு மனச கொழப்பிக்காம வீட்டுக்கு போங்கய்யா… உங்க மகன் சொன்னா கேக்க மாட்டீங்களா? என்னை உங்க மகனா நெனச்சுக்கங்க… வீட்டுக்கு போங்கய்யா”

அங்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து காவலாளி சொன்ன உங்க மகன் மட்டும் அவர் செவிகளில் ரீங்காரமிட்டது.

‘என்னோட மகன் துரைப்பாண்டி உயிரோட இருந்திருந்தா எனக்கு இந்த நெலம வந்திருக்குமா? வள்ளி பொண்னை பெத்து போட்டுட்டு வீட்டுக்கு வந்த மவராசி போயிட்டா… அவ நெனப்புலயே இருந்தவன் வள்ளிக்கு ஒரு வயசிருக்கும் போதே போயி சேர்ந்துட்டான்.  வள்ளியை வளத்த சொம இது வரைக்கும் தெரியலடா பாண்டி… ஆனா புள்ளதாச்சியா இருக்கறவ பிரசவத்த பாத்து சீர்வரிசை குடுத்து அவளோட புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க இன்னைக்கு சக்தியில்லாம போச்சுடா… உங்கப்பனுக்கு சக்தியில்லாம போச்சுடா பாண்டி’ மறைந்து போன மகனிடம் மானசீகமாக புலம்பினார். 

‘ஆத்தா மாரி! பெத்த புள்ளயதா நீ எடுத்துக்கிட்ட… உயிருக்கு உயிரா வளத்த நா பெறாத புள்ளங்களுமா உனக்கு வேணு? என்னை பெத்த நெலத்த உழுது; உனக்கு நேந்துக்கிட்டு வெத வெதச்சு; கிணத்துலுந்து தண்ணியையு எம்மனசுலுந்து பாசத்தையு ஊத்தி வளத்தேனே; அப்படி பாத்து பாத்து வளத்த நா பெறாத மக்கள பறிக்க பாக்குறீயே? இது சரிதானா? இது உனக்கு தகாதடி ஆத்தா!’

மனதிலெழுந்த வலியின் அலைகள் சாமிகண்ணுவின் கண்களில் கண்ணீராய் கரைபுரண்டன.  இலக்கேயில்லாத தளர்ந்த நடையோடு கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தார்.  அவரின் கம்பீரமும், நிமிர்ந்த நடையும், தன்னம்பிக்கையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.