(Reading time: 24 - 48 minutes)

பார்கவி! அந்த பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அபிமான மாணவி. அதிகம் பேசும் ரகம் இல்லை! பேசத் தெரியாதவளும் இல்லை! வயதிற்கு மீறிய சிந்தனை ! அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அளந்து பேசுவாள். புத்தகங்கள், ஆசிரியர்கள் இரண்டிற்கும் அடுத்தபடியாகத்தான் அவளுக்கு நண்பர்கள்! கண்ணில் ஏதேனும் தவறாய் பட்டுவிட்டால் , நல்ல நட்பு பறி போய்விடுமோ என்று பயப்படாமல் உடனே ஆசிரியர்களிடம் சொல்லிவிடுவாள். இதனால் சிலருக்கு அவளை பிடிக்கும் , பலருக்கு பிடிக்காது.

பார்கவியைப் பார்த்ததுமே புன்னகைத்த ரேணுகா ஆசிரியை, “ ரவீன் நீ பார்கவி பக்கத்துல உட்காரு”என்றார். அவர் அப்படி சொன்னதுமே சதிஷ் “ஐயோ” என்று அலற, ரவீனோ கூலாய் புன்னகைத்தான். அவனைப் பார்த்த பார்கவியோ,

“அய்யய்யோ இவனா? பேசிக்கிட்டே இருப்பானே! நான் புக் படிக்கும்போது டிஸ்டர்ப் பண்ணுவானோ ? சீக்கிரம் இவனை இங்கிருந்து அனுப்பனும்..” என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

தன் புது இடத்தில் அமர்ந்து சுற்றி பார்த்தான் ரவீன். தனக்கு எதிரில் இரு மாணவிகள், பின்னால் இரு மாணவிகள், பக்கத்தில் பார்கவி! இப்படி பெண்களில் மத்தியில் கோகுல கண்ணனாக அமர்ந்திருக்கும் கவலை கொஞ்சமும் இல்லாமல்,

“ ஹாய்” என்று சிரித்து பார்கவியிடம் கை நீட்டினான்.

“ இப்போதானே டீச்சர் உன்னை இடம் மாத்துனாங்க? மறுபடியும் கதை பேசுறியா? டீச்சர்கிட்ட சொல்லவா?” என்று பார்கவி மிரட்டவும், கப்சிப் என்றாகிவிட்டான் ரவீன்.

“பார்கவி, ரவீனும் இனி உன்னை மாதிரி பொறுப்பா இருக்கணும் பார்த்துக்கோ!” என்று அந்த ஆசிரியை கூறவும், அவளுக்கு ஏதோ மகுடம் சூட்டிவிட்டது போல இருந்தது. “இனி நீ என் பொறுப்பு ரவீன்” என்று பார்கவி கூறவும் அதே அக்மார்க் சிரிப்புடன் இருந்தான் ரவீன். அவள் அவனை மாற்ற நினைத்தாள், அவன் அவளை மாற்றிட நினைத்தான். ஆனால் காலம் இருவரையுமே மாற்றி இருந்தது.

வீன் தன்னருகில் அமர்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மூன்றாம் நாள் கொஞ்சம் லேட்டாக வகுப்புக்கு வந்தான் அவன்.

“ ஏன் லேட்டு ?” என்று பார்கவி அதிகாரமாய் கேட்கவும், சலிப்புடன்

“ லேட்டாச்சு!” என்று கூறினான் ரவீன்.

“ மேத்ஸ் குவிஸ் வைக்க போறாங்க.. உன் மேத்ஸ் புக் எடு சீக்கிரம்” என்று கூறிய பார்கவி, அவனுக்கு பென்சில் , ரப்பர் அனைத்தும் தயாராய் எடுத்து வைத்தாள். அவர்களது கணித ஆசிரியை நிர்மலா எப்போதுமே குறுகிய நேரத்தில் நிறைய கேள்விகளை கேட்டு அனைவரையும் திணற வைப்பார்.

அவரது வேகத்திற்கு கொஞ்சமும் தயங்காமல் எல்லா கேள்விக்கும் சரியாய் பதில் சொல்லி விடுவர் ரவீனும் சதிஷும். அன்றும் அப்படித்தான் ! ரவீனின் மதிப்பெண்ணை பார்த்து அசந்து போனாள் பார்கவி.

“ எப்படி ரவீன் ?”

“என்ன?”

“ நீ வந்ததே லேட்.. ஆனா எல்லாமே ரைட்டா சொல்லுற? எனக்கு மேத்ஸ் வருது.. எக்சாமெல்லாம் சூப்பரா பண்ணுறேன்.. ஆனா இந்த குவிஸ்ல மட்டும் ஃபுல் மார்க்ஸ் எடுக்க முடியல.. பாதியில கொஞ்சம் டென்ஷன் ஆகிடுது.. டீச்சர் ரொம்ப வேகமா கேள்வி கேட்கவும் பதில் எழுத முடியல!” என்று அவள் கூறவும் பெரிதாய் புன்னகைத்தான் ரவீன்.

“ நீ எப்படி அன்ஸ்சர் பண்ணுறன்னு நான்தான் பார்க்குறேனே! டீச்சர் மூஞ்சிய பார்த்து, இங்க பார்த்து அங்க பார்த்து யோசிச்சா, டைம் கண்டிப்பா வேஸ்ட் ஆகும்.. நான் குவிஸ் முடியுற வரை புக்கை மட்டும்தான் பார்ப்பேன்.. காது மட்டும்தான் டீச்சர் சொல்லுறதை கேட்கும்..” என்று ரவீன் கூறவும் புன்னகைத்தாள் பார்கவி. “சரி அடுத்த க்லாஸ்கு புக் எடுத்து வை!” என்றவள் பென்சிலை அவனது பென்சில் பாக்சில் வைக்கும்போது அதில் இருந்த படத்தை பார்த்தாள்.

“ இவரு யாரு ரவீன்?”

“ இவர் என் அப்பா.. என் அப்பா செத்து போயிட்டாரு!” என்றான் ரவீன். அவன் இயல்பாய் சொல்ல முயன்றாலும் குரல் கமறியது.

“ ஓ.. உனக்கும் அப்பா இல்லையா?” என்று கேட்டவளின் குரலிலும் சோகம் பரவியது. ஏனோ அவனுக்கும் தன்னைப்போல் தந்தை இல்லை என்று தெரிந்ததும் என்னவோ போலாகிவிட்டது பார்கவிக்கு. தந்தை இல்லாத வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பது அவளுக்கு நன்கு தெரியுமே! தந்தை என்ற பெரும் ஷக்தியை இழந்த பலகீனத்தை மறைக்கத்தானே இறுக்கமான முகமும், புத்தகங்களுமாய் இருக்கிறாள் அவள்? ஆனால் ரவீன், அதே நிலையில் இருந்தும் புன்னகை மாறாமல் அல்லவா இருக்கிறான்? அவனோடு உருவாகியிருந்த நட்பு இன்னும் வலுவானது போல அவளுக்கு தோன்றியது.

“சரி ரவீன், அப்பா ஃபோட்டோவை பென்சில் கேஸ்ல வைச்சா, அழுக்காகிடும்ல ? கொடு என் கிட்ட” என்ற பார்கவி, அவனுடைய புத்தகப்பையில் ஒரு சின்ன இடத்தில் ஃபோட்டவை வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.